விவசாயிகள் போராட்டம் | அனைத்து சட்டங்களையும் மீளப்பெற்றார் பிரதமர் மோடி!
போராட்டம் தொடருமென விவசாயிகள் அறிவிப்பு!
இந்தியா
ஆச்சரியம் தரும் வகையில், இன்று (வெள்ளி) காலை பொதுமக்களுக்கு விடுத்த செய்தியில், அரசினால் முன்மொழியப்பட்ட அனைத்து விவசாயத் திருத்தச் சட்டங்களையும் மீளப் பெறுவதாக, பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

சீக்கிய மத ஸ்தாபகர் குரு நானக்கின் பிறந்த நாளான இன்று பிரதமர் மோடி போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் விடுத்த அறிக்கையில் ” விவசாய சட்டத் திருத்தத்துக்காக முன்மொழியப்பட்டிருந்த மூன்று சட்டங்களையும் நான் இன்று மீளப்பெறுகிறேன். எல்லோரும் வீடுகளுக்குப் போய் குடும்பங்களுடன் புதிய வாழ்வைத் தொடங்குங்கள். அடுத்த மாதம் ஆரம்பிக்கவிருக்கும் பாராளுமன்றத் தொடரில் இச் சட்டங்களை மீளப்பெறும் நடவடிக்கைகளை நாம் மேற்கொள்வோம்” எனப் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார்.
செப்டெம்பர் 2020 இல் கொண்டுவரப்பட்ட திருத்தச் சட்டங்களுக்கு எதிராக, பல மாநிலங்களிலுமிருந்தும் பல்லாயிரக் கணக்கான விவசாயிகள் போராட்டத்தில் குதித்திருந்தனர். இச் சட்டத்தால் விவசாயிகள் நீண்ட காலத்தில் நன்மையைப் பெறுவார்கள் என பிரதமர் மோடி கூறி வந்தார். ஆனாலும் பாரிய நிறுவனங்களுக்கு சார்பான இச் சட்டங்களின் மூலம் விவசாயிகள் அந்நிறுவனங்களின் கால்களில் விழவேண்டி ஏற்படுமென விவசாயிகள் கூறிவருகிறார்கள். ஆனால் இந்தியாவின் அதிக சனத்தொகையுள்ள உத்தரப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் விரைவில் தேர்தல்கள் நடைபெறவுள்ளதாலும் இங்கு விவசாயிகளின் கணிசமான எண்ணிக்கை தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கக்கூடும் என்பதாலும் பிரதமர் மோடி இம் முடிவுக்கு வந்ததாகவும் பேசப்படுகிறது.
தமது உற்பத்திகளுக்கு உத்தரவாத விலையை அரசு வழங்கவேண்டுமென்பது விவசாயிகளின் முக்கிய கோரிக்கையாகவிருந்தது. “இது பல மில்லியன் விவசாயிகளது தொடர் போராட்டத்துக்கும், ஜனநாயகத்துக்கும் கிடைத்த சிறு வெற்றி. மூன்று சட்டங்களையும் மீளப்பெற்றாலும் உத்தரவாத விலை வழங்குவது ற்றிய எந்தக் குறிப்பும் இல்லை. எனவே போராட்டத்தை நாம் தொடர்வோம்” என விவசாயிகளின் சங்கங்களின் தலைவர்கள் அறிவித்துள்ளார்கள். உதரப் பிரதேசத்திலும் பஞ்சாப்பிலும் பாரிய ஊர்வலங்களை மேற்கொள்ள ஏற்கெனவே போடப்பட்ட திட்டங்களின்படி ஊர்வலங்களை நடத்துவதற்கு இத் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். பஞ்சாப், ஹர்யானா, உததரப் பிரதேசம், ராஜஸ்தான், மஹாராஷ்டிரம் ஆகிய மாநிலங்கள் இந்தியாவின் உணவுக்கூடைகள் எனப் பெயர் பெற்றவை.
இச் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப், ஹர்யானா மற்றும் உத்தரப்பிரதேச மாநில விவசாயிகளின் சங்கங்கள், டெல்ஹி நகரின் நான்கு எல்லைகளையும் முடக்குவதன் மூலம் தமது போராட்டங்களை ஒரு வருடமாக முன்னெடுத்து வருகிறார்கள். அக்டோபர் 2 அன்று அமைச்சர் அஜே மிஷ்ரா சென்ற வாகனம் போராடும் விவசாயிகளின் ஊர்வலத்தை மோதியதால் நான்கு விவசாயிகள் கொல்லப்பட்டிருந்தனர். அத்தோடு இச் சம்பவம் தொடர்பாக ஏற்பட்ட மோதலின்போது மேலும் நால்வர் கொல்லப்பட்டிருந்தனர். இச் சம்பவம் தொடர்பாக அமைச்சரின் மகன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.