• Post category:WORLD / HEALTH
  • Post published:May 3, 2020
Spread the love

96 மில்லியன் சனத்தொகை, உலகின் அதி கூடிய சனத்தொகையுள்ள நாடுகளில் 15வது இடத்திலுள்ள நாடு, முதலாவது கோவிட்-19 தொற்று ஆரம்பித்த சீனாவுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் நாடு, பிரஞ்சுக் காலனியாக இருந்ததனால் பல வெளிநாட்டுப் பயணிகள் வந்து போகும் நாடு. கோவிட் நோய் பரவுவதற்கான பல சூழல்களைக் கொண்ட வியட்நாமில் 270 தொற்றுக்கள்; ஒரு இறப்புமில்லை! எப்படிச் சாத்தியமானது?

இது பற்றி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் விரிவான கட்டுரை ஒன்றைப் பிரசுரித்திருக்கிறது.

வியட்நாமின் வெற்றிக்கு மூன்று அடிப்படைக் காரணங்கள் உண்டு. 1). உடனடி நடவடிக்கை 2). தீர்க்கமான நடவடிக்கை 3). உலக சுகாதார நிறுவனத்தின் ஆலோசனகளையும் வழிகாட்டல்களையும், சில விடயங்களில் அவற்றை மீறியும், பின்பற்றியது.

ஒப்பீட்டளவில், இன்று மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகள், குறிப்பாக அமெரிக்கா, மேற்கொள்ளத் தவறிய மிக முக்கியமான மூன்று விடயங்களையும் வியட்நாம் பின்பற்றியது. இம் மூன்று நடைமுறைகளையும் பின்பற்றிய மற்ற நாடுகள், தென், வட கொரியாக்கள்.

ஜனவரி 28 இல் வியட்நாமில் அறியப்பட்ட தொற்றுக்கள் இரண்டே இரண்டு மட்டுமே. உடனேயே அரசாங்கம் எடுத்த நடவடிக்கை, பல்லாயிரக் கணக்கானோர் தொற்றுக்குள்ளாகியதற்குச் சமமானது.

அடுத்துவரும் வாரங்களில் வியட்நாம் பல ‘வருமுன் காப்போம்’ (proactive measures) திட்டங்களை நடைமுறைப்படுத்தியது. இவற்றில் சில உலக சுகாதார நிறுவனம் விடுத்த ஆலோசனைகளையும் மீறி அதற்கும் மேலாக இருந்தன. இவற்றில் ஒன்று, முகவாய்க் கவசம் அணிவது மற்றது, சர்வதேச பயணங்கள். இந்த இரண்டு விடயங்களிலும் உலக சுகாதார நிறுவனம் வழங்கிய ஆலோசனைக்கு எதிராகத் தன் மக்களுக்கு முகவாய்க் கவசம் அணிய வேண்டுமென்ற கட்டளையையும், சர்வதேச பயணங்களைக் கட்டுப்பாடுகளை விதித்தும் நடைமுறைகளை அறிவித்தது.

வியட்நாமில் சிகிச்சைக்கான வசதிகள் மிகக்குறைவு. அதனால் பெருந்தொகையான பரிசோதனைகளை மேற்கொண்டும், நோய்த் தொற்றுள்ளவர்கள் என அறியப்பட்டவர்களுடன் தொடர்பானவர்களைத் தேடிப்பிடித்தும் சிகிச்சைக்கான தேவைகளைக் குறைத்துக் கொண்டது. 17 வருடங்களுக்கு முன்னர் சார்ஸ் வந்தபோது கடைபிடித்த நடவடிக்கை அது. ஏப்ரல் 30 வரை வியட்நாம் 261,004 பேரில் பரிசோதனைகளை மேற்கொண்டது; பல்லாயிரக்கணக்கானவர்களைத் தனிமைப்படுத்தியது.பரிசோதனைகளும், தொற்றியோரைத் தேடிப்பிடித்தலையும் அவர்கள் நான்கு படிநிலைகளில் பிரயோகித்தார்கள். 1). தனிமைப்படுத்தி மருத்துவமனைகளில் சிகிச்சையளித்தல் 2). தனிமைப் படுத்தல் 3). வீடுகளில் சுய தனிமைப்படுத்தல் 4). குடியிருப்புகள், கிராமங்கள், நகரங்களை முடக்குதல்.

