ColumnsTamil History

வீ.ஆனந்தசங்கரி – 90: நமது அரசியல் வரலாற்றின் சாட்சியம்!

மாலி

[இக் கட்டுரை மாலி என்றழைக்கப்படும் சுப்ரமணியம் மகாலிங்கசிவம் அவர்களால் எழுதப்பட்ட அவரது முகநூல் பதிவின் மீள் பிரசுரம். வரலாற்று ஆவணப்படுத்தல் காரணமாக அவரின் அனுமதியின்றி பிரசுரமாகிறது. அவருக்கு முற்கூட்டிய எமது நன்றி]

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி 90 வயதை எய்துகிறார். இலங்கையில் தமிழர்களுடைய அரசியல் உரிமைப் பிரச்னையை இலங்கையின் சுதந்திரத்திலிருந்து பார்த்தால், சுதந்திரத்தின் 75 ஆண்டுகளில், தலைவர் இரா. சம்பந்தன், ‘தொடர்ந்தும் எம்மை ஏமாற்ற முடியாது!’ என்று, கடந்தவாரம் ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்கவைச் சந்தித்து கூறியமை தலைப்புச் செய்தியாகியிருக்கிறது.

இரா. சம்பந்தனும் 90 வயதானவர். ஆனந்தசங்கரியைவிட நான்கு மாதங்கள் மூப்பானவர். அரசியல் வாழ்விலும் இருவருமே சம வயதுடையவர்கள். சம்பந்தன் 1956இல் இலங்கை தமிழ் அரசுக் கட்சியில் சேர்ந்தார். ஆனந்தசங்கரி 1955இல் இலங்கை சமசமாஜ கட்சியில் இணைந்தார்.

முற்போக்கான அரசியல் சிந்தைகொண்ட பலரின் அரசியல் தொடக்கம் அப்போது சமசமாஜ கட்சி சார்ந்திருந்தது. ஆனால், இடதுசாரிக் கட்சிகளின் கொள்கைகளில் இன உரிமை தொடர்பில் பின்னர் ஏற்பட்ட மாற்றம், அரசியலில் ஈடுபடத் தலைப்பட்டவர்கள் அக் கட்சிகளிலிருந்து விலகி, வேறு கட்சிகளில் இணைய நிர்ப்பந்தித்தது. 1959 கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் மேயர் வி. ஏ. சுகததாசவுடன் கொட்டாஞ்சேனையிலும், பின்னர் பாராளுமன்ற தேர்தலில் கிளிநொச்சி தொகுதியில் 1960, 1965 nத்ர்தல்களிலும் சமசமாஜ கட்சி வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியுற்ற ஆனந்தசங்கரி, 1966இல் கரைச்சி கிராமசபைத் தலைவராகவிருந்தபோது சமசமாஜ கட்சியிலிருந்து விலகி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸில் இணைந்தார். கரைச்சி கிராமசபை தரமுயர்த்தப்பட்டபோது கிளிநொச்சி நகர சபையின் முதல் தலைவரான ஆனந்தசங்கரி, கிளிநொச்சி நகரின் பிதாமகர் என்ற ஸ்தானத்தைப் பெறுபவர்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் வாலிப முன்னணி தலைவராகவிருந்தபோது 1970 பொதுத் தேர்தலில் முதன்முதலாக பாராளுமன்றத்துக்கு ஆனந்தசங்கரி கிளிநொச்சி தொகுதியிலிருந்து தெரிவானார். பொதுவாக, தேர்தலில் வெற்றிகளே அரசியலில் உந்துதலையும் எழுச்சியையும் ஏற்படுத்துகின்றபோது, இலங்கைத் தமிழர் அரசியலில் இத் தேர்தலில் ஏற்பட்ட இரண்டு தோல்விகள் இலங்கைத் தமிழ் மக்களுடைய அரசியலில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தின. தமிழ் அரசுக் கட்சியின் தளபதியான அ. அமிர்தலிங்கமும் தமிழ் காங்கிரஸ் கட்சியின் தளபதியான மு. சிவசிதம்பரமும் இத் தேர்தலில் தோற்றார்கள். தேர்தலில், லங்கா சமசமாஜ கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுடன் இணைந்து மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்த சிறிலங்கா சுதந்திர கட்சித் தலைவி சிறிமாவோ பண்டாரநாயக்க 1972இல் கொணர்ந்த புதிய குடியரசு அரசியலமைப்பு, இரண்டு தளபதிகளையும் ஓரணியில் சேர்த்தது. அது, தமிழர் அரசியலில் மிகத் துல்லியமாக வெளிப்பட்ட ஒரு பராக்கிரம பலத்தைச் சேர்த்தது.

