விலைபோன ருவிட்டர்: எங்கே போகிறார் ‘மக்கள் செல்வன்’ (இலான்) மஸ்க்?

சிவதாசன்

Free speech is the bedrock of a functioning democracy, and Twitter is the digital town square where matters vital to the future of humanity are debated,” Mr. Musk said in a statement announcing the deal. “Twitter has tremendous potential — I look forward to working with the company and the community of users to unlock it.

Elon Musk

உலகத் தகவற் பரிமாற்றத்தில் புரட்சிகரமான மார்றத்தைக் கொண்டுவந்த குறுஞ்செய்தித் தளங்களில் ஒன்றான ருவிட்டர் இந்த வாரம் இலான் மஸ்க் என்ற ஒரு தனி மனிதரால் கையகப்படுத்தப்பட்டிருக்கிறது. உலகில் அதி பணக்காரரான அவரது திமிரின் வெளிப்பாடுகளில் ஒன்றாக சிலர் இதைப் பார்க்கிறார்கள்.

ஊடகங்கள் தனி மனித கட்டுப்பாட்டில் இருப்பது ஒன்றும் புதிய விடயமல்ல. பங்குச் சந்தைகள் ஆட்சிக்கு வரும்வரை பல நூற்றாண்டுகளாக இதுவேதான் நிலைப்பாடு. மக்களின் மனநிலையைச் சாதுரியமாக நகர்த்தி அவர்களின் விருப்புகளுக்குச் சாதகமான அரசியல் சூழ்நிலைகளை உருவாக்குவதில் ஊடகங்கள் முன்னின்றுழைத்தன. அதனால் ஊடகங்களை Fourth Estate என மக்கள் அழைத்தார்கள். பிற்காலத்தில் மக்களுக்குப் பதிலாக அரசியல்வாதிகளின் மனநிலைகளை மக்களிடையே திணிப்பதில் ஊடகங்கள், குறிப்பாக மேற்கத்தைய ஊடகங்கள், வெற்றி கண்டன. இதுவரை உலகில் நடைபெற்ற உலகப் போர்கள், சதி முயற்சிகள், ஆட்சிக் கவிழ்ப்புகள் போன்றவற்றுக்கு ஜனநாயகப் முலாமைப் பூசி நியாயப்படுத்துவதில் ஊடகங்களே பின்னணியில் இருந்தன.

ஊடகங்களின் உரிமை தனிமனிதர்களிடமிருந்து பங்குதாரர்களுக்கு கைமாறியதும் ஜனநாயகம் கொஞ்சம் வீரியம் கொண்டது. பங்குகளின் பெறுமதி சரிந்துவிடுமோ என்ற அச்சத்தில் ஊடகங்களின் ‘பத்திராதிபர்கள்’ தவறான செய்திகளை வேண்டுமென்றே பிரசுரிப்பதிலும், மக்களைத் தேவையில்லாது எரிச்சல் படுத்துவதிலுமிருந்து கவனமாக ஒதுங்கியிருந்தார்கள். அப்படியிருந்தும் “கட்டுக்கதைகளை மேற்கோள்காட்டி” லாவகமாக மக்கள் அபிப்பிராயங்களை மாற்றுவதில் இன்னமும் சில பங்குச்சந்தை ஊடகங்கள் செய்துவருகின்றன. ஆனால் தனி மனித உடமைகளான ஊடகங்கள் இப்போதும் தாம் விரும்பிய வகையில் செய்திகளைத் திரித்தும், உருவாக்கியும், புரட்டிய்ம் பரப்புரைகளைச் செய்து வருகின்றன. அமெரிக்காவின் Fox தொலைக்காட்சி இதற்கு முக்கியமானதொரு உதாரணம். தீவிர வலதுசாரி, இனத்துவேஷம், வெள்ளைத் தீவிரவாதம் சார்ந்த விடயங்களைப் பரப்புவதில் அது முன்னணியில் இருக்கிறது. இலங்கையில் ராஜபக்சக்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு அவர்களுக்கு ஆதரவான ‘அத தெரான’ என்ற தனி மனிதர் ஒருவருக்குச் சொந்தமான ஊடகமும் காரணமாக இருந்ததெனக் கூறுவார்கள்.

இப்போது, பங்குதாரர்களுக்குச் சொந்தமான ருவிட்டர் குறுஞ்செய்தித் தளத்தை $44 பில்லியன் டாலர்களைக் கொடுத்து தனி மனிதரான இலான் மஸ்க் வாங்கியிருக்கிறார். ‘ருவிட்டர் ஒரு பணம் பண்ணும் ஊடகம்; அதை ஒரு வியாபார முயற்சியாகப் பார்க்க வேண்டும்’ எனச் சிலர் கூறலாம். அதில் உண்மை இல்லாமலுமில்லை. ஆனால் இலான் மஸ்கின் சமீப கால பகிரங்க அரசியல் முனைப்புகளையும், தலையீடுகளையும், தர்க்கங்கள், குதர்க்கங்கள் போன்றவற்றையும் பார்க்கும்போது ருவிட்டரை அவர் வாங்கியதன் பின்னால் ஒரு முக்கிய நோக்கமிருப்பதாகவே படுகிறது.

