India

“விவசாயிகள் போராட்டத்துக்கான எனது ஆதரவு தொடரும்” – கிரெட்டா துன்பேர்க் இந்திய அரசுக்குப் பதிலடி!


சுவீடன் நாட்டைச் சேர்ந்த சிறுமியும், சூழல் செயற்பாட்டாளருமான கிரெட்டா துன்பேர்க், இந்தியாவில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததையடுத்து அவர்மீது இந்திய அரசு வழக்குப் பதிவு செய்திருந்தது.

இதற்குப் பதிலளிக்குமுகமாக அவர் இன்று தனது ருவீட்டர் செய்தி மூலம் இந்திய அரசுக்குப் பதிலடி கொடுத்துள்ளார். ” நான் விவசாயிகளின் அமைதியான போராட்டத்தை ஆதரிக்கிறேன். நான் இன்னும் அவர்கள் பக்கமே நிற்கிறேன் –#StandWithFarmers – எந்த அளவு வெறுப்பு, அச்சுறுத்தல், மனித உரிமை மீறல்களாலும் அதை மாற்றிவிட முடியாது” என அவர் தனது ருவீட்டில் தெரிவித்துள்ளார்.

வெவ்வேறு குழுமங்களிடையே வெறுப்பைப் பரப்புதல் (IPC 153-A) மற்றும் குற்றம் புரிதலுக்கான சதி (IPC 120B) ஆகிய சட்டங்களின் கீழ் துன்பெர்க்கின்மீது டெல்ஹி பொலிஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது.

‘Ask India Why’ என்ற தலைப்பில் துன்பேர்க் தனது ருவிட்டர் மூலம் அனுப்பிய கைநூலில், சமூக வலைத் தளங்கள் மூலமாகவும், நேரடியாகவும் எதிர்ப்புப் போராட்டங்களை மேற்கொள்வது எப்படி எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தியாவின் பெயரைக் களங்கப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு இக் கைநூலே ஆதாரமாக உள்ளது என அரசு கருதுகிறது.



இந்திய விவசாயிகளின் போராட்டத்துக்கு சர்வதேச அரங்கில் பல அரசியல்வாதிகள், கலைஞர்கள், செயற்பாட்டாளர்கள் மத்தியில் பலத்த ஆதரவு கிடைத்து வருகிறது. சமீபத்தில் பிரபல அமெரிக்கப் பாடகி றிஹான்னா விவசாயிகளுக்கு ஆதரவாக ருவீட் ஒன்றைச் செய்திருந்தார்.

இப்படியான ஆதரவுகள் உலக அரங்கில் அவமானத்தை ஏற்படுத்திவரும் நிலையில், அதற்கு எதிரான தனது சமூக வெளிப் போராட்டங்களையும் இந்திய அரசு எடுத்து வருகிறது. #IndiaTogether, #IndiaAgainstPropaganda போன்ற சில ருவிட்டர் போராட்டங்களை இந்திய வெளிவிவகார அமைச்சு ஆரம்பித்துள்ளது. இந்திய பிரபலங்களான கிரிக்கெட் வீரர்கள், திரையுலகத்தினர் பலர் இதற்கு ஆதரவாக உள்ளனர்.

இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். இதில் வெளியார் தலையிடத் தேவையில்லை என்ற நிலைப்பாட்டில் சிலர் இருந்தாலும், இந்திய அரசும் அதன் மக்களும் , அமெரிக்கத் தலைநகர்த் தாக்குதல் உட்படப் பல நாடுகளில் நடைபெறும் நிகழ்வுகள் குறித்த கருத்துக்களைத் தெரிவித்து வருவது குறித்து அதன் விமர்சகர்கள் குறித்துக்காட்டியுள்ளனர்.