Sri LankaWorld

விளக்கம் | இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்த முடியுமா?

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சாத்தியமா?

சிவதாசன்

இறுதிப் போரின்போது இழைக்கப்பட்ட சர்வதேச போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பாக குற்றங்களை இழைத்தவர்களைச் சர்வதேச குற்றவியல் நீதிம்னறத்தில் நிறுத்தவேண்டுமென்ற குரல்கள் சர்வதேச அரங்குகளில் முன்னெப்போதையும்விட இப்போது பலமாக ஒலிக்கவாரம்பித்துள்ளன.

இதற்குக் காரணமாக இரண்டு காரணங்களை முன்வைக்கலாம். ஒன்று, மனித உரிமை ஆணையாளர் மிஷெல் பக்கெலெயின் அறிக்கை மற்றது, இலங்கையின் தற்போதைய ஆட்சியாளர்களினால் சர்வதேச நியமங்களை அலட்சியம் செய்வதோடு, தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் மனித உரிமை மீறல்களும் ஆகும்.

இம் முயற்சியில் ஒன்றாக பிரித்தானிய அரசுக்கு ஒரு விண்ணப்பத்தைக் கொடுக்கவென பொதுவெளியில் பகிரங்கமாக (online petition) கையெழுத்து வேட்டை ஒன்று பிரித்தானிய தமிழரால் நிகழ்த்தப்பட்டது.

கடந்த 6 மாதங்களாக சமூக வலைத்தளங்கள் மூலம் அனுப்பப்பட்டு மார்ச் 3ம் திகதி முடிவடைந்த இப் ‘பத்திரத்தில்’ கையெழுத்திட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 13,582. (ஆகக் கூடிய சுமார் 1000 கையெழுத்துகள் இல்ஃபோர்ட் பகுதியிலிருந்து கிடைத்துள்ளன – வாழ்த்துக்கள்!). பிரித்தானியாவில் 1 இலட்சத்துக்கும் மேலாகத் தமிழர்கள் வாழ்கிறார்கள் என்கிறார்கள். ஒப்பீட்டளவில் இவ்விலக்கம் கிடைத்திருக்கக்கூடிய Facebook likes ஐ விடக் குறைவு. அதைப் பற்றி இன்னுமொரு நாள் பார்க்கலாம்.

இக்கையெழுத்துப் படிவத்தை வைத்துக்கொண்டு, 1980 முதல் இன்றுவரை தமிழ் மக்களுக்கெதிராக இழைக்கப்பட்டுவரும் குற்றங்களுக்காக இலங்கை மீது விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொளுமாறு பிரித்தானிய அரசுக்கு ஒரு விண்ணப்பம் அனுப்பப்பட்டது.

பிரித்தானிய அரசாங்கத்தின் பதில்

இவ் விண்ணப்பத்துக்கு பிரித்தானிய அரசிடமிருந்து மார்ச் 2, 2021 இல் கிடைத்த பதில்:

ஐ.நா. மனித உரிமைகள் சபை உட்பட, இலங்கையில் நீதியும் பொறுப்புக்கூறலும் நிலைநாட்டப்படவேண்டுமென்ற முயற்சி பிரித்தானியா தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. ஆனால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பரிந்துரைக்குமளவிற்கு இம்முயற்சிக்குப் போதுமான ஆதரவு பாதுகாப்புச் சபையிடமிருந்து கிடைக்கவில்லை.

-பிரித்தானிய அரசு

என்ன காரணம்?

இதற்கான விடையை ஆராய்வதற்கு முதல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தைப் பற்றிச் சற்று விளக்கம்…

ஜூலை 17, 1998 இல் இத்தாலியில் நடைபெற்ற ஸ்தானிகர்கள் சந்திப்பின்போது சர்வதேச நீதிமன்றம் ஒன்றை உருவாக்குவதற்கான ஒப்பந்தமொன்று வரையப்பட்டது. றோமில் இம்மாநாடு நடைபெற்றதால் இதை “Statute of Rome” எனவும் அழைப்பார்கள். ஜூலை 1, 2002 இல் நடைமுறைக்கு வந்த இந்த ஒப்பந்தத்தில், நவம்பர் 2019 வரை 123 நாடுகள் கையெழுத்திட்ட்டுள்ளன.

இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் இறைமையுள்ள நாட்டில் மேற்கொள்ளப்படும் இனப்படுகொலை (genocide), போர்க்குற்றங்கள் (war crimes), மனிதத்துக்கெதிரான குற்றங்கள் (crimes against humanity) மற்றும் ஆக்கிரமிப்புக் குற்றம் (crime of aggression) ஆகிய குற்றங்களுக்காக குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரைக் குற்றவியல் நீதிமன்றம் விசாரித்து நீதி வழங்க அனுமதியுண்டு. ஆனால் குற்றஞ்சாட்டப்பட்டவரெனக் கருதப்படுபவர் வாழும் நாடு இவ்வொப்பந்தத்தில் கையெழுத்து வைக்காத நாடாக இருப்பின் அவரை இந்நீதிமன்றத்தில் முன்னிலைப்ப்டுத்த மறுக்கும் உரிமை அந்நாட்டுக்கு உண்டு.

