வீரவன்ச கூட்டணி சி.ல.சுதந்திரக் கட்சியுடன் இரகசியப் பேச்சுவார்த்தை!
மாகாண சபைத் தேர்தல்களில் இணைந்து போட்டியிடலாம்?
அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையில், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறிய கட்சிகளின் கூட்டணி நேற்று இரவு, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் அக்கட்சியின் முக்கிய தலைவர்களையும் இரகசியமாகச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர் என அறியப்படுகிறது.
டார்லி வீதியிலுள்ள சுதந்திரக் கட்சியின் தலைமையலுவலத்தில் சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் நடைபெற்ற இக் கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சிப் பிரதிநிதிகள் அங்கு பேசப்பட்ட வியங்கள் பற்றி ஒருவருக்கு ஒருவர் மாறாட்டமான செய்திகளைத் தெரிவித்தனரென கொழும்பு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் பொதுவான அரசியல் நிலைமைகளை, வழமைபோல 11 சிறு கட்சிகளும் சத்தித்து கருத்துப் பரிமாறியிருந்தன என உதய கம்மன்பில தெரிவித்திருந்தார். ஆனால் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் நிமால் சிறிபால டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், கட்சித் தலைவர் சிறிசேன உட்படத் தமது கட்சியின் மூத்த உறுப்பினர்கள் சிறிய கட்சியின் கூட்டணியினால் இக்கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர் எனவும், வரப்போகும் மாகாணசபைத் தேர்தல்கள் எப்படி நடைபெறுமென்பது பற்றி அங்கு கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
வழமைபோல ஊடகங்களைத் தேடிப்போய் கருத்துக்களைத் தெரிவிக்கும் சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர மற்றும் சிறுகட்சிகளின் கூட்டணியின் தலைவர் விமல் வீரவன்சவும் ஊடகங்களைத் தவிர்த்து வருகின்றனர் எனவும் தெரியவருகிறது.
மாகாணசபைத் தேர்தல்களைத் தனியாக எதிர்கொள்ளுங்கள்
இதே வேளை, எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல்களில், இலங்கை பொதுமக்கள் முன்னணியுடன் சேர்ந்து போட்டியிடாமல் தனித்து நின்று எதிர்கொள்ளுமாறு தமது அடிமட்டத் தொண்டர்கள் அழுத்தம் தருகிறார்கள் என சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறீசேன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பிரதேச சபைகள், மாநகர சபைகள் ஆகியவற்றின் 1064 பிரதிநிதிகள் கையெழுத்திட்டு, கட்சித் தலைமைக்கு விண்ணப்பம் ஒன்றை அனுப்பியிருக்கிறார்கள்.
ஒரு காலத்தில் ஏனைய கட்சிகளோடு சேர்ந்து கூட்டணியை அமைத்து முக்கிய விசையாக இருந்த இக் கட்சி பொதுமக்கள் முன்னணியின் கூட்டினால் இல்லாதொழிக்கப்பட்டுவிடும் என இந்த அடிமட்டத் தொண்டர்கள் எச்சரிக்கிறார்கள்.
நாட்டை நிர்வகிப்பதில் ஆளும் கட்சியான இலங்கை பொதுமக்கள் முன்னணி பாரிய தோல்விகளைச் சந்திக்கும் பட்சத்தில் பொதுமக்கள் மத்தியில் எதிர்ப்பு எழுவது தவிர்க்க முடியாதது. அவர்களோடு கூட்டு வைப்பதன் மூலம் அவர்களின் சுமையை நாமும் சுமக்க வேண்டி ஏற்படலாம் என கட்சித் தொண்டர்கள் எச்சரித்திருப்பதாக தலைவர் சிறீசேனா தெரிவித்துள்ளார்.
“ஆளும் பொதுமக்கள் முன்னணி பல வாக்குறுதிகளை நிறைவேற்றாதமையால் சுதந்திரக் கட்சி இந்தத் தடவையும் பொதுமக்கள் முன்னணியினால் வஞ்சிக்கப்படலாம். எனவே கட்சியின் பெருமையைக் காப்பாற்ற நாம் செய்யக்கூடிய ஒன்று மத்தியில் கூட்டணியாக இயங்கிக்கொள்ளும் அதே வேளை மாகாண சபைகத் தேர்தலில் ‘கை’ அல்லது ‘வெற்றிலை’ச் சின்னங்களில் தனியாகப் போட்டியிடுவதே” என உள்ளூராட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.