World

வெனிசுவேலா | அமெரிக்க ஊடுருவல் முறியடிப்பு

ஞாயிறு அதிகாலை (மே 03) மேற்கொள்ளப்பட்ட அமெரிக்கப் படையெடுப்பு ஒன்றை வெனிசுவேலா வெற்றிகரமாக முறியடித்திருக்கிறது. அமெரிக்காவிற்கும் இப் படையெடுப்பிற்கும் சம்பந்தமில்லை என ஜனாதிபதி ட்றம்ப் கூறியிருந்தாலும், இப் படையெடுப்பில் கலந்துகொண்டவர்களில் சிலர் முன்னாள் அமெரிக்க இராணுவத்தினர் என்பது நிருஇக்கப்பட்டுவிட்டது.

ஞாயிறு அதிகாலை கொலம்பியாவின் கரையிலிருந்து சில விசைப்படகுகள் புறப்பட்டன. அவற்றில் பெருமளவு ஆயுதங்கள், வெடி மருந்துகள், சட்டலைட் போன்கள் என்று ஒரு படையெடுப்புக்கான பொருட்கள் இருந்தன. சீருடைகளில் அமெரிக்க கொடி பொறிக்கப்பட்டிருந்தது.

வெனிசுவேலா கடல் எல்லையைத் தாண்டியதும் வெனிசுவேலாவின் பாதுகாப்புப் படைகள் இப் படகுகளை இடைமறித்தன. போர் மூண்டதில் படையெடுப்பாளர்களில் 8 பேர் கொல்லப்பட்டனர், இருவர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் அமெரிக்க போதை வஸ்து தடுப்பு பிரிவில் பணிபுரிபவர்.

படையெடுப்பு முறியடிக்கப்பட்டுச் சில மணி நேரங்களில் வெனிசுவேலாவின் உள்ளக அமைச்சர் நெஸ்ரொர் றெவெறொல் ஊடகங்களுக்குத் தெரிவித்ததன்படி, படையெடுப்பாளரின் நடவடிக்கைகள் பற்றிக் கொலம்பியாவிலிருந்து தங்கள் ‘தொடர்புகள்’ மூலம் தகவல்கள் ஏற்கெனவே கிடைத்திருந்தது என அறியப்படுகிறது.

லீமா குழுமமும் ஆட்சி மாற்றமும்

பொலிவாறியன் புரட்சியினால் உருவான வெனிசுவேலா இடதுசாரி ஆட்சியாக இருப்பதும், கியூபா, ரஸ்யா, சீனா போன்ற நாடுகளுடன் அது நெருக்கமாக இருப்பதும் அமெரிக்கா, கனடா போன்ர நாடுகளுக்கு எரிச்சலாக இருப்பது உண்மை. மறைந்த முன்னள் தலைவர் சாவேஸ் காலத்தில் எண்ணை ஏற்றுமதி காரணமாக வெனிசுவேலா பல முன்னேற்றங்களைக் கண்டுவந்தது. அப்போதிருந்தே ஆட்சியைக் கவிழ்க்க அமெரிக்காவும் அதன் நேசநாடுகளும் முயற்சிகளை எடுத்துவருகின்றன. 2017 இல் அமெரிக்க ஜனாதிபதி ட்றம்ப், வெனிசுவேலா மீது இராணுவ நடவடிக்கை எடுக்கப்போவதாக மிரட்டியிருந்தார். வெனிசுவேலாவைச் சூழவுள்ள வலதுசாரி ஆட்சியுள்ள நாடுகள் (கொலம்பியா), அமெரிக்கா, கனடா ஆகியந ஒன்று சேர்ந்து வெநிசுவேலாவுக்கு எதிராக ‘லிமா குரூப்’ என்றொரு அமைப்பை உருவாக்கியுல்ளன. வெனிசுவேலா மீது இந் நாடுகள் பொருளாதாரத்தடையை மேற்கொண்டது மட்டுமல்லாது, அதன் ஆட்சியைக் கலைத்து தமது அடிவருடியை ஆட்சியில் அமர்த்தப் பல தடவைகள் முயற்சி செய்துள்ளன. வெனிசுவேலாவில் ‘ஜனநாயகத்தை’ மீள் நிர்மாணிக்கத் தாம் முயல்வதாக ‘லீமா குரூப்’ சொல்லி வருகிறது.

ஜனவரி 2019 இல் பிரபலமற்ற வெனிசுவேலாவின் அரசியல்வாதியான ஹுவான் குவைய்டோவைப் ‘புதிய’ ஜனாதிபதியெனப் பிரகடனம் செய்து, அமெரிக்காவின் தலைமையின் கீழ் இயங்கும் ‘லீமா’ குரூப் வெளிநாடுகளில் தடுத்து வைக்கப்பட்ட வெனிசுவேலாவின் சொத்துக்களை அவருக்குக் கையளித்து ஆட்சி மாற்றம் நடைபெற்றுவிட்டதாக அறிவித்தனர். ஆனால் வெனிசுவேலன் மக்களிடம் அது எடுபடாமல் பிசு பிசுத்துப் போய்விட்டது. மக்கள் அதன் அதிபர் நிகொலாஸ் மடுரோவையே ஆதரித்தனர்.