இலங்கை இவ்வொப்பந்தத்தில் கையெழுத்து வைக்காத ஒரு நாடு. எனவே அங்குள்ள, குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த இலங்கை ஒத்துழைக்க மறுக்கலாம். எனவே தமிழ்மக்கள் மீது புரியப்பட்ட குற்றங்களுக்காக இலங்கையை விசாரிக்க சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை.

சர்வதேச் குற்றவியல் நீதிமன்றம் இவ்விசாரணைகளை மேர்கொள்வதற்கு இரண்டே இரண்டு பாதைகள் தானுண்டு. ஒன்று இலங்கை இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும்; இரண்டாவது ஐ,நா. பாதுகாப்புச் சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி, ஒரு வழக்குத் தொடுநர் நியமிக்கப்பட்டு (prosecutor) அதன் மூலம் இலங்கையைக் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிப்பது.

இந்த ஆட்சியில் முதலாவது பாதை நடைபெற முடியாத ஒன்று. இரண்டாவது பாதையை முன்னெடுத்தாலும், பாதுகாப்புச் சபையில் தீர்மானம் நிறைவேற்ற இலங்கையின் நண்பர்களான சீனாவும், ரஷ்யாவும் தமது வெட்டு வாக்கு அதிகாரங்களைப் (veto power) பாவித்தி இத் தீர்மானத்தை முறியடித்துவிடும். எனவே அதுவும் வெற்றியளிக்கப் போவதில்லை. இதைத் தான் “பாதுகாப்புச் சபையில் போதிய ஆதரவு இல்லை” எந மறைமுகமாகச் சொல்கிறது பிரித்தானிய அரசு.

பதில் (சாராம்சம் மட்டும்)

இலங்கையில் (போருக்குப் பின்) சமாதானத்தையும், நீதியையும், பொறுப்புக்கூறலையும், நல்லிணக்கத்தையும் பேணுவதற்கு பிரித்தானிய அரசு முன்னணியிலிருந்து பல முயற்சிகளை முன்னெடுத்திருக்கிறது. ஐ.நா. மனித உரிமைகள் சபையின் மூலமாகவும், கண்ணிவெடியகற்றல், மீள்குடியேற்றம், மதங்களுக்கிடையேயான நல்லிணக்க முயற்சிகள் என இலங்கையில் மேற்கொண்ட நடவடிக்கைகள் மூலமாகவும் அது பல முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறது. தென்னாசியாவுக்கான ராஜாங்க அமைச்சரான விம்பிள்டன் பிரபு அஹமட் இலங்கையின் தொடரும் உரிமை மீறல்கள், நடவடிக்கையின்மை குறித்து பெப்ரவரி, ஜூன், செப்டம்பர் (2020) மாதங்களிலும் இந்த வருடம் பெப்ரவரி 25 இலும், மிகவும் காட்டமான அறிக்கைகளை விடுத்திருக்கிறார்.

இதன் பகுதியாக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் புதிய தீர்மானமொன்றை நாம் கொண்டுவரவிருக்கிறோம். இதில், இலங்கை தொடர்பாகக் கண்காணிப்புகள் தொடரவேண்டுமெனவும், உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலம் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் முயற்சிகள், குற்றவாளிகளை விசாரித்து சட்டத்தின் முன்னர் நிறுத்துதல் ஆகியவற்றை இலங்கை அரசு முன்னெடுக்கிறதா என்பதைத் தொடர்ந்தும் ஆணையாளர் அலுவலகம் அவதானித்து ஆதாரங்களைச் சேர்க்க வேண்டுமெனவும் கோரிக்கை முன்வைக்கப்படுகிறது.

நீதி, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் ஆகியவிடயங்களை முன்னெடுக்க பிரித்தானியா தொடர்ந்தும் ஆதரவு வழங்கும் என வெளிவிவகார பொதுநலவாய அபிவிருத்தி அலுவலகம் பதிலளித்திருக்கிறது.

விளக்கம்

பிரித்தானியாவின் பதிலை நமது கிராமத்துத் தமிழில் கூறினால் , “ஒண்டுமே நடக்கப்போற காரியமில்லை. பேசாம அவங்களோட ஒரு மாதிரி அட்ஜஸ்ட் பண்ணிக்கொண்டு போங்கோ”

இதற்கு நஸ்பி பிரபுவின் இலங்கை ‘உறவுகள்’ காரணமாகவிருக்குமா? உஷ்..

அதுதான் ‘பிரித்-தந்திரம்’.

அப்போ தீர்வு? ஆணையாளர் காட்டும் பாதை – சர்வதேச மிஷேல் பக்கெலெ கூறும் சர்வதேச சட்டவரம்புத் தத்துவம். எந்தவொரு நாட்டினாலோ அல்லது தனி மனிதர்களாலோ குற்றமிழைத்தவர்கள் மீது வழக்குப் பதிதல் அல்லது இலக்கு வைக்கப்பட்ட பயணத் தடை, சொத்து முடக்கம்.

அப்போ சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்? அது வல்லரசுகளின் எதிரிகளுக்கென உருவாக்கப்பட்டது.