விஸ்கோண்சின், அமெரிக்கா – வாகனம் மோதியதில் 5 பேர் மரணம், 40 இற்கும் மேற்பட்டோர் காயம்
கைல் றிற்றின்ஹவுஸ் விடுதலை செய்யப்படன் எதிரொலியாக இருக்கலாம்?
அமெரிக்காவிலுள்ள விஸ்கோண்சின் மாநிலத்தில், வோக்கிஷா என்னுமிடத்தில், ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்றுக்கொண்டிருந்த நத்தார் ஊர்வலமொன்றில் வாகனமொன்று அதீத வேகத்துடன் மோதியதில் 5 பேர் மரணமடைந்தும், 40 பேருக்கு மேல் காயமடைந்துமுள்ளதாக அறியப்படுகிறது. இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இச் சம்பவம் பற்றிய காணொளியொன்றில் அதி வேகத்துடன் சிவப்பு வாகனமொன்று தெருவில் வாகனத் தடையை உடைத்துக்கொண்டு ஊர்வலத்தில்ல் கலந்துகொண்ட மக்களை மோதித் தாக்குவது காட்டப்படுகிறது.
இச் சம்பவம் தொடர்பாக, வாகனத்தின் சாரதியான 39 வயதுடைய டறெல் புரூக்ஸ் என்பவர் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார். இச் சம்பவம் பயங்கரவாதத்துடன் தொடர்புடையதல்ல எனப் பொலிசார் கூறுகின்றனர். பொலிசார் இதுவரை சந்தேகநபர் மீது எந்தக்குற்றத்தையும் பதியவோ அல்லது அவரது படத்தை வெளியிடவோ இல்லை. குற்றத்திற்கான காரணம் பற்றியும் எதுவித தகவல்களும் இதுவரை வெளியிடப்படவில்லை எனினும் கடந்த வாரம், குற்றவாளியல்ல என விடுதலை செய்யப்பட்ட கைல் றிற்றின்ஹௌஸ் சம்பவத்துடன் இதற்குத் தொடர்பிருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சென்ற வருடம் ஆகஸ்ட் மாதம் விஸ்கோண்சின் மாநிலத்தில் கெனோஷா என்னுமிடத்தில் வெள்ளை இன பொலிஸ் அதிகாரியால் ஜேக்கப் பிளேக் என்னும் கறுப்பினத்தவர் ஒருவர் கொல்லப்பட்டது தொடர்பாக நடைபெற்ற ஊர்வலத்தில் பங்குகொண்டிருந்த இருவரை கைல் றிற்றின்ஹவுஸ் சுட்டுக் கொன்றிருந்தார். கைல் றிற்றின்ஹவுஸ் ஒரு வெள்ளை இனத்தவர். இக்கொலை தொடர்பாக நடைபெற்ற வழக்கின் தீர்ப்பு வெள்ளியன்று (19) வழங்கப்பட்டபோது றிற்றின்ஹவுஸ் குற்றவாளியல்ல என ஜூரர்கள் ஏகமனதாகத் தீர்மானித்திருந்தனர். இவ்வழக்கிற்குத் தெரிவான அனைத்து ஜூரர்களும் வெள்ளை இனத்தைச் சேர்ந்தவர்கள்.
வருடா வருடம் நடைபெறும் நத்தார் ஊர்வலத்தில் அலங்கரிக்கப்பட்ட வாகன ஊர்திகள், பழைமை வாய்ந்த வாகனங்கள், பாண்டு வாத்தியங்கள், முதிய பெண்களிந் நடநங்கள் எநக் கோலாகலமான கொண்டாட்டம் நடைபெறுகிறது. பெரும்பாலும் வெள்ளை இந மக்கள் தமது குழந்தைகளுடன் இவ்வூர்வலத்தில் பங்கு கொள்வது வழக்கம். கொறோணா தொற்றுக் காரணமாக கடந்த வருடம் இவ்வூர்வலம் நடைபெறவில்லை.