மே 2019 இல், அமெரிக்க குடியரசுக்கட்சி செனட்டரான லின்ட்சி கிரகாம், 1983 இல் கிரெனாடா மீது படையெடுப்புச் செய்ததுபோல் வெனிசுவேலாவிலும் செய்து நாட்டைக் கைப்பற்றி ஆட்சி மாற்றத்தை உருவாக்கவேண்டுமென முழங்கியிருந்தார். அப்படியான ஒரு படையெடுப்புக்கு பிரேசில் (லிமா குரூப்) தனது தரைப்பிரதேசத்தைப் பாவிக்க உடன்படாது எனத் தெரிவிக்கப்பட்டவுடன் அம் முயற்சி கைவிடப்பட்டது.கோவிட்-19 ஐப் பாவித்து ஆட்சி மாற்றம்

கோவிட்-19 தென்னமெரிக்காவை வலம் வந்துகொண்டிருக்கும் வேளையைப் பாவித்து மீண்டுமொரு ஆட்சி மாற்ற முயற்சியில் அமெரிக்கா இறங்கியது. பெப்ரவரி 2020 இல் அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் இதை மியூனிச்சில் நடைபெற்ற பாதுகாப்பு மாநாட்டில் தமது உத்தேசத்தைப் பகிரங்கமாக அறிவித்திருந்தார். மார்ச் 2020 இல் பொருளாதாரத் தடை மேலும் உக்கிரப்படுத்தப்பட்டது. கோவிட்- 19 இனால் துயருறும் மக்களும், நாட்டின் பொருளாதாரமும் ஆட்சிக்கு அழுத்தம் தருமென அமெரிக்கா எதிர்பார்த்திருக்கலாம். இந்த நேரத்தில் கைகொடுத்த சீனா, கியூபா, ரஸ்யா மற்றும் உலக சுகாதார நிறுவனம் ஆகியன கொடுத்த ஆதரவால் எதிர்பார்த்த மக்கள் ‘எழுச்சி’ அங்கு நடைபெறவில்லை.

பல தடவைகள் அடி வாங்கி நசுங்கிப்போய் மீண்டும் வரும் வால்ட் டிஸ்னியின் கறுப்புப் பூனை போல் (Tom cat) அமெரிக்கா மீண்டுமெழுந்து புதிய உத்தியோடு வந்தது. வெனிசுவேலாவின் அதிபர் மடுரோவும் அவரது மூத்த அதிகாரிகளும் போதை வஸ்துக் கடத்துவதில் சம்பந்தப்பட்டவர்கள் எனக்கூறி அவர்கள் மீது மக்களைத் தூண்டி விட முயற்சித்தது. ட்றம்ப் தனது கடற்படையைக் கொலம்பியாவின் கடற்கரையில் காவல் வைத்தார். கொலம்பியாவின் வலதுசாரிகள் சிலர் இதற்குத் துணை போயினர்.

கனடியத் தொடர்பு

இந்த வாரம் நடைபெற்ற படையெடுப்பு முயற்சியில் முன்னாள் கனடியரும், தற்போது அமெரிக்கக்குடியுரிமையைப் பெற்றுள்ளவருமான ஜோர்டான் கூட்றூ என்பவர் பிரதான பங்கு வகித்ததாக அறியப்படுகிரது. கனடிய இராணுவத்தில் பணிபுரிந்து ஒய்வு பெற்ற இவர் தற்போது ஃபுளோறிடாவில் ‘சில்வர்கோர்ப் யூ.எஸ்.ஏ’ என்றொரு தனியார் பாதுகாப்பு நிறுவனமொன்றை நடத்துகிறார். ஞாயிறன்று முயற்சிக்கப்பட்ட சதி முயற்சியில் தனக்கும் பங்கிருப்பதாக அவர் ருவீட் செய்திருக்கிறார். இப்படையெடுப்பில் ‘அமெரிக்க நிர்வாகத்துக்குச்’ சம்பந்தமில்லை ‘இது தனியார் முயற்சி’ எனக் காட்டுவதற்காக இப்படியொரு நாடகமும் ஆடப்படலாம்.

இந்தத் தடவையும் ‘ஜெரி’ வெற்றி பெற்றுவிட்டது. ‘ரொம்’ சுவருக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு அடுத்த தடவையும் எப்படி அடிவாங்குவதற்குத் தயாரகிக்கொண்டிருக்கலாம்.