விளக்கம் | கோவிட் ‘டெல்ரா திரிபு’ (Delta Variant) இதுவரை அறிந்தவை…

இதுவரை அறியப்பட்ட கொறோணாவைரஸ் திரிபுகளில் நான்காவதான ரகம் ‘டெல்ரா’. இந்தியாவில் ஆரம்பித்த இத் திரிபுக்கு ஆரம்பத்தில் வழங்கப்பட்டிருந்த சுட்டெண் B.1.617.2. உலக சுகாதார நிறுவனம், சமீபத்தில் இத் திரிபுகளை கிரேக்க பெயர்களில் அழைக்கவாரம்பித்திருக்கிறது. அதன் பிரகாரம் B.1.617.2 ‘டெல்ரா’ திரிபு (Delta Variant) என அழைக்கப்படுகிறது.

இதே போல, இங்கிலாந்தில் ஆரம்பித்த B.1.1.7 ‘அல்ஃபா’ திரிபு (Alpha Variant) எனவும், தென்னாபிரிக்காவில் ஆரம்பித்த B.1.351 ‘பேற்றா’ திரிபு (Beta Variant) எனவும், பிரேசிலில் ஆரம்பித்த P.1, ‘காம்மா’ திரிபு (Gamma Variant) எனவும் அழைக்கப்படுகின்றன.

‘டெல்ற்றா’ உலகம் முழுவதிலுமுள்ள சுகாதார அதிகாரிகளை அச்சுறுத்தும் ஒரு திரிபாக இருக்கிறது என்பது உண்மை. அமெரிக்காவில், தற்போது காணப்படும் நோய்த் தொற்றாளர்களில் 6% மானோர் ‘டெல்ற்றா’ திரிபைக் கொண்டுள்ளனர் என்றாலும், ஒரு மாதத்திற்கு முன்னர் அது 1% மாக இருந்தது என்பதும், அதன் பரவும் வேகம் அதிகமென்பதும் அமெரிக்க சுகாதார நிபுணர்களுக்கு அச்சத்தைக் கொடுத்து வருகிறது. பிரித்தானியாவில் காணப்படும் தொற்றாளர்களில் 91% ‘டெல்ற்றா’ திரிபைக் கொண்டுள்ளனர். இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களாகப் பேரழிவை ஏற்படுத்திவரும் ‘டெல்ற்றா’ திரிபை ‘கவனத்தில் எடுக்கப்பட வேண்டிய திரிபு’ (variant of concern) என உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியிருக்கிறது. அதாவது, இவ்வகைப்படுத்தலுக்குள் வரும் கிருமியின் ‘தொற்று வேகம் தீவிரமானது; நோய்த் தாக்கம் பாரதூரமானது; சிகிச்சை சிலவேளைகளில் பலனளிக்காமல் போகலாம், இத் திரிபு, நோயெதிர்ப்பு ஆற்றலுக்குத் தப்பிப் பிழைக்க வல்லது; சாதாரண பரிசோதனைகளால் சில வேளைகளில் கண்டுபிடிக்க முடியாதது என உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது.

எந்தளவுக்கு ஆபத்தானது?

‘அல்ஃபா’ திரிபோடு ஒப்பிடும்போது 40% அதி தீவிரமாகப் பரவக்கூடியது. ‘டெல்ற்றா’ தொற்றைக் கொண்டவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் சாத்தியங்கள் அதிகம். இத் தொற்றைக் கொண்டவர்கள் தீவிர நோயறிகுறிகளைக் கொண்டிருக்கிறார்கள். ‘அல்ஃபா’ திரிபோடு ஒப்பிடுகையில், நோய் தொற்றி 14 நாட்களுக்குள் இவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படக்கூடிய சாத்தியம் 2.61%த்தால் அதிகரிக்கிறது.

தடுப்பு மருந்துகள் பலன் செய்யுமா?

அநேகமான தடுப்பு மருந்துகள் ‘டெல்ற்றா’ திரிபிற்கு எதிராகப் பலனளிக்கின்றன என டெக்சாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழுவொன்று தெரிவித்துள்ளது. முழுமையாக தடுப்பூசிகள் ஏற்றப்பட்ட 20 பேர் மீது, ஆய்கூடத்தில் திரிபு செய்யப்பட்ட பலவகையான வைரஸ் திரிபுகளை ஏற்றியபின் அவர்களது உடலில் இவ் வைரஸ்கள் வெற்றிகரமாக அழிக்கப்பட்டுவிட்டதை அவர்கள் அவதானித்திருந்தார்கள். இருப்பினும், சென்ற வாரம் பிரித்தானிய ஆராய்ச்சியாளர் செய்த ஆய்வுகளின்படி புதிய திரிபுகளுக்கு இத் தடுப்பு மருந்துகள் பாதுகாப்ப்பை வழங்கியிருந்தாலும், அவர்களில் காணப்பட்ட பிறபொருளெதிரிகளின் (antibodies) எண்ணிக்கை பெருமளவு குறைக்கப்பட்டிருந்ததை அவர்கள் அவதானித்துள்ளார்கள். எனவே புதிய திரிபுகளிலிருந்து முழுமையான பாதுகாப்பைப் பெற, பரிந்துரைக்கப்பட்ட இரண்டு டோஸ்களையும் சகலரும் எடுக்கவேண்டுமென அவர்கள வற்புறுத்துகிறார்கள்.

பரவல் வேகம்

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கைப்படி, அன்ரார்ட்டிக்காவைத் தவிர்த்து 74 நாடுகளில் டெல்ற்றா திரிபு பரவியிருக்கிறது எனவும், ஒரு மாதத்திற்கு முன்னர் அது 40 நாடுகளில் மட்டுமே காணப்பட்டது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பயணமும், ஊடாடலும் இதற்குக் காரணமென அது தெரிவிக்கிறது.

இப் புதிய தகவல்கள் பல நாடுகளில் தற்போது நடைமுறையிலிருக்கும் நடமாட்ட முடக்கம் மேலும் சில வாரங்களால் நீடிக்கப்படுவதற்கான சாத்தியத்தை உருவாக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.