வி.புலிகளை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலிலிருந்து நீக்க முடியாது – மலேசிய உள்துறை அமைச்சர்

வி.புலிகளை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலிலிருந்து நீக்க முடியாது – மலேசிய உள்துறை அமைச்சர்

Spread the love

பெப்ரவரி 22, 2020

விடுதலைப் புலிகளைப் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் தொடர்ந்து வைத்திருப்பது பற்றி மீள் பரிசீலனை செய்யும்படி மலேசியாவின் சட்டமா அதிபர் ரொம்மி தோமஸ் கேட்டுக்கொண்டதை அந் நாட்டின் உள்துறை அமைச்சர் முஹிதீன் யஸின் கண்டித்திருக்கிறார்.

ஒரு அமைப்பைப் பயங்கரவாத அமைப்பென வகைப்படுத்தும் அதிகாரம் மலேசியாவின் உள்துறை அமைச்சருக்கு மட்டுமே உண்டே தவிர சட்டமா அதிபருக்கு அதில் தலையிடும் அதிகாரம் இல்லை என அமைச்சர் யஸின் தெரிவித்திருக்கிறார்.

விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புகளைப் பேணினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த 12 பேரை, அவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்த 34 குற்றச்சாட்டுகளில் ஒன்றைத்தானும் நிரூபிக்கப் போதுமான சாத்தியங்கள் இல்லை எனக்கூறி, நேற்று அந் நாட்டின் சட்டமா அதிபர் ரொம்மி தோமஸ் விடுதலை செய்திருந்தார்.

குற்றம் சாட்டப்பட்ட 12 பேரும் தாம் விடுதலைப் புலி அமைப்பின் மீது கருணை கொண்டவர்களே தவிர அதனுடன் தாங்கள் தொடர்புகளை வைத்திருக்கவில்லை எனக் கூறிக் குற்றச்சாட்டுகளை மறுத்திருந்தார்கள்.

இன்று வெளியிட்ட அறிக்கையில், கருப்புப் பணத்தை வெள்ளையாக்குதல், பயங்கரவாதத்துக்கு நிதியுதவி மற்றும் சட்டத்துக்குப் புறம்பாகப் பணம் சேர்த்தல் ஆகியவற்றுக்கான சட்டம் 2001 இன் 66B(1) பிரிவின் பிரகாரம் தனிப்பட்டவர்களையும், அமைப்புக்களையும் தடைசெய்வதற்கான அதிகாரம் உள்துறை அமைச்சருக்கு உண்டு எனக் கூறப்பட்டுள்ளது.

அமைப்பைத் தடைசெய்ததற்கான ஆதாரங்கள் பாதுகாப்பு, உளவு நிறுவனங்களிடமிருந்து சமீபத்தில் பெறப்பட்டவை எனவும், விடுதலைப் புலிகள் அமைப்பு நவம்பர் 12,2014 இல் ஒரு பயங்கரவாத இயக்கமெனப் பட்டியலிடப்பட்டது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

” நாட்டின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையிலான கோட்பாட்டை விடுதலைப் புலிகள் இன்னும் கடைப்பிடித்து வருகிறார்கள். அது மேலும் பரவுவதையும், அதன் செயற்பாடுகள் அதிகரிப்பதையும் நாம் தடுத்து நிறுத்தியாக் வேண்டும். அதிகாரிகளிடமிருந்து சமீபத்தில் பெறப்பட்ட ஆதாரங்களை வைத்துக்கொண்டு, உள்துறை அமைச்சர் என்ற வகையில் நான் விடுதலைப் புலிகள் அமைப்பு, தொடர்ந்தும் தடைசெய்யப்பட்ட அமைப்பாகவே இருக்கும் என அறிவிக்கிறேன்” என அவர் தெரிவித்தார்.

மலேசியாவுக்கு அப்பால், இந்தியா, கனடா, அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளும் விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடை செய்திருக்கின்றன என அவர் மேலும் தெரிவித்தார்.

Print Friendly, PDF & Email