எதிரும் புதிருமாக, பரம வைரிகளாகவிருந்த தமிழ் அரசு, தமிழ் காங்கிரஸ் கட்சிகள் தமிழர் கூட்டணியாக இணைந்தமை, இவ் வேளையில் இன்னொரு வரலாற்றுக் காலத்துக்கு கால்கோளாய் அமைந்தது. சிறுபான்மை இனங்களுக்கு சோல்பரி அரசியலமைப்பிலிருந்த சில பாதுகாப்புகளையும் பறித்து அமைந்த புதிய அரசியலமைப்பு ஓர் அரசியல் விழிப்புணர்வை தமிழர் மத்தியில் ஏற்படுத்தியேயிருக்குமென்றாலும், பொதுவாக நினைக்க முடியாததாகவிருந்த ஓர் இன ஐக்கியம் இவ் வேளையில் இவ்விரு கட்சிகளிடையேயும் ஏற்பட்டு, மற்றும் கட்சிகளும் அதில் இணையும் ஒரு பொற் காலத்தைச் சமைத்தது, அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் ஆகிய இருவரும் அத் தேர்தலில் தோற்றதன் விளைவுதான் என்பது, அரசியல் நோக்கில் ஏற்றுக்கொள்ளக்கூடியதே.

அடுத்துவந்த 1977 பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியாக ஈட்டிய வெற்றி, இந்த ஒற்றுமைத் திருப்பத்தின் தாத்பரியத்தை உணர்த்துவதை, அதன் பின்னரான அரசியல் வரலாறு உணர்த்தும். இரா. சம்பந்தன் இந்த தேர்தலில்தான் பாராளுமன்றம் வந்தார். திருகோணமலையில் அவரை வேட்பாளராக்குவதில் அமிர்தலிங்கம் காண்பித்த சறுசங்கமான முனைப்பை, சம்பந்தன் பாராளுமன்றத்தில் பின்னர் புரியவைத்தார். தமிழர் விடுதலைக் கூட்டணி எம். பி. யாக ஆனந்தசங்கரியும் அத் தேர்தலில் தெரிவாகியிருந்தார்.

‘இப்படை தோற்கின் எப்படை வெல்லும்’ என்பது அரசியலில் பின்னர் எப்படிப் போயிற்றோ ஆனால், அந்த தகர்க்கவியலாத ‘அமிர் – சிவா’ ஒற்றுமை, நம் இனம் கண்ட ஒரு பெரு வெற்றி. அந்த வெற்றியின் மகோன்னதத்தை மறந்ததும் மதிக்காததுமே சுதந்திரத்தின் 75 ஆண்டுகள் காலத்திலும் நாம் கேட்கும் ‘தொடர்ந்தும் எம்மை ஏமாற்ற முடியாது’ என்ற குரல்.

சம்பந்தன் – சங்கரி காலமாக தொடர்ந்த பின்னைய அரசியலில், அந்த தலைவர்களின் மேன்மை மதிக்கப்பட்டிருந்தால், பின்னைய அரசியல் போக்கு சிலசமயங்களில் மாறுதலாக இருந்திருக்கும். விக்கினேஸ்வரன் அல்லாமல், ஆனந்தசங்கரி வடமாகாண சபையின் முதல்வராகியிருக்க முடியும்.

ஆனால், ஆனந்தசங்கரி திட்டமிடப்பட்ட விதத்தில் அரசியலில் வஞ்சிக்கப்பட்டார் என்பது மறைத்துவிட இயலாத உண்மை. அரசியலில் அவருடைய நேர்மையிலும் – ஒளிவு மறைவற்ற கருத்துக்களிலும் – கட்சியிலும் பொதுமக்கள் மத்தியிலும் அவர் வஞ்சிக்கப்பட்டார். வஞ்சிக்கப்பட்ட அவர், பிற்காலத்தில் தன்னை நிலைநிறுத்துவதில் மேற்கொண்ட முயற்சிகள், அவரைப் பலவீனமடையச் செய்தன.

ஆனால் சங்கரி, ‘அமிர் – சிவா அடிச்சுவட்டில்’ பயணிக்கும் அரசியல் தலைவர். நீண்ட அரசியல் அநுபவத்தில், நம்முடைய அரசியல் வரலாற்றின் அசலான சாட்சியம் அவர். அமிர்தலிங்கம் தன்னுடைய சரிதையை எழுதியிருந்தால், அது நமது வரலாறாகியிருக்கும். இப்போது, அப்படியொரு வரலாற்றை எழுதவல்லவர் ஆனந்தசங்கரி.

வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் வரலாற்று முக்கியத்துவத்துடனான தமிழர் விடுதலைக் கூட்டணி, இனிவரும் நாள்களிலாவது அதன் ஐக்கியத்தில், அதன் இலட்சியத்தை வெல்லவேண்டும். இதுவும், தலைவர் ஆனந்தசங்கரியின் பிறந்தநாள் வாழ்த்துக்களில் ஒன்றாகட்டும்.

– மாலி