விவேக ராமஸ்வாமி: ஒரு இந்திய கறிவேப்பிலை
மாயமான்
ஜனாதிபதி ட்றம்பின் பல புதிய திணைக்களங்களில் ஒன்றென அறிவிக்கப்பட்ட அரச வினைத்திறன் திணைக்கள இணைத் தலைவர் பதவியிலிருந்து விவேக் ராமஸ்வாமி தள்ளி வீழ்த்தப்பட்டிருக்கிறார். தேர்தலுக்கு முன் இந்திய வம்சாவளியினரின் வாக்கு வேட்டைக்காக ட்றம்ப் கறிக்கு வாசனை சேர்த்த விவேக்கிற்கு இது புரியாதிருந்திருக்க நியாயமில்லை.
‘மேக் அமெரிக்கா வைட் எகைன் (மாவா)’ இயக்கத்தின் பினாமி தான் ட்றம்ப். அமெரிக்காவில் வெள்ளையர்களின் எண்ணிக்கை குறைகிறது; அதை நிவர்த்தி செய்யும் எண்ணத்தோடு இயங்கும் ‘செங்களுத்தர்கள்’ ஆராதிக்கும் தங்கப் பசு பால் கறக்க முடியாவிட்டாலும் ஆள் சேர்க்கும் தன்மையது. அதிக பிள்ளைகளைப் பெறவேண்டும் எனப் பல வருடங்களாகவே பிரசாரம் செய்துவரும் இலான் மஸ்க் பிறப்பால் ஒரு தென்னாபிரிக்கர். அவருடைய முன்னாள் மகன் மகளாய் மறுபிறப்பெடுத்த விடயத்தில் கடுப்பாகி மூன்றாம் பாலின வியாபாரம் உலக சனத்தொகைக் குறைப்பின் பிறிதொரு வடிவமே எனக்கூறி சன்னதம் கொண்டு திரிபவர்.
அமெரிக்காவில் பிறந்திராத படியால் இலான் மஸ்கினால் ஜனாதிபதியாக வரவே முடியாது. எனவே ஒரு வைரஸாக உள்ளே புகுந்து தனது கிருமி சாகசத்தைக் காட்ட மட்டுமே அவரால் முடியும். தனது பண, ஊடக பலத்தால் அவர் அதைச் சாதித்திருக்கிறார். அமெரிக்க அரசியலில் ‘மத்தியகிழக்கு’ பக்டீரியாக்கள் இதுவரை இந்த சாகசத்தைச் செய்து வருகின்றன. அமெரிக்க வெள்ளைகளுக்கு இப்போதுதான் காலம் கனிந்திருக்கிறது. விவேக் ராமஸ்வாமி அதீத தன்னம்பிக்கையுடன் களத்தில் குதித்தவர். “ஆனால் வெள்ளையரின் கர்ப்பக்கிருஹத்திற்குள் உனக்கு இடமில்லை” எனக்கூறித் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறார். இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்று என்றாலும் இவ்வளவு விரைவில் நடக்குமென எதிர்பார்க்கவில்லை.
ஆனாலும் இந்த விவேக ராமஸ்வாமி கொஞ்சம் அலேர்ட்டாகி பிளேட்டைத் திருப்பிப் போட்டு பிளே பண்ணியிருக்கிறார். தான் ஓஹையோ மாநிலத்தின் ஆளுனராகப் போட்டியிடப் போகிறேன் என சூசகமாக அறிவித்து மீசையிலிருந்து மண்ணைத் தட்டி விட்டிருக்கிறார். ராமஸ்வாமியின் செயற்பாடு போதாது என்பதால் இலான் மஸ்க் அவரை இணைத் தலைமையிலிருந்து தள்ளி விட்டார் என்றொரு கதை ஓடுகிறது. “Vivek has worn out his welcome,” என்றொரு ட்றம்பிற்கு நெருக்கமான ஒருவர் கூறியதாக ஒரு ஊடகம் கூறியிருக்கிறது. தேர்தலுக்காக அவர் பாவிக்கப்பட்ட ஒரு கறிவேப்பிலை; அவ்வளவுதான்.
