Columnsமாயமான்

விவேக் ராமசாமி அடுத்த அமெரிக்க ஜனாதிபதி – பட்சி சொல்கிறது

மாயமான்

‘இந்தப் பெடியனுக்கு எங்கோ மச்சம் இருக்குது’ என்று நான் அப்போதே நினைத்தேன். இந்த உழுகிற மாடு எங்க இருந்தாலென்ன உழத்தான் போகுது. விவேக் ராமசாமி என்கிற இந்தப் பையன் அமெரிக்க ஜனாதிபதியாக வந்தால் தலையில் கையை வைக்க வேண்டாம். பிறப்பு அப்படி.

சில வருடங்களுக்கு முன்னர் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் ஒரு உஷால் டொசாஞ் என்றொரு இந்திய வம்சாவளியினர் மாகாண முதல்வராக முடிசூட்டப்பட்டார். அப்போது ஏதோ ஒரு பத்திரிகையில் ஒருவர் நக்கலாக எழுதியிருந்தார் “here we go again, there is another that job no body wants to do”. ஒருவரும் இல்லாவிட்டால் அதை இந்தியருக்குக் கொடு என்பது தான் சிலேடை. கோவிட் புரட்டிப் போட்ட பிரித்தானியாவை நிமித்துவதற்கு ரிஷி சூனாக் என்றொரு இந்தியரை பிரித்தானியர் தற்காலிகமாக வேலைக்கு அமர்த்தியதும் இதே போன்றொரு கேஸ் தான்.

அமெரிக்காவைக் கொண்டு நடத்துவதற்கு இப்போ யாரும் தயாரில்லை. நாடு அதல பாதாளத்தை நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. ஜனாதிபதி புஷ் புரட்டிப் போட்ட அமெரிக்க ஆமையை ஒபாமா நிமித்தி விட்டார். இது அமெரிக்கர்களுக்கு நன்றாகவே தெரியும். இல்லாவிட்டால் ஒரு அடிமைக் கறுப்பரின் வாரிசு உலகத்தின் தலைவராக வந்திருக்க முடியாது. இப்போது பைடன் அந்த ஆமையை மீண்டும் புரட்டிப் போட்டிருக்கிறார். சரியான தருணத்தில் விவேக் ராமசாமி வந்து குதித்திருக்கிறார். அவர் ஒரு குடும்பி இல்லாத சோழியன்.

அமெரிக்காவில் அடுத்த ஜனாதிபதி குடியரசுக் கட்சியிலிருந்துதான் வரவேண்டும். அது அந்தக் கட்சிக்காரரின் திறமைகளாலல்ல ஜனநாயகக் கட்சியின் மூடர்களால். பைடனுக்கு கால் தடக்குவதும் வாய் தடுக்குவதும் வழக்கமாகப் போய்விட்டது. ஜனநாயகக் கட்சிக்குள்ளேயே அவருக்கு ஆதரவு முப்பதுகளில் நின்று தாண்டவமாடுகிறது. பொதுமக்களிடையே கோமாளி துரும்பருக்கு பைடனை விட ஆதரவு கூட. ஆனால் துரும்பரை மீண்டும் ஜனாதிபதியாக்க கட்சி விரும்பவில்லை என்று தெரிகிறது. முன்னாள் ட்றம்ப் கூசா தூக்கியான றொண் டெசாண்டிஸ் கொஞ்ச நாள் பலத்து சவுண்ட் விட்டுக்கொண்டிருந்தார். இப்போ கூட்டத்தில் அவர் பேச மைக் (மட்டும்) கேட்டுக்கொண்டிருக்கும் நிலைமை. இந்த நேரத்தில் ராமசாமி வந்து குத்திதிருக்கிறார். Here we go again..

கருத்துக் கணிப்பில் விவேக் ராமசாமி 13% த்தில் துரும்பருக்கு அடுத்தபடியாக இருக்கிறார். ஹேலி (இவரும் தனது அடையாளத்தை வெற்றிகரமாக மறைத்துக்கொண்ட ஒரு இந்திய வம்சாவளி) 12% , முன்னாள் நியூ ஜேர்சி ஆளுனர் கிறிஸ் கிறிஸ்டீ 11% (நியூ ஜேர்சி இந்தியர்கள் அதிகம் வாழும் மாநிலம் – note the point).

துரும்பருக்கு அமெரிக்க சாமானியரிடத்தில் (blue collar America) நல்ல செல்வாக்கு இருக்கிறது. ஜனநாயகத்தை அதனுடைய பாட்டில் விட்டால் அவர் தான் அடுத்த ஜனாதிபதி. அவர் ஒரு முன்னாள் வியாபாரி. வியாபாரிகளுக்குரிய அத்தனை சுத்து மாத்துக்களையும் அவரும் பண்ணினார். வால் ஸ்றீட் வெள்ளைச் சேட்டு சீமான்கள் அவரைவிட மோசமாகச் செய்கிறார்கள். White collar America அவர்கள் சொல்லைத் தட்டுவதில்லை. அவர்களுக்கு தம்முடைய சொல்லைத் தட்டாத, ஒபாமா போன்ற, ஒரு ‘அடிமை’ தேவை. எனவே துரும்பர் மீண்டும் ஜனாதிபதியாக வருவதை அவர்கள் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. வழக்குகளினாலோ அல்லது பெண்களைக் கொண்டோ அல்லது தங்களது ஊடக சங்குகளை உரக்க ஊதியோ துரும்பரைத் தடுக்கி விழுத்த அவர்கள் எப்போதே தயார். (ஒபாமாவை ஜனாதிபதியாக்க வால் ஸ்றீட் முதலைகள் 10 மில்லியன் கொடுத்தது வேறு கதை). பொதுவாக அவர்கள் தமது பண பலத்தினாலும் ஊடக பலத்தினாலுமே தமது எதிரிகளை வீழ்த்துவார்கள். ஆனால் துரும்பரிடம் அது வாய்க்கவில்லை. பெண்களை இறக்கிப் பார்த்தார்கள். அதுவும் வாய்க்கவில்லை. தூங்கிக் கொண்டிருந்த Blue collar அமெரிக்கர்களை ஸ்டீவ் பனன் போன்ற சாணக்கியர்கள் உசுப்பி விட்டனர். அவர்கள் மீண்டும் தூங்கியதாகத் தெரிவவில்லை. துரும்பரின் தேர்தல் செலவுகளுக்கு அள்ளி வீசுகிறார்கள். அவர்களோடு ஒப்பிடுகையில் வால் ஸ்றீட் இப்போ ஒரு ஏழை.

இச்சூழலில் துரும்பரை விழுத்தவும், அமிழ்ந்துபோகும் அமெரிக்காவை மீண்டும் மிதக்க வைக்கவோ அல்லது பழி போடவோ வால் ஸ்றீட்டுக்கு ஒரு இந்தியர் தேவை. அதற்கு வந்து வாய்த்திருப்பது நமது ராமசாமி. அமெரிக்கா உலகத் தலைவராக இருப்பதற்குக் காரணம் அது எப்போதுமே திறமைக்கு முதலிடம் கொடுப்பதனால் தான். உலகத்தில் வேறெந்த நாட்டிற்கும் அந்தத் தகுதி இல்லை. அந்த வகையில் விவேக் ராமசாமிக்கு அமெரிக்க மக்கள் ஒரு சந்தர்ப்பத்தைக் கொடுக்க வாய்ப்புண்டு.

விவேக் ராமசாமி ஒரு மகா கெட்டிக்காரர். Gift of the gab எனக் கூறப்படும் வாய்ச் சாதுரியம் அவரிடம் இருக்கிறது. ‘வாய் குடுத்துத் தப்ப முடியாது’ என்ற வாசகம் இவருக்குப் பொருந்தும். பாலக்காட்டுப் பிராமண வம்சத்தைச் சேர்ந்த அவரது அப்பா கணபதி ராமசாமி ஒரு பொறியியலாளர். அம்மா கீதா மருத்துவத் துறையில் நிபுணர். அவர்கள் அமெரிக்காவில் ஆகஸ்ட் 9, 1985 இல் பெற்றெடுத்த தவப்புதல்வன் தான் இந்த விவேக். விவேக் ஒரு சிறந்த வியாபாரி. மருந்து நிறுவனம் ஒன்றை ஸ்தாபித்து $175 மில்லியனுக்கு விற்றவர். யேல் சட்டத்துறைப் பட்டதாரியான அவர் இப்போ ஒரு முதலீட்டு நிறுவனமொன்றை வைத்திருக்கிறார். பெறுமதி $750 மில்லியன்களுக்கு மேல். அவர் இதுவரை தொட்டதெல்லாம் பொன்னாகத்தான் இருந்திருக்கிறது. இப்போது வெள்ளை மாளிகையைத் தொட விரும்புகிறார்.

நியூ ஹாம்ப்ஷையர் பல்கலைக்கழக கருத்துக்கணிப்பின்படி விவேக் ராமசாமி இரண்டாமிடத்தில் இருக்கிறார். தேர்தல் 2024 இல். அதற்குள் எதுவும் நடக்கலாம். அமெரிக்கா ஒரு பொருளாதார அழுத்தத்திற்குள் (recession) போய்க்கொண்டிருக்கிறது. தொழிலாளர் போராட்டங்கள் மும்முரமாகிக்கொண்டு வருகின்றன. பண வீக்கம் ‘நானும் இருக்கிறேன்’ என்று தொடர்ந்து சுரண்டிக் காட்டிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்காவை நிமித்தி எடுக்க ஒரு இந்தியரால் தான் முடியும் என அமெரிக்கர்கள் நம்புகிறார்கள். இதுவரை விவேக்கை உதாசீனம் செய்துவந்த ஊடகங்கள் இப்போது அவரிச் சிலாகித்து எழுத ஆரபித்துள்ளன.

ராமசாமி ஸ்மார்ட்டாக அலுவல் பார்க்கிறார். ஒருவேளை துரும்பர் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டால் தனக்கு உதவி ஜனாதிபதி பதவி (running mate) கிடைக்கலாம் என அவர் நம்பலாம். துரும்பருக்கு அந்த அதிர்ஷ்டம் கிடைக்காவிட்டால் அவருடைய இடத்துக்கு கட்சி தன்னை நியமிக்கலாம் என்ற நம்பிக்கையுடன் அவர் செயல்படுகிறார் போலத் தெரிகிறது. துரும்பரின் நிழலாகவே தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு வருகிறார். தேர்தலுக்குப் பிறகு துரும்பர் மீது வழக்கு ‘இறுகினால்’ அவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கத் தான் தயார் என அவர் இப்போதே அறிவித்துவிட்டார். இந்தப் பொறியில் துரும்பரும் அவரது வாக்காளர்களும் ஏற்கெனவே விழுந்துவிட்டார்கள். துரும்பரைப் பகைத்த டெசாண்டிஸுக்கு என்ன நடந்தது என்பது ராமசாமிக்குத் தெரியும். எனவே அவரை வளைத்துப் போடுவதை முதல் காரியமாகச் செய்துகொண்டார்.

கொள்கைகளைப் பொறுத்தவரையில் துரும்பரின் கொள்கைகளை மினுக்கி வால் ஸ்றீட் பாணியில் சொல்கிறார். ‘இமிகிரேசன்’, ‘நாஷனல் செக்கியூறிட்டி’, ‘மேக் அமெரிக்கா கிரேட் எகெயின்’ போன்ற அதே சுலோகங்களை இவரும் பாராயணம் செய்கிறார். அவரைத் தடுக்கி விழுத்துவதற்கான அழுக்குகளைத் தேடி அவரது எதிரிகள் நீண்ட காலமாகக் குப்பைகளைக் கிளறி வந்திருக்கலாம். சமூக வலைத்தளங்கள் இன்னும் மணம் பரப்பவில்லை என்பது (இதுவரை) நல்ல செய்தி.

கேரள பூர்வீகம், பிராமண குலம், இந்திய இரத்தம், தமிழ் வளர்ப்பு – பொடியன் பிழைச்சிடுவான் என்று பட்சி சொல்கிறது. (Image Credit: Reuters)