ArticlesColumnsசிவதாசன்

வீழ்க தமிழினம்!

சிவதாசன்

தலைப்பே அபசகுனத்தோடு ஆரம்பிக்கிறது என சன்னதம் கொள்ள ஆரம்பித்து விடாதீர்கள். போர்க் குணம் கொண்ட தமிழர்கள் நாங்கள் என்று ஒரு முகநூல் சுவரில் வாசித்ததன் பாதிப்பு அது.  

சென்ற ஞாயிறு நமது வடக்கு இசுக்காபரோ தொகுதியில் நடைபெற்று முடிந்த லிபரல் வேட்பாளருக்கான தேர்தலின் முன்னணி, பின்னணி, இடையணி என்று பத்தும் பலதும் வட கீழ்ப் பருவப் பெயர்ச்சிக் காற்றோடு வந்தடைந்ததிலிருந்து போர்க்குணம் சற்றே மூர்க்க நிலையை அடைந்திருக்கிறது.  

வடக்குக் கிழக்கிலுள்ள தமிழர்களுக்குப் புத்திமதி சொல்லி வந்த கனடியத் தமிழினம் தாமே ஆழக் குழி தோண்டி அதில் சந்தோஷமாகப் புதைந்து போன செய்தி கொஞ்சம் வருத்தம் தருவது தான்.   பார்வையாளரைப் பொறுத்த வரையில் யார் முதலில் குழி கிண்டினார் யார் முதலில் வீழ்ந்தார் இந்தக் குழியில் இன்னும் யார் யாரெல்லாம் விழப் போகிறார்கள் என்று ஆய்வாளர்கள் வாய் பிளக்கும்வரை காத்திருப்பது நியாயமில்லை. எனவே அவர்களுக்கான இடைக்காலத் தீர்வு தான் இக்கட்டுரை.  

இத் தேர்லுக்கு முன்னான தேர்தல் விடயமாகப் பல தர்க்கங்களும் குதர்க்கங்களும் நேரடி ஒலிபரப்பாகவோ அல்லது முகநூல் வழிபரப்பாகவோ வந்தன. அவற்றில் தர்க்க வகைக்குள் அகப்பட்ட சில:

1. ஸ்காபரோ தொகுதி பிரிக்கப்பட்டு ரூஜ் பார்க் மற்றும் நோர்த் என்று பங்கிடப்பட்டபோது ரூஜ் பார்க் தொகுதியில் வேட்பாளருக்கான தேர்தல் நடாத்தப்பட்டு ஆனந்தசங்கரி அவர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள். அப்போதிருந்தே  தமிழ் வேட்பாளர் தனது பிரச்சார இயந்திரத்தை முடுக்கி விட்டிருந்தார் எனவும், இருவரும் ஏறத்தாழ 2500 அங்கத்தவர்களின் ஆதரவைக்  கொண்டிருந்ததாகவும் பேசிக் கொள்கிறார்கள். அப்படியிருந்தும் ரூஜ் பார்க் தொகுதியில தேர்தலை நடத்தி முடித்த லிபரல் கட்சி நோர்த் தொகுதியில் மட்டும் தேர்தலை வைக்கத் தாமதித்தது ஏன்?  

2. தை மாதம் வந்த பின்னர் தேர்தலை அவசரம் அவசரமாக அறிவிப்புச் செய்தது மட்டுமல்லாது முதல் வருடத்தில் சேர்க்கப்பட்ட அங்கத்தவர்களின் அங்கத்துவம் மார்கழியுடன் காலாவதியாகியதால் இவர்களது அங்கத்துவம் புதுப்பிக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையையும் கட்சி இறுக்கமாக ‘நிர்ப்பந்தித்தது’ ஏன்?  