ருவிட்டர் என்ற குறுஞ்செய்தித் தளம் பெரும்பாலான அரசியல்வாதிகள், பணக்காரர், பிரபலங்கள், புதுமை செய்பவர்கள் எனப் பலராலும் பாவிக்கப்படுமொன்று. இலான் மஸ்க், டொணால்ட் ட்றம்ப் ஆகியோர் இதன் முன்னணிப் பாவனையாளர்கள். இலான் மஸ்க்கை ருவிட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 83 மில்லியன். அவர் வாய் திறந்தால பங்குச் சந்தைகளும் முதலீட்டாளர்களும் நடுக்கம் காண்பது வழக்கமாகி விட்டது. பங்குச் சந்தை முதலீட்டாளர்களைனால் உருவாக்கப்பட்ட ரெஸ்லா நிறுவனத்தால் தான் அவர் இப்போது உலகின் முதல் நிலைத் தனவந்தராக இருக்க முடிகிறது. அவர் வாய் திறந்ததால் பங்குச் சந்தை அலறியதைக் கண்டு அமெரிக்க முதலீட்டு கண்காணிப்பு ஆணையம் (Securities Commission) அவர் மீது சட்ட நடவடிக்கை எடுத்திருக்கிறது. ஆனாலும் அவர் எதற்கும் மசிவதாகவில்லை. மஸ்க்கின் இந்த திமிருக்குப் பின்னால் இருப்பது அவரது பணமும், தொடர்ந்துவரும் வெற்றிகளுமே.

ருவிட்டரின் தற்போதைய ஒருநாட்-பாவனையாளரின் எண்ணிக்கை 217 மில்லியன். ஒப்பீட்டளவில் முகநூல், வட்ஸப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றின் பாவனையாளர் பில்லியன் கணக்கில் உள்ளனர். எனவே வருமான ரீதியாக ருவிட்டர் ஒரு திறமான சாதனமல்ல. ஆனால் முகநூல் போன்றவை இன்னமும் பங்குச்சந்தைக் கண்காணிப்புக்குள் அடங்குவன. அவற்றின் முகவர் அடிக்கடி அரசுகளால் விசாரிக்கப்படும் ஒருவர். இதை விரும்பாமையால் தான் மஸ்க் ருவிட்டரைத் தனிமனித உடைமையாக்கினார். அதன் வருமானத்தை $217 மில்லியனிலிருந்து $217 பில்லியனாக்கும் திறமை அவரிடமுண்டு. அதுவே அச்சம் தருவது.

தொழில்நுட்ப உலகில் துணிச்சலான புதுமைகளைச் செய்துவரும் சிலரில் முன்னணியில் இருப்பவர் இலான் மஸ்க். ரெஸ்லா என்ற மின்வாகனத் தயாரிப்பு, SpaceX என்னும் விண் பயண முயற்சி, உலக தொலைத் தொடர்பு சாதன விஸ்தரிப்பு, சூரிய ஒளித் தகடுகள் தயாரிப்பு எனப் பலதுறைகளிலும் துணிச்சலாகக் கால்பதித்து வெற்றிகளைக் குவித்துவரும் அவரிடம் பணமும் குவிந்து வருவது ஆச்சரியப்படும் ஒரு விடயமல்ல. அதியுச்ச பணக்காரராக ஆகிவிட்ட அவரது அடுத்த நகர்வு அரசியல் பிரவேசமோ என்று சந்தேகம்படுமளவுக்கு அவரது சமீபகால கருத்து வெளிப்பாடுகள் இருக்கின்றன. இக் கருத்துக்களை வெளியிட அவர் பாவித்துவரும் கருவி ருவிட்டர். ஆனால் ருவிட்டரின் செய்தித் தணிக்கைகள் போன்ற கட்டுப்பாடுகளை ஏற்க அவர் தயாரில்லை. டொணால்ட் ட்றம்ப் போன்ற தனிமனித சுதந்திரக் காப்பாளர்களை ருவிட்டர் தனது கணக்கிலிருந்து நீக்கிவிட்டது மஸ்கிற்கு எரிச்சலை உண்டுபண்ணியிருந்தது.