அது மட்டுமல்ல. உப-ஜனாதிபதியாகியிருக்கும் முன்னாள் செனட்டர் ஜே.டி. வான்ஸின் பதவிக்கான இடத்தை ராமஸ்வாமிக்குக் கொடுப்பதாக நம்பவைக்கப்பட்டிருந்தார் எனவும் இப்போது அது ஓஹாயோ ஆளுனர் மைக் வலஸிற்குக் கொடுக்கப்படவிருக்கிறது எனவும் பேசப்படுகிறது. அமெரிக்க அரசியலை இந்த இளம் இந்தியக் கன்று இப்போது அறிந்திருக்குமென்று நினைக்கிறேன். கூகிள், மைக்கிரோசொஃப்ட் போன்று இது ஒரு பணம் புரட்டிக்கொடுக்கும் தொழிலல்ல; பணம் புரட்டும் தொழில். அதற்கு வெள்ளைத் தோல் வேண்டும்.
இதுவரை நடைமுறையிலிருந்த Diversity-Equity-Inclusion (DEI) நடைமுறை உடனடியாக நிறுத்தப்படுகிறது. வேலைத் தலங்களில் ‘சமத்துவத்தைப் பேணுவதற்கென உருவாக்கப்பட்ட இத்திட்டத்தின் பிரகாரம் வெள்ளையரல்லாதோர், மாற்றுப் பாலினத்தவர், இயக்கக் குறைபாடுகளுள்ளோர் போன்றோருக்குப் பணியிடங்களில் சமத்துவம் வழங்கப்படவேண்டுமென்கிறது இச்சட்டம். மஸ்க் இதன் முதலாம் எதிரி. ‘திறமைக்கு முதலிடம்’ என்பது அவரது வாதம். ஃபிரான்ஸிஸ்கோ ரெஸ்லா ஆலையில் இனவாதம் கோலோச்சுவது பற்றியும் அங்கு DEI சம்பந்தமாகப் பல வழக்குகள் நிலுவையில் இருப்பது பற்றியும் பலருக்குத் தெரியாது.
இது டொணால்ட் மஸ்கின் ஆட்சி. ட்றம்ப் மஸ்க்கின் ஒரு கவர்னர். அவ்வளவுதான். “ஜூலை 2026 இற்குள் அமெரிக்க அரசின் செலவீனத்தை இரண்டு ட்றில்லியன் டொலர்களால் குறைப்பேன்” என மஸ்க் சபதம் எடுத்திருக்கிறார். செய்தால் உலகத்திற்கு நல்லது.
இதற்காகவே இந்த ஆட்சி இப்போது (தற்காலிகமாகவேனும்) அவசியமானது. அமெரிக்க அரசியலை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் மத்திய கிழக்கு பக்டீரியாவை ஒளிக்க ஒரு வைரஸால் தான் முடியும். இப்போர் இனிமேல் தான் ஆரம்பிக்கும். இதற்கான வேலைகளை விஞ்ஞானி ஸ்டீவ் பனன் செய்துகொண்டிருக்கிறார். இவ்வேலை முடிந்ததும் வைரஸும் ஒழிக்கப்பட்டுவிடும். இக்கிருமிப் போர் வாங்கித்தரும் இடைவேளையில் உலகம் தான் இழந்த பலத்தை மீளப்பெற்றுவிடும். அதற்காகவேனும் ட்றம்பின் ஆட்சி தேவை.
ட்றம்ப் அமெரிக்காவின் அர்ச்சுனா என்றொரு நண்பர் பகிடியாகச் சொன்னார். ‘பகிடியாக’ நம்பவேண்டியிருக்கிறது. எல்லாம் நன்மைக்கே.
