விலகிக் கொள்ளுங்கள்! – ரணில் விக்கிரமசிங்க மீண்டும் பாராளுமன்றத்துக்கு வருகிறார்?
மாயமான்
அவர் வருவார் என்பது தெரியும் ஆனால் எப்போது என்பதுவே கேள்வியாகவிருந்தது. இப்போது அது உறுதியாகிவிட்டது. அவர் நிச்சயமாக வருகிறார். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்காவைத் தேசியப் பட்டியலில் நியமன உறுப்பினராகப் பாராளுமன்றத்துக்கு அனுப்ப கட்சியின் செயற்குழு தீர்மானித்து விட்டது. எனவே அவர் வருகிறார்.
ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்தாலோசித்ததன் பின்னர் இம் முடிவு எடுக்கப்பட்டதாக, கட்சி உள்வட்டத் தலைவர்களை மேற்கோள்காட்டி ‘கொலொம்பொ கசெட்’ இணையத்தளம் செய்தி வெளியிட்டிருந்தது. உண்மை அதுதானா? அல்லது ரணில் விக்கிரமசிங்கதான் செயற்குழுவிடம் அடம் பிடித்து வெறுமையாக வைக்கப்பட்டுத் தூசி தட்டப்பட்டுக்கொண்டிருந்த தேசியப்பட்டியல் கதிரையில் தானாக உட்கார்ந்தாரா என்பது – மனோ கணேசன் முகப்புத்தகத்தில் பதியும்வரை – தெரியாது.
ஆனால் அவர் வரவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
நந்தவனத்து ராஜபக்ச ஆண்டிகள் நாலைந்து வருடங்களாய் சீனாவை வேண்டிக் கொண்டுவந்த தோண்டியைத் துறைமுக நகரத்தில் போட்டுடைப்பார்கள் என்பது எவராலும் எதிர்பார்க்கப்படவில்லையாயினும் கொழும்பின் கட்டிடக் காட்டு நரியார் விக்கிரமசிங்க நிச்சயம் எதிர்பார்த்திருப்பார் என நம்பலாம். புள்ளிகளை இணைப்பதில் வல்லவரான ரணிலுக்கு எது சத்தம், எது இரைச்சல் என்பதைப் பிய்த்துணரும் அரசியல் அனுபவம் நிறைய இருக்கிறது.
சஜித் பிரேமதாசவும் தோண்டியை விரைவில் போட்டுடைப்பார் என அவர் நிச்சயம் எதிர்பார்த்திருப்பார். சஜித்தின் கைகளில் தோண்டியை ஏற்றிவிட்டு மங்கள சமரவீரா நைசாகக் கழன்றபோதே எல்லோருக்கும் தெரியும் இந்த வண்டி வீடு வந்து சேராது என்று.
நரியார் எதிர்பார்த்தபடி காட்டை ஆள்வதற்கு, இப்போதைக்கு எவருமில்லை. எனவே அவர் மெதுவாக ஆடி அசைந்துகொண்டு வருகிறார். விரைவில், தேரர்கள் ஒரு பக்கமும், ஜே.வி.பியினர் இன்னொரு பக்கமுமாக நின்று தாமரம் வீச, அவரும் பூகோள, யதார்த்த அரசியல் வகுப்புக்களை எடுக்கலாம். கொரோணாவும் கடமையை முடித்துக்கொண்டு வூஹான் திரும்பலாம்.
ரணிலின் தலைமை பற்றி ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளும் பலத்த குரல்களில் விவாதங்கள் எழுந்தாலும், ராஜபக்சக்களோடு ஒப்பிடுகையில் ‘அப்பே தெய்யோ’ எனக் கொண்டாடப்படும் ஒருவராக – இந்தச் சிறு காலத்தில் – ரணில் சும்மா இருந்துகொண்டே வளர்ந்து விட்டார்.
எனவே அவர் வருவது நாட்டுக்கு நல்லது. அவர் வருவதால் தமிழருக்கு நல்லது நடக்குமோ தெரியாது ஆனால் ராஜபக்சக்களை அகற்றுவதால் தமிழருக்கு நல்லது நடக்குமானால், அதைச் செய்துகொள்ள யார் வந்தாலும் நமக்கு நல்லது.
அவரது நகர்விற்குப் பின்னால் சில வெளிநாட்டு சக்திகள் இருக்கின்றனவென விரைவில் ராஜபக்ச கூசாக்கள் கூவக்கூடும். இருந்தாலென்ன?
ருவான் விஜேவர்த்தன ஒரு பொறுமைசாலி.
Everything happens for a reason –
一切发生的原因
இலங்கையின் தேசிய மொழிகளில் ஒன்றான சீன மொழியிலும் ஏதாவது சொல்ல வேண்டுமே…அது தான். முடிந்தால் மொழிமாற்றம் செய்து பாருங்கள்….!