இப் பின்னணியில், சமீபத்தில் மஸ்க் ருவிட்டர் தளத்தில் ஒரு கேள்வியைத் தனது விசிறிகளிடம் கேட்கிறார். “ருவிட்டரின் செய்தித் தணிக்கைகள் போன்ற கட்டுப்பாடுகளுடன் உடன்படுகிறீர்களா”. சுமார் 70% மான அவரது விசிறிகள் ருவிட்டரின் நடவடிக்கைகள் மீது உடன்படவில்லை. ருவிட்டர் உலகம் நடுங்க ஆரம்பித்தது. ருவிட்டரைப் போல புதியதொரு குறுஞ்செய்தித் தளத்தை இலான் மஸ்க் ஆரம்பிக்கப் போகிறார் என்ற செய்தி காட்டுத் தீ போல் பரவியது. இதே வேளை டொனால்ட் ட்றம்பும் தன் பாட்டுக்கு ஒரு குறுஞ்செய்தித் தளத்தை உருவாக்கி வருகிறார் என்ற செய்தியும் சேர்ந்து ஓடியது. இச் செய்திகளின் பின்னணி என்ன என்பதன் உண்மை இப்போதுதான் தெரியவருகிறது.

இலான் மஸ்கிற்கு ருவிட்டர் மீது நீண்ட நாட்களாக ஒரு கண். அது பணம் சார்ந்ததா அல்லது அரசியல் சார்ந்ததா என்பதைப் பின்னர் பார்க்கலாம். ருவிட்டரைத் தான் வாங்கப் போகிறேன் என்ற செய்தி பரவினாலே அதன் பங்குகளின் விலை வானைத் தொட்டுவிடும். எனவே தனது ‘விசிறிகளுக்கு’ விடுத்த கேள்விக்கணை மூலமும், அவர் புதியதொரு தளத்தை உருவாக்கத் திட்டமிடுகிறார் என்ற ‘சந்தேகம்’ உருவாக்கப்பட்டது. இதனால் ருவிட்டரின் பங்குகளின் விலைகளைச் சரியச் செய்யலாம், அதைத் தொடர்ந்து அம்முழுப்பங்குகளையும் வாங்கிவிடலாம் என்பதும் (hostaile takeover) அவரது நோக்கமாக இருந்திருக்குமா? சந்தேகம் தான்.

இதற்கிடையில் மஸ்க் உருவாக்கவிருக்கும் ‘புதிய தளம்’ open source என்ற மென்பொருளைக் கொண்டு கட்டியெழுப்படும் ஒன்றாக இருக்கவேண்டுமெனவும் இதன் மூலம் பாவனையாளர்களின் பிரத்தியேக தகவல்களை நிறுவனம் திருட முடியாது எனவும் அவரது விசிறி ஒருவர் மஸ்க்கிடம் ‘கோரிக்கை’ விடுகிறார். ருவிட்டர், முகநூல் மோன்ற இன்னோரன்ன தளங்கள் பாவனையாளர்களின் பிரத்தியேகத் தரவுகளை உருவி விற்பனை செய்வதன் மூலமே (data mining) பணத்தைக் குவிக்கின்றன. எனவே ‘மக்கள் செல்வனான’ மஸ்க் உருவாக்கவிருக்கும் இப் புரட்சிகரமான நிறுவனம் மக்களது அபிலாட்சைகளுக்கு எதிராக இருக்காது என்ற ஒரு மாயையை அவர் தனது விசிறிகளின் மூலமாக வெளிக்கொணர்ந்தாரா? தெரியாது ஆனால் அவரது கடந்தகால நடவடிக்கைகள் அதை உறுதிசெய்வது போலவும் இருக்கிறது.

இப்போது தெரிகிறது இதுவெல்லாம், ருவிட்டரை ‘மடக்குவதற்கு’ அவர் கையாண்ட உத்திகள். பாவனையாளர்களின் ‘தகவல்களை’ உருவாத ருவிட்டரால் எப்படி வருமானத்தை உருவாக்க முடியும்? எனவே ருவிட்டரின் பங்குதாரரை அச்சப்படுத்தி அதைக் கையகப்படுத்துவதற்காக இலான் மஸ்க் கையாண்ட நாடகமே அவர் விசிறிகளை நோக்கி அடித்த உடுக்கும் அவர்கள் கொண்ட உருவும். இப்படிச் செய்வது இலான் மஸ்க்கிற்குப் புதிய விடயமேயல்ல. அவ்வப்போது சந்தைகளை உருக்கொள்ளச் செய்யவும், அரச நிர்வாகங்களைப் பணியச் செய்யவும் அவர் தனது உடுக்கைப் பலதடவைகள் அடித்திருக்கிறார். இதையெல்லாம் நமது ‘ராஜரட்ணங்களால்’ செய்ய முடியாது என்பது பெரும் சோகம்.