3. (குதர்க்க வகைப்பட்ட ஒரு கேள்வி) இந்தத் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்டு வென்ற சீன இனத்தவர் வெற்றி பெற வேண்டுமென்பதே லிபரல் கட்சியின் விருப்பமா?   மேற்கூறிய இரண்டு கேள்விகளுக்குமான விடைகள் ஒன்று தான். அந்த விடைதான் மேற்கூறிய கேள்வி! முதலிரண்டு கேள்விகளையும் கட்சிப் பிரமுகர்களிடம் கேட்டுத் துழாவிய போது கிடைத்த பதில்: கட்சியின் இணையத் தளத்தில் அங்கத்துவ காலக் கிரமம் மற்றும் தேர்தல் விதிகள் பற்றி விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதை வாசித்துப் புரிந்து கொள்ள வேண்டியது வேட்பாளரின் கடமை என்பது. இதைப் பற்றி எதிர்க்கட்சிப் பிரமுகர் ஒருவரிடம் துழாவியபோது ‘ பல தடவைகள் இவ் விதிகள் (இக்) கட்சியாலேயே மீறப்பட்டிருக்கின்றன’ எனப் பதில் வந்தது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் வந்த நியாயமான, திருவாட்டி பொதுமகளின் கருத்துக்கள்: ‘அநியாயமா ஒரு தமிழன் இன்னொருவனை விழுத்திப் போட்டான்’ ‘உந்த நா..ள் திருந்தாதுகள்’.யார் யாரை விழுத்தியது என்பதிலும் தர்க்க குதர்க்க வாதப் பிரதிவாதங்கள் உண்டு. கணபதியை வடிவேலு விழுத்தினார் என்பதற்கே அதிக வாக்குகள் கிடைத்தன. ‘கணபதி தானே முதலில் மனுச் செய்திருந்தவர்? ஒரு தமிழன் தேர்தலில் நிற்கிறான் என்றால் இன்னொரு தமிழர் ஏன் போட்டி போட வேண்டும்?’ என்ற வேள்விக்கு வந்த பதில் ‘ அந்தப் பிள்ளை சிற்சபேசன் அந்தத் தொகுதியிலை நிக்குது எண்டு தெரிஞ்சும்தானே அவரும் போட்டி போட வந்தவர்’  

அரசியல்வாதிகளை விட மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமேயில்லை.   கடந்த பொதுத் தேர்தலில் அடித்த அலையில் கரை சேர்ந்தவர்களும் உண்டு அதே வேளை காணாமற் போனவர்களும் உண்டு. ஸ்காபரோ ரூஜ் றிவர் தொகுதியில் ராதிகா சிற்சபேசன் அவர்கள் வெற்றி பெறுவார் என என்.டி.பி ஈறாக எந்தக் கட்சியும் நம்பியிருக்கவில்லை. அதே வேளை அயல் தொகுதிகளிலுள்ள சில நீண்ட கால அங்கத்தவர்கள் மறைந்து போவார்கள் எனவும் எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை.

அந்தத் தேர்தல் லிபரல் கட்சிக்கு நல்லதொரு பாடத்தைக் கற்பித்தது. நீண்ட காலமாக பேராதரவை எழங்கி வந்த தமிழ் மக்களைத் தொடந்தும் உதாசீனம் செய்யாதீர்கள் என்ற செய்தியை இத் தேர்தல் முடிவுகள் செவியறைந்து சொல்லியிருந்தன. அதன் பெறு பேறுதான் ஆனந்தசங்கரியின் தேர்வு.   ஆனாலும் ஸ்காபரோ ஏஜின்கோர்ட், ஸ்காபரோ நோர்த் வேட்பாளர் தேர்வுகளில் லிபரல் கட்சி தமிழருக்குத் தவறிழைத்திருக்கிறதா? என்ற கேள்விக்கு ஜனநாயக அளவுகோலின்படி தவறு என்றுதான் சொல்ல வேண்டும். ஜனநாயகம் பெரும்பாலான தருணங்களில் தவறான விளைவுகளையே தந்து வருகின்றது   நடந்து முடிந்த ஸ்காபரோ லிபரல் வேட்பாளர் தேர்தலில் கட்சி முறைகேடாக நடந்திருக்கவில்லை என்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதால் அடங்கியிருந்த தமிழரின் போர்க் குணங்கள் வெளிப்படுவதற்கு அதுவே காரணமாக அமையலாம். விளைவு? ஸ்காபரோ நோர்த் தொகுதியில் ராதிகா சிற்சபேசனைக் கரை சேர்க்கும் தமிழர் அலை ஸ்காபரோ ரூஜ் பார்க் தொகுதியில் ஆனந்தசங்கரியைக் காணாமற் செய்யவும் நேரிடலாம்.   இது போன்ற தவறுகளை லிபரல் கட்சி மட்டும்தான் செய்து வருகிறது என்பதை நம்பி இதர கட்சிகளைக் கொண்டாடத் தேவையில்லை. அதே வேளை கட்சிகளாற் ‘தேர்வு செய்யப்பட்ட’ தமிழரல்லாதவர்களிடம் திறமைகள் இல்லை என நாம் உருக் கொண்டு ஆடவும் தேவையுமில்லை.   ஜனவரி 28, 2015 – பெப்ரவரி ஈகுருவி பத்திரிகையில் பிரசுரமானது