வீரவன்சவின் மனைவிக்கு 2 வருட கடூழியச் சிறைத் தண்டனை!
கடவுச் சீட்டு மோசடியில் ஈடுபட்டதற்காகத் தண்டனை
தேசிய விடுதலை முன்னணி கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு கடவுச் சீட்டு விண்ணப்பத்தில் மோசடி செய்தமைக்காக இரண்டு வருட கடூழியச் சிறைத் தண்டனை மர்றும் ரூ 100,000 அபராதம் ஆகியவ்ற்றை விதித்து, கொழும்பு முதன்மை நீதிபதி புத்திகா சிறி ராகல தீர்ப்பளித்துள்ளார்.
2010 இல் ராஜதந்திரிகளுக்கான கடவுச்சீட்டொன்று உட்பட இரண்டு கடவுச் சீட்டுகளைப் பெறுவதற்காக களவாக மாற்றப்பட்ட விண்ணப்பப் பத்திரங்களைச் சமர்ப்பித்த காரணத்துக்காக அவருக்கு இத் தண்டனை வழங்கப்படுகிறது. பெயர்களும், பிறந்த திகதிகளும் மாற்றப்பட்ட பத்திரங்களை அவர் சமர்ப்பித்திருந்தது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக 2015 இல் அவர் கைதுசெய்யப்பட்டுப் பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.
ஒரு இலட்சம் ரூபா அபராதத்தைச் செலுத்த தவறும் பட்சத்தில் அவருடைய கடூழியச் சிறைத் தண்டனை மேலும் 6 மாதங்களால் அதிகரிக்கப்படும்.
ஜனவரி 23, 2015 அன்று பததரமுல்லையைச் சேர்ந்த சமிந்தா பெரேரா மேற்கொண்ட முறையீட்டைத் தொடர்ந்து திருமதி வீரவன்ச மீதான வழக்குப் பதியப்பட்டது.
கொழும்பு மாஜிஸ்திரேட்டின் இத் தீர்ப்புக்கு எதிராக நேற்று (27) திருமதி வீரவன்சவின் வழக்கறிஞர்கள் மேன்முறையீடு ஒன்றைச் செய்துள்ளனர்.