இத் திட்டத்தின்படி ஒரு தொற்றாளர் அடையாளம் காணப்பட்டால் அவரோடு தொடர்புகொண்ட 800 பேர்கள் பரிசோதிக்கப்பட்டனர். இதற்காக அவர்கள் உலக சுகாதார நிறுவனம் தந்த வழிகாட்டல்களின் பிரகாரம் தமது சொந்த பரிசோதனைக் கருவிகளைத் தாமே தயாரித்திருந்தனர். இக் கருவிகளை அவர்கள் ஐரோப்பா, அமெரிக்கா போன்ர நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்திருந்தார்கள்.

இத்தனை உயிர்களையும் பாதுகாத்த தமது நாட்டிற்கு அதன் மக்கள் கொடுத்த பரிசு, தெருக்களில் நின்று பதாகைகளுடன் நின்று ஆர்ப்பட்டம் செய்ததல்ல, மாறாக தமது பிரத்தியேகத்தை அவர்கள் விட்டுக்கொடுத்தார்கள். எப்படி?

ஒருவர் வைரஸ் தொற்றுள்ளவர் என்று கண்டுபிடிக்கப்பட்டால் அவர் மேற்கொண்ட பயணப்பாதைகள், தரித்த இடங்கள், தொடர்புகொண்டவர்கள் பற்றிய அத்தனை விடயங்களும் சவலைத்தளங்களிலும், உள்ளூர்ப் பத்திரிகைகளிலும் பகிரப்பட்டுவிடும். அதன் மூலம் அவரோடு தொடர்பு கொண்டவர்கள் அனைவரையும் தொடர்புகொள்ளவும் எச்சரிக்கை செய்யவும் வழி செய்ததாகிறது. அத்தோடு அரசு ஒரு mobile app ஒன்றையும் வெளியிட்டிருந்தது. அதன் மூலம் தொற்று ஏற்பட்டவர்களின் விடயங்களும், அவர்களது வதிவிடங்கள் பற்றிய விடயங்களும் அரசுக்குத் தெரிந்துவிடும். அத்தோடு நாட்டுக்குள் நுழையும் எவரும் தங்கள் விபரங்களைக் கொடுக்க வேண்டும். பொய்யான விபரம் கொடுக்கப்பட்டது தெரிந்தால் அது தண்டனைக்குரிய குற்றம்.

இந் நடவடிக்கைகள் மக்களின் தனிப்பட்ட வாழ்வில் தலையிடுவதாகக் குற்றம் சாட்டலாம். ஆனால் இதே நடேமுறைகளைச் சுதந்திர நாடுகள் பல்லாண்டுகளாகப் பின்பற்றி வருகிறார்கள், ஆனால் இரகசியமாக. வியட்நாம் ஒரு கட்சி ஆட்சியுள்ள நாடு. இங்கெல்லாம் எதையும் எதிர்க்க ஆட்கள் இல்லை. போர்களையும், சார்ஸையும், பன்றிக்காய்ச்சலையும் வெற்றிகரமாகக் கடந்துவந்த நாடு.

நோய்த் தொற்று ஆரம்பித்த நாட்களில் வியட்நாம் கோவிட்-19 தொற்றை ஒரு ‘எதிரியாகவே’ கணித்து அதன் மீதான போரைத் தொடுத்தது. மருத்துவர்களும், தாதிகளும் ‘போர்வீரர்களாக’ அறிவிக்கப்பட்டனர். இப்போருக்கான ‘கட்டுப்பாட்டு மையம்’ ஒன்றும் அமைக்கப்பட்டது. தேசத்தின் நோய்க்கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்காக நிதியும் சேர்க்கப்பட்டது. சமூக வலைத்தளங்கள், அரச ஊடகங்கள் இதற்கு உதவின. தொற்று நிலைமைகள் தினமும் சமூக வலைத் தளங்களின் மூலம் மக்களுக்கு அறிவிக்கப்பட்டன. மக்களும் அரசின் இந்த முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கினர்.

முடிவு, மக்களின் தெருச் சந்திகளில் எதுவித பதாகைகளும் இல்லாமல், வைரஸுக்கு எதிராக அமைதியாகத் தொடக்கி வைக்கப்பட்ட போர், எந்தவித உயிரிழப்புகளும் இல்லாமல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

இக் கட்டுரைக்கான மூலம்: வியட்னாமிய சுயாதீன பத்திரிகையாளர் ட்றாங்க் புயி


Print Friendly, PDF & Email