ஃபிரீடம் கொன்வோய், லிபற்றேறியனிசம், வெள்ளை மேலாதிக்கம் என்ற பல பெயர்களின் பின்னால் ஒளிந்திருக்கும் இனத்துவேசம் அணிந்திருக்கும் வெளியாடைதான் ‘தனிமனித சுதந்திரம்’. (இச் சொற்களை வேண்டுமென்றே தமிழில் தருவதற்குக் காரணமுண்டு). உலகம் முழுவதும் இந்த வெள்ளை மேலாதிக்கம் வேகமாக மீளெழுச்சி கொண்டுவருகிறது. இப் புதிய தலைமுறையின் தலைவனாக நமது ‘மக்கள் செல்வன் மஸ்க்’ உருவாகவில்லை என்பதை மறுப்பதற்குப் போதிய ஆதாரங்கள் இல்லை.

சமீபத்தில் வெளியான செய்தி ஒன்றில் கலிபோர்ணியாவிலுள்ள ரெஸ்லா வாகனத் தொழிற்சாலையில் வெள்ளையரல்லாதோர் இழிவாக நடத்தப்படுவதும் அப்படி நடத்தப்பட்ட ஒரு கறுப்பினத்தவரின் நீதிமன்ற வழக்கின் காரணமாக ரெஸ்லா நிறுவனம்$135 மில்லியன் நட்ட ஈட்டை அவருக்கு வழங்கவேண்டுமென்று தீர்ப்பு வழங்கப்பட்டதையும் வாசகர்கள் அறிந்திருக்கலாம். ரெஸ்லா நிர்வாகத்துக்கு எதிராக அதன் வெள்ளையராலாத பணியாளர்களால் இதே போன்று நூற்றுக்கணக்கான முறைப்பாடுகள் செய்யப்பட்டிருந்தும் அவற்றில் சில மட்டுமே நீதிமன்றங்களை எட்டிப்பார்த்தன. ரெஸ்லா நிறுவனத்தின் சான் பிரான்சிஸ்கோ தொழிற்சாலையில் பணிபுரியும் கறுப்பினத்தவர்கள் 4% மட்டுமே. அவர்களின் பணி கழுவித் துடைப்பதும் குப்பை கொட்டுவதும். இப்பணியாளர்களை அசிங்கமான வார்த்தைகளால் வெள்ளையர்கள் அழைப்பதும் திட்டுவதும் சாதாரணம். இவற்றையெல்லாம் ‘தனிமனித பேச்சுச் சுதந்திரம்’ என அழைக்கும் இலான் மஸ்க்கின் கைகளில் பிரபலமான ஊடகம் ஒன்று மாட்டிக் கொள்வது உலகின் அடுத்த இனப்போர் ஒன்றுக்கான ஆரம்பம் என்றே பார்க்கவேண்டியுள்ளது.

“பேச்சுச் சுதந்திரம்” என்ற பெயரில் சமூக ஊடகங்கள் கட்டுப்பாடற்ற செய்திப் பரிவர்த்தனைகளை அனுமதிப்பதை சர்வதேச ஊடகவியலாளர்கள் ஒன்றியம் எதிர்க்கிறது. அது ஊடகவியல் தர்மத்தைப் பலவீனமாக்கும் எனக் கவலை கொள்கிறது. இக்காரணங்களுக்காக அது இலான் மஸ்க்கின் ருவிட்டர் கையாடலைப் பலமாகக் கண்டிக்கிறது.

இலான் மஸ்கின் ருவிட்டர் கையாடல் இன்னும் சில மாதங்களில் பூரணப்படுத்தப்படுமெனத் தெரிகிறது. பங்குதாரர்களின் கட்டுப்பாடு இல்லாமையால், சமூகக் கடமையைத் துறந்து அது, தான் விரும்பிய விடயங்களை, விரும்பிய வகைகளில் வெளியிட ஆரம்பிக்கும். துரும்பரது கணக்கும் மீளவும் துடிக்கவாரம்பிக்கும். தனிமனித சுதந்திரம் என்ற பெயரில் பிரான்ஸ் நாட்டின் மேரி லுபென், கேனான், கே.கே.கே. போன்றோரின் செய்திகள் முக்கியத்துவம் பெறும். எல்லைகளற்ற வெறுப்புணர்வுப் பிரச்சாரங்களுக்கு ருவிட்டர் மேடையமைத்துக் கொடுக்கும். கைநிறையப் பணமும், மனம் நிறையத் திமிரும், கையசைத்தால் தலையசையும் பரிவாரமும் கிடைக்கும்போது இலான் மஸ்க்கும் தானுமொரு ஹிட்லர் என நினைக்கும் காலம் வரக்கூடும். கவனமாக இருங்கள்.