விம்பிள்டன் பிரபு ராறிக் அஹமெட் இலங்கை வருகை

வடக்கு கிழக்கு ஆளுனர்களையும் சந்திப்பார்

“ஐக்கிய ராச்சியத்தில் வாழும் இலங்கைச் சமூகங்கள் தனித்துவமானவை; பிரித்தானியாவின் செழிப்பிற்கு அவை சிறப்பான பங்காற்றி வருகின்றன” என பிரித்தானிய அமைச்சரும், விம்பிள்டன் பிரபுவுமான ராறிக் அஹமெட் அவர்களின் இலங்கை வருகை தொடர்பாக இரு நாடுகளும் கூட்டாக விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளன.

தென்னாசியா, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான ராஜாங்க அமைச்சர், விம்பிள்டன் பிரபு ராறிக் அஹமெட், மூன்று நாள் பயணத்தில் இலங்கை வந்துள்ளார். அவரது வருகையையொட்டி வெளிவிவகார அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்ற வரவேற்பின்போது பிரித்தானிய தூதரக அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

பிரபு அஹமெட் பிரித்தானிய தூதுவர் சேரா ஹல்டனுடன்

இச் சந்திப்பின்போது, இன நல்லிணக்க முயற்சிகளில் ஏற்பட்டுவரும் முன்னேற்றாங்கள், மனித உரிமைகள் விடயத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள், சுயாதீன ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள், பயங்கரவாதத் தடைச்சட்டம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுவரும் திருத்தங்கள், பொது நிறுவனங்களின் நிர்வாகம், உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறும் பொறிமுறை, ஐ.நா. மனித உரிமைகள் சபை உட்பட்ட ஐ.நா. அங்கங்களுடனுள்ள தொடர்ச்சியான ஈடுபாடு ஆகியவை பற்றி, இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரீஸ் விம்பிள்டன் பிரபுவிற்கு எடுத்துரைத்தார்.

அதே வேளை, பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் பிரித்தானியா வழங்கிவரும் தொடர்ச்சியான ஆதரவுக்கும், விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை நீடித்தமைக்கும் இலங்கை அரசாங்கத்தின் நன்றியை அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார்.

இலங்கையிலுள்ள தாதிகள், மருத்துவர்கள் போன்ற சுகாதாரப் பணியாளர்களுக்கு பிரித்தானியாவில் வேலைகளை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றும் இச்சந்திபின்போது கைச்சாத்திடப்பட்டது.

இரண்டாவது தடவையாக இலங்கை வரும் விம்பிள்டன் பிரபு, ஜனாதிபதி ராஜபக்ச, நிதியமைச்சர் ராஜபக்ச, எதிர்க்கட்சித் தலைவர் பிரேமதாச, வடமாகாண ஆளுனர் ஜீவன் தியாகராஜா, கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா ஜகம்பத் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார். இச்சந்திப்புகளின்போது இலங்கைக்கான பிரித்தானிய தூதுவர் சேரா ஹல்டன் மற்றும் தூதரக் அதிகாரிகளும் கலந்துகொள்வர்.