Health

விவேகக் குறைவுக்கான அறிகுறிகள்

ஒருவரின் விவேகத்தை மதிப்பீடு செய்ய உளவியல் சில வழிவகைகளை முன்வைக்கிறது. பட்டறிவைத் தவிர்த்து, விஞ்ஞானம், மருத்துவம் போன்ற அனைத்து நெறிகளும் இன்னும் வளர்ந்துகொண்டும் மாறிக்கொண்டும் இருப்பவை என்பதனால் எதையும் அறுதியாக எடுத்துக் கொள்ளாமல் ஒரு வழிகாட்டியாகக் கொள்வதே நல்லது என்பதை இங்கு முற்கூட்டியே குறிப்பிடுவது நல்லது.

விஞ்ஞானத்தில் வடிவறிதல் (pattern recognition) என்றொரு முறைமையுண்டு. அதாவது ஒருவருக்குப் பரிச்சயமான காட்சி, சூழல், நடைமுறை, குணவியல்பு போன்ற ஏதோ ஒன்று சற்றே மாறுபடுகிறதாயின் அம்மாற்றத்தை மூளை உடனடியாகக் கிரகித்துக்கொண்டு அம்மாற்றம் பற்றிய விசாரணையை முடுக்கிவிடும். உதாரணத்திற்கு இயல்பாக நடந்துவரும் ஒருவரை விட நொண்டிக்கொண்டு நடந்து வரும் ஒருவர் மீது எங்கள் கவனம் குவியும். வித்தியாசமான ஆடை அலங்காரம், குரல், உயரம், பருமன் எனப்பல வழிகளிலும் இயல்பற்றதெனக் கருதப்படும் விடயங்கள் மீது மூளை அலாதிக் கவனக்குவிப்பைச் செய்வது படைப்பின் மகிமை. இப்படியான அம்சங்களைத் தொகுத்து அவற்றுக்கிடையேயான தொடர்புகளை ஆராய்ந்து எழுதப்பட்ட பல இந்திய சாஸ்திரங்களும் மேற்கத்தைய நூல்களும் தற்போது மீண்டும் கவனத்துக்குள்ளாகி வருகின்றன.

சமீபத்தில் வெளியான ஒரு உளவியல் ஆய்வு ஒன்று ஒருவரது நடத்தையை அவதானித்து அவரது விவேகத்தை அளவிட முடியுமெனக் கூறியிருக்கிறது. அதற்காக இதை ஒரு அறுதியான ஆராய்ச்சி என எடுத்துக்கொள்ளாது ஒரு சுவாரசிய வாசிப்பாகக் கொள்வது நல்லது என நினைக்கிறேன்.

இதே வேளை மூளையின் (மனிதரில் மட்டுமல்ல) நரம்புக்கலங்கள், தேவையைப் பொறுத்து தற்காலிக / நீண்டகால இசைவாக்கத்தைச் செய்கின்றன என நரம்பியல் விஞ்ஞானிகள் நிறுவி வருகின்றனர். நரம்பு நெகிழ்வு (neuro plasticity) எனப்படும் இக்கருதுகோள் உடலியக்கக்குறைபாடுள்ளவர்கள் நிவாரணம் பெறுவதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது என்பதாக நரம்பியல் நிபுணர்கள் நம்புகின்றனர். சமீபத்தில் ஒரு வலையொளி ஒன்றில் கோழிகளுடன் வளர்ந்த ஒரு அனாதைக் காகம் காலை விழித்தவுடன் ‘கொக்கரக்கோ’ என்று கூவுவதைப் பார்த்தேன். நம் முன்னோர் கூறும் ‘பழக்க தோஷம்’ எனப்படும் இப்படியான தொற்றுக்கள் தேவை கருதிய உடலியல் மாற்றங்களின் விளைவுகள் சாத்தியம் என்பதை நரம்பு நெகிழ்வு கருதுகோள் மூலம் நிரூபிக்க விஞ்ஞானிகள் முயல்கின்றனர். எனவே கீழே தரப்படும் ‘விவேகக் குறைபாட்டு அறிகுறிகளை’ அறுதியான முடிவாக் எடுத்துக்கொள்ளாமல் ஒருவர் தன்னை மாற்றிக்கொள்வதற்கு வசதியான வழிகாட்டல்களாக எடுத்துக்கொள்வது நல்லது.

