• Post category:WORLD
  • Post published:October 21, 2020
Spread the love

பிரித்தானியாவில் தொடரும் விடுதலைப் புலிகள் மீதான தடைக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அரசினால் செய்யப்பட்டிருந்த மேன் முறையீடு தொடர்பாக, பிரித்தானிய நியாயசபை (tribunal) தனது தீர்ப்பை வழங்கியுள்ளது.

விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டத்தை இப்போது முன்னெடுப்பதில்லை எனவும், அதன் மீது விதிக்கப்பட்ட தடை தமிழ் மக்களின் ஒன்றுகூடல் மற்றும் கருத்து வெளியிடும் சுதந்திரம் ஆகியவற்றை வெகுவாகப் பாதிக்கிறது என்பதனாலும், அவ்வமைப்பு மீதான தடையை நீக்கும்படி கோரி, 2018 இல், நாடுகடந்த தமிழீழ அரசு அப்போதைய பிரித்தானிய உள்ளக அமைச்சர் சாஜிட் ஜாவிட்டுக்கு எழுதியிருந்தது. மார்ச் 2019 இல் உள்ளக அமைச்சர் இக் கோரிக்கையை நிராகரித்திருந்தார்.

இம் முடிவுக்கு எதிராக, டிசம்பர் 13, 2018 அன்று, நாடுகடந்த தமிழீழ அரசு, தடை செய்யப்பட்ட அமைப்புகள் மேன்முறையீட்டு ஆணையத்திடம் மேன்முறையீடு ஒன்றைச் செய்திருந்தது. ஜூலை 30, 2020 அன்று, இம் முறையீட்டின் மீதான ஆதாரங்களை வெளிப்படையாகவும், ஜூலை 31, 2020 இல் சில ஆதாரங்களை இரகசியமாகவும் இவ்வாணையம் பதிவுசெய்திருந்தது.

வெளிப்படியான வாதாடல்களை நாடுகடந்த அரசை, மாயா லெஸ்டெர்,QC மற்றும் மல்கம் பேர்ட்லிங் ஆகிய வழக்கறிஞர்கள் மேற்கொண்டிருந்தனர். விசேட வழக்கறிஞர்களான அங்கஸ் மக்குல்லொக், QC மற்றும் றக்கேல் ரோணி ஆகியோர் நாடுகடந்த தமிழீழ அரசின் சார்பாகத் தோற்றியிருந்தனர்.



பிரித்தானிய அரசு சார்பாக சேர் ஜேம்ஸ் ஈடி,QC, பென் வட்சன் மற்றும் எமிலி வில்ஸ்டன் ஆகியோர் தோற்றியிருந்தனர். நீதிபதி திருமதி லெயிங், றிச்சார்ட் விற்றம்,QC, பிலிப் நெல்சன்,QC ஆகியோர் வழக்கை விசாரித்தனர்.

இன்று (அக்டோபர் 21, 2020) இம் மேன்முறையீடு தொடர்பான தீர்ப்பு வெளியானது. அதில் விடுதலைப் புலிகள் மீதான தடை செல்லுபடியாகாது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக நியாயசபைகளின் தீர்ப்புகள் நிர்வாகத் தேவைகளுக்கான தீர்ப்புகளாகவே (administrative decisions) அமைகின்றன. எதிர்காலத்தில் நடைபெறவிருக்கும் இது போன்ற வழக்குகளுக்கு ஆதாரம் தருவனவாக இவை பாவிக்கப்படலாம். மேன்முறையீட்டு நியாயசபை வழக்குகள் நீதிமன்ற வழக்குகளுக்கு நிகரானவை என்பதோடு அவற்றில் நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் பங்குபற்றுவதால் அவர்களின் தீர்ப்புகள் பெறுமதி வாய்ந்தவையாகக் கருதப்பட்டு இதர வழக்குகளில் உதாரணங்களாகப் பாவிக்கப்படுகின்றன. மேல் நியாயசபைத் தீர்ப்புகளும் (upper tribunal decisions), மேன்முறையீட்டு நீதிமன்றங்களின் தீர்ப்புகளும் (Court of Appeal decisions) பிரித்தானிய அரசைக் கட்டுப்படுத்துகின்றன.


Print Friendly, PDF & Email