விளக்கம்: துரித குடிவரவாளர் அனுமதிக்கான மாகாணத் தேர்வுத் திட்டம் (PNP)
வெளிநாட்டாருக்கு நிரந்தர குடியுரிமை வழங்கும் திட்டத்தைத் துரிதப்படுத்தும் முகமாக கனடிய மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த திட்டத்தின் பிரகாரம் இத்திட்டத்தில் மாகாணங்களின் தேவைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் அவற்றையும் இணைத்து செயற்பட மத்திய அரசு முன்வந்திருக்கிறது.
‘வெளிநாட்டாருக்கான துரித குடியுரிமை’ என்ற தலைப்பில் அறிவிக்கப்பட்டுள்ள இத் திட்டத்தின்கீழ் மாகாணங்களால் பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கு துரித கதியில் நிரந்தர குடியுரிமையை வழங்கப்படுமென மத்திய அர்சின் குடிவரவு, அகதிகள், குடியுரிமைத் திணைக்களம் ( Immigration, Refugees, and Citizenship Canada (IRCC) ) அறிவித்துள்ளது.
மாகாணங்களூடான இந்த துரித குடிவரவுக்கான ஆட்தேர்வு மத்திய அரசினால் இரண்டு வாரங்களுக்கு ஒரு தடவை நடத்தப்படுகிறது. இம்மாதம் (ஜூலை) 02 ஆம் 16 ஆம் திகதிகளில் இரண்டு நிகழ்வுகள் ஏற்கெனவே நடைபெற்று முடிந்துள்ளன. மாகாணத் தெரிவின் மூலம் கனடாவுக்கு நிரந்தரமாகக் குடியேறுபவர்கள் அந்தந்த மாகாணங்களில் மட்டுமே வதியவும் பணிபுரியவும் அனுமதிக்கப்படுவார்கள்.
மாகாணங்களின் விருப்புத் தேர்வுத் திட்டம் (Provincial Nominee Programs (PNPs)) என அழைக்கப்படும் இத் திட்டத்தின் கீழ் கனடாவின் 9 மாகாணங்களும் பிரதேசங்களும் தமக்குத் தேவையான துறைகளில் குடிவரவாளர்களைத் தெரிவுசெய்ய அனுமதிக்கப்படுகின்றன.
யார் யார் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்?
- ஒரு குறிப்பிட்ட மாகாணத்தில் ஒருவருக்கு வேலை இருக்கிறதென உறுதிப்படுத்தும் பத்திரத்தைக் (Offer of Employment) கொண்டவர்கள்
- மாகாணமொன்றில் மிகவும் கிராக்கியான துறையொன்றில் (in-demand) ஏற்கெனவே பணிபுரிந்துகொண்டிருப்பவர்கள்
- இம்மாகாணங்கள் ஒன்றில் ஏற்கெனவே கல்வி கற்ற அல்லது வேலை பார்த்த அனுபவமுள்ளவர்கள்
- இம்மாகாணங்களொன்றில் தொழிலொன்றை ஆரம்பிக்கக்கூடிய வளங்களைக் கொண்டவர்கள்
ஆகியோர் இத்திட்டத்தின் கீழ் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியும்.
விரிவான தரவரிசை மதிப்பெண் (Comprehensive Ranking Score (CRS))
கனடாவுக்குள் குடிவர விரும்புபவர்களது தரங்களை மதிக்க மத்திய அரசு ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட நடைமுறையைப் பாவிக்கிறது. விரிவான தரவரிசை மதிப்பெண் (Comprehensive Ranking Score (CRS)) என அழைக்கப்படும் இம்மதிப்பெண் ஒருவரது வயது, கல்விப் பின்புலம், பணியனுபவம், மொழிப் புலமை, துரித குடிவரவுத் திட்டத்தை அனுசரித்துப்போகும் பாங்கு ஆகிய விடயங்களை வைத்து எட்டப்படுகிறது. அரசு தீர்மானிக்கும் வெட்டு மதிப்பெண்ணுக்கு அண்மிய மதிப்பெண்களைக் கொண்டவர்களுக்கு நாட்டுக்குள் வரும் அனுமதி (விசா) வைப் பெறும் சாத்தியங்களும் உண்டு.
துரிதக் குடிவரவுக்கான அழைப்புக் கடிதங்கள் இதுவரை 1391!
இதே வேளை கனடிய அனுபவத்தைக் கொண்டிருக்கும் வெளிநாட்டுக்காரரரைத் தேர்ந்தெடுத்து அவர்களைக் கனடாவில் வந்து குடியேறும்படி மத்திய அரசு அழைப்புக் கடிதங்களையும் அனுப்பிக்கொண்டிருக்கிறது. ஜூலை 16, 2024 வரை இப்படித் துரித குடிவரவுக்கான 1391 கடிதங்களை மத்திய அரசு வெளிநாட்டாருக்கு அனுப்பியிருக்கிறது. அழைக்கப்படுபவர்கள் பெறவேண்டிய அதிகுறைந்த மதிப்பெண் (CRS Score) 670 . ஜூலை 02 இல் அறிவிக்கப்பட்ட தேர்வின்படி 920 பேருக்கு அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டன. இக்குழுவில் ஆகக்குறைந்த மதிப்பெண் 739 ஆகும்.
கனடாவின் ஒவ்வொரு மாகாணங்களும், ஒவ்வொரு பிரதேசங்களும் (territories) தனித்தன்மையான புவிசார், துறைசார், கல்வி, மனித வளங்களைக் கொண்டவை. ஒவ்வொன்றினதும் பொருளாதாரக் கட்டமைப்பும் தனித்தன்மையானவை. எனவே இம்மாகாணங்களும் பிரதேசங்களும் அவற்றுக்குத் தேவையான, சமாளிக்ககூடிய அளவில் தமது குடிவரவைத் தீர்மானிக்கின்றன. இத் தேர்வுக்கேற்ற வகையில் மதிப்பெண்களும் வேறுபடுகின்றன.
பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்
மாகாணத் தேர்வின் மூலம் நிரந்தர குடியுரிமையைப் பெற விரும்புபவர்கள் பின்வரும் நடைமுறைகளைப் பின்பற்றவும்:
1). விண்ணப்பத்தை இணையவழியாகச் செய்துகொள்ளலாம். வழியற்றவர்கள் இவ்விணைப்பின் மூலம் மாற்று வழிகளைத் தேர்ந்து கொள்ளலாம். https://www.canada.ca/en/immigration-refugees-citizenship/services/immigrate-canada/provincial-nominees.html
2). விண்ணப்பத்தை விரும்பிய மாகாணத்திற்கோ அல்லது பிரதேசத்திற்க்கோ அனுப்பவும். தெரிவாகும் பட்சத்தில் மாகாணத் தேர்வுப் பத்திரம் (Provincial Nomination Certificate) உங்களுக்கு அனுப்பிவைக்கப்படும். இதன் பிரகாரம் அடுத்த கட்டத்திற்கான படிமுறைகள் உங்களுக்கு வழங்கப்படும்.
மாகாண வதிவிட அனுமதி கிடைத்ததும் குறைந்தது எவ்வளவு காலம் அம்மாகாணத்தில் விண்ணப்பதாரி வதியவேண்டும் என்பதற்கான தெளிவான சட்ட விபரம் இதுவரை வழங்கப்படவில்லை. (Image: Immigration.ca)
