Sri Lanka

விமான நிலையத்தில் ஜனாதிபதி ராஜபக்ச-வெளிநாடொன்றில் தஞ்சம்?

பதவி விலகல் கடிதத்தில் கையெழுத்திட்டுவிட்டார்

இலங்கையின் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச அவரது பரிவரங்களுடன் இரண்டு பெல் 412 உலங்கு வானூர்திகளில் கட்டுநாயக்கா விமானத் தளத்திற்கு அருகேயுள்ள விமானப்படைக்குரிய தளமொன்றிற்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளதாகவும் வெளிநாடொன்று அவருக்குப் புகலிடம் தருவதற்குத் தயாராகவுள்ளதாகவும் உயரதிகாரிகளை மேற்கோள்காட்டி ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

சனியன்று, ஆர்ப்பாட்டக்காரரின் முற்றுகைக்கு முன்னதாக, கடற்படையினரின் பாதுகாப்போடு ஜனாதிபதி மாளிகையிலிருந்து வெளியேறி கடற்படைத் தளமொன்றில் மறைந்திருந்தார். இதைத் தொடர்ந்து “ஜனாதிபதி நாட்டை விட்டுத் தப்பி விட்டார்” எனவும், ஜூலை 13 (புதன்) அன்று அவர் பதவி விலகுவதுடன் அமைதியான முறையில் பதவி கைமாறப்படுமெனவும் சபாநாயகர் அறிவித்திருந்தார். நேற்று, சபாநாயகர் தான் தவறாகச் சொல்லிவிட்டேன் எனவும் