Sports

விளையாட்டு | லங்கா பிறிமியர் லீக்கிலிருந்து ஜாஃப்னா ஸ்ராலியன்ஸ் கழகம் வெளியேற்றப்பட்டது – ஒப்பந்த முரண்பாடுகள் காரணம்?


இலங்கை வரலாற்றில் முதல் லங்கா பிறிமியர் லீக் வெற்றியாளரான ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ் போட்டிகளிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா கிரிக்கெட் அமைப்பு தெரிவித்துள்ளது.

முதலாவது லங்கா பிறிமியர் லீக் போட்டியில் வெற்றி பெற்ற ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ் கழகம், ஆரம்பத்தில் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை மீறியமை காரணமாக போட்டியிலிருந்து விலத்தப்பட்டதென சிறீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

போட்டியில் வெற்றிபெற்றதன் பின்னர் ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ் கழகத்தை லண்டனைத் தளமாகக் கொண்ட அல்லிராஜா சுபாஸ்கரன் வாங்கியுள்ளதோடு கழகத்திற்கு ‘ஜாஃப்னா கிங்க்ஸ்’ எனப் புதிய பெயரைச் சூட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ் என்ற கழகம் விளையாடும் உரிமையை இழக்கிறது. ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ் கழகத்தின் முந்தைய உரிமை, உலகம் முழுவதும் வாழும் 10 பணிப்பாளர்களின் தலைமையில் இருந்தது.

லங்கா பிறிமியர் லீக் போட்டிகளில் ஆடிய கழகங்களில் ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ் மட்டுமே சிறந்த முறையில் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது எனவும் அதன் காப்டன் திசார பெரேராவின் தலைமையில் அக் கழகம் சிறப்பாக ஆடி வெற்றியைத் தட்டிக்கொண்டிருந்தது எனவும் அறியப்பட்டிருந்தது.

பிறிமியர் லீக் போட்டிய நடத்தும் உரிமையை சிறீலங்கா கிரிக்கெட், துபாயைச் சேர்ந்த ஐ.பி.ஜி. குழுமத்துக்கு விற்றுவிட்டதாகாவும் அக் குழுமமே எக் கழகங்களை வைத்திருப்பது எவற்றை நீக்குவது என்ற தீர்மானங்களை எடுக்கிறது எனவும் ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ் கழகத்தின் வெளியேற்றத்திற்குத் தாம் பொறுப்பில்லை எனவும் சிறீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

அங்கத்துவப் பணம் செலுத்தாமையால் சில கழகங்கள் வெளியேற்றப்பட்டன எனினும், ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ் கழகம் இவ்விடயத்தில் ஒழுங்காகப் பணம் செலுத்தியிருந்தது எனவும், விலக்கப்பட்டதற்கான காரணம் அதுவல்ல எனவும் கூறப்படுகிறது.

காப்டன் திசார பெரேரா உட்பட, ஜாஃப்னா ஸ்டாலியன்ஸ் கழகத்தின் வீரர்கள் அனைவரும் ஜாஃப்னா கிங்ஸ் கழகத்தில் ஆடுவார்கள் எனவும், சில கழகங்களை இழந்திருந்தாலும், இந்த வருடம் லங்கா பிரிமியர் லீக் போட்டிகள் தொடர்ந்து நடைபெறுமெனவும் சிறீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது. டிசம்பர் மாதம்ஆரம்பிக்கும் போட்டியின் முதலாவது ஆட்டம், கொழும்பிலும் இரண்டாவது போட்டி அம்பாந்தோட்டையிலும் நடைபெறும். சென்ற வருடம் முழுப்போட்டிகளும் அம்பாந்தோட்டையில் நடைபெற்றன. விளையாட்டு அமைச்சர் நாமல் ராஜபக்சவின் தொகுதி அம்பாந்தோட்டையாகும்.