1). ஆர்வமின்மை (Lack of Curiosity)

பிரபல விஞ்ஞானி அல்பேர்ட் ஐன்ஸ்டீன் ஒரு தடவை கூறினார் ” என்னிடம் விசேட திறமை என்று ஏதுமில்லை. நான் எப்போதும் எதையும் ஆர்வத்தோடு நோக்குபவன் (passionately curious)” என்று. உளவியல் நிபுணர்களும் இதில் உடன்படுகிறார்கள். எதையும் அறியவேண்டுமென உன்னிப்பாகக் கவனிக்கும் ஒருவருக்கு விவேகம் அதிகம் என அவர்கள் நம்புகிறார்கள். எதன் மீதும் அதிகம் ஆர்வம் காட்டாதவர்கள், புதிய விடயங்களைத் துருவித் துருவிக் கேட்டு அறிந்துகொள்ள ஆர்வமில்லாதவர்கது விவேகம் குறைவாகவே மதிக்கப்படும் என அவர்கள் கூறுகிறார்கள்.

2). அடிக்கடி தாமதப்படுத்தல் (Frequent Procrastination)

நாங்கள் எல்லோருமே எப்போதாவது சில விடயங்களை ‘பின்னர் செய்துகொள்ளலாம்’ எனத் தாமதப்படுதுபவர்கள் தான். ஆனாலும் சிலருக்கு அது ஒரு பழக்கமாகவே (chronic) வந்துவிடுகிறது. எதற்கெடுத்தாலும் ‘அட நாளைக்குச் செய்துகொள்ளலாம்’ என்கின்ற பழக்கம். இப்படியானவர்கள் தமக்குரிய நேரத்தைச் சரியான வழியில் பாவிக்க முடியாதவர்களாகவோ (poor time management) அல்லது பகுத்தறிவைப் பிரயோகித்து செயற்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுக்க இயலாதவர்களாகவோ இருக்கலாம். காரியங்களை இவர்கள் முன்னின்று நடத்த இயலாதவர்கள் என மற்றவர்களால் இனம் காணப்படும் ஆபத்துக்கு இவர்கள் உள்ளாகிறார்கள். இதுவும் விவேகக் குறைவின் ஒரு வெளிப்பாடு.

3). கூர்ந்து கேட்கும் தன்மை குறைபாடு (Poor listening skills)

உரையாடலின் போது சிலர் தலையை ஆட்டிக்கொண்டு ‘சொல்லுங்கோ’ என்பார்கள் ஆனால் அவர்களது கண்கள் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருக்கும். உரையாடலில் அவர்கள் பேசவேண்டி ஏர்படும்போது அவர்கள் பேசப்பட்ட விடயத்தையே மறந்துபோய்விடுகிறார்கள். உளவியலாளர்களின் மதிப்பீடுகளின்படி இப்படியானவர்களது விவேகமும் சற்றுக் குறைவானதாகவே மதிக்கப்படுகிறது. புலன்களூடு உட்புகும் தகவல்கள் அனைத்தும் ஏககாலத்தில் உள்ளே எடுக்கப்பட்டாலும் எதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டுமென்பதை மூளை முன்னுரிமைப்படுத்தும். இதைப் புலனாட்சி செயலாட்சி (cognitive skills) என அழைப்பர். இதில் காணப்படும் குறைபாடும் குறைந்த விவேகத்தின் அறிகுறி என்கிறார்கள் உளவியலாளர்கள்.

4). இசைவாக்கக் குறைபாடு (Lack of Adaptability)

மாறம் என்பது வாழ்வின் ஒரு அங்கம். நாளாந்தம் ஏற்படும் சிறிய மாற்றங்கள் முதல் முக்கியமான திசை பிசகும் வாழ்வியல் மாற்றங்கள் வரை தேவைகளுக்கேற்ற இசைவாக்கம் அத்தியாவசியமானது. ஆனால் இந்த இசைவாக்கம் கூட ஒருவரது விவேகத்தில் தங்கியிருக்கிறது என்கிறது இந்த ஆய்வு. பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்தல் (problem solving ) என்பது மேற்கத்தைய கற்கை முறைகளில் பிரதானமான ஒன்று. சாடிக்குள் கற்களைப் போட்டு நீரை உயர்த்தி அதை அருந்தும் காகம் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இங்கு அதற்கு முன்னுள்ள பிரச்சினை நீர்த் தேவை. அருகிலுள்ள சூழலிலிருந்து பெறக்கூடிய கருவிகளைப் பாவித்து தனது பிரச்சினையைத் தீர்த்துக்கொள்வதே காகத்தின் முயற்சி. இத் தேவை கருதிய இசைவாக்கம் காகத்தின் விவேகத்தில் தங்கியிருக்கிறது என்பது இதற்கு ஒரு உதாரணம்.

5). சுய முன்னேற்றத்தைத் தவிர்த்தல் (Avoiding Self-improvement)

சுய வளர்ச்சியும், முன்னேற்றமும் வாழ்க்கைப் பயணத்தின் அத்தியாவசிய படிகள். ஒரு விடயத்தைப் பற்றி அறிவதற்கும், தேவையானால் அதற்கான மாற்றங்களை உள்வாங்குவதற்கும், எல்லாவற்றுக்கும் முக்கியமாக தன் பலவீனத்தை ஒருவர் ஏற்றுக்கொள்வதற்கும் ஏற்ற மனப்பக்குவம் ஒருவருக்கு அவசியம். தனக்கு அவ்விடயம் பற்றித் தெரியாது என்ற பலவீனத்தைக் காட்டிவிடக்கூடாது என்பதற்காக ஒருவர் அவ்விடத்திலிருந்து நழுவிவிடுகிறார் என்றால் அது அவரது விவேகத்தின் குறைபாடு என்கிறது இந்த ஆய்வு.

6). அதீத தன்நம்பிக்கை (Over Confidence)

ஒருவரது அதீத தன்நம்பிக்கை சில வேளைகளில் அவரது முன்னேற்றத்திற்குத் தடையாகிவிடும். அதீத தன்நம்பிக்கையை ஒரு விவேகக்குறைவின் வெளிப்பாட்டாகவே உளவியாளர் கருதுகின்றனர். தனக்கு எல்லாமே தெரியும் என நினைக்கும் அதீத தன்நம்பிக்கையுள்ளவர்கள் ஒருபோதும் தமது தவறுகளை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமக்குத் தெரியும் என்ற நினைப்பில் அவர்கள் புதியனவற்றைக் கற்பதைத் தவிர்க்கின்றனர். மற்றயவர்களின் ஆலோசனைகளை இலகுவில் புறந்தள்ளி விடுகின்றனர். இதனால் பல புதிய விடயங்களிலிருந்து அவர்கள் தம்மைத் தாமே அன்னியப்படுத்திக் கொண்டுவிடுகின்றனர். திறந்த மனதுள்ளவர்களே அதிக விடயங்களைக் கற்றுக்கொள்கின்றனர்.

7). பல்கோணப் பார்வைகளைத் தவிர்த்தல் (Ignoring different perspectives)

ஒரு பிரச்சினைக்கோ அல்லது ஆலோசனைக்கோ வேறு விதமான பார்வைகளும், தீர்வுகளும் இருக்கக்கூடும் என்ற விடயத்தை முற்றாக நிராகரித்துவிட்டுத் தமக்குத் தெரிந்த பார்வையோ / தீர்வோ மட்டுமே போதும் என்று தமது நிலைப்பாட்டை மட்டுமே உறுதியாக வலியுறுத்துபவர்களைச் சந்தித்திருப்பீர்கள். இதுகூட விவேகக்குறைவின் ஒரு வெளிப்பாடு என உளவியலாளர்கள் நம்புகின்றனர். இது அவர்களது நெகிழ்வுத்தன்மையற்ற புலனாட்சித் திறமையையே காட்டுகிறது. ‘இன்னொருவருடைய கருத்தையும் கேட்போம் ‘ என்று நினைப்பதுகூட ஒருவரது விவேகத்தின் கூர்மையையே காட்டுகின்றது என உளவியலாளர்கள் நம்புகின்றனர்.

8). சுய புரிதல் குறைபாடு (Lack of self-awareness)

விவேகம் என்பதைப் பற்றிப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் சுய-புரிதல் அவசியம். ஒருவர் தனது பலமென்ன பலவீனம் என்ன என்பதை அறிந்துகொள்ளும்போதுதான் சூழல் இயங்கு நிலைகள் தனக்குச் சாதகமானதா அல்லது பாதகமானதா என்பதை உய்த்துணர்ந்து அச்சூழலிலிருந்தும் தப்பிக்க முயற்சிக்க முடியும். சுய புரிதல் அல்லாதவர்கள் தேவையற்ற விடயங்களில் அனாவசியமாகச் சிக்குப்பட்டு இழப்புக்குள்ளாக வேண்டி நேரிடலாம். இது அவர்களது விவேகக்குறைவின் விளைவாகவே கருதப்படும். உள்ளார்ந்த பரிசோதனை (introspection), உணர்வுசார் நுண்ணறிவு (emotional intelligence), தன்னைத்தானே பகுத்தறியும் திறமை ஆகியவை உயர் விவேகத்தின் அறிகுறிகள் என்கிறார்கள் உளவியலாளர்கள். எனவே நீங்கள் செய்த செயல்கள், எடுத்த தீர்மானங்கள், உணர்வினால் உந்தப்பட்ட தருணங்கள் ஆகியவை சரியானவையா என்பதை அடிக்கடி மீளாய்வு செய்வது உயர் விவேகத்தின் செயற்பாடுகள் என்பதை அறிந்துவைத்திருத்தல் நல்லது. Photo by Amanda Dalbjörn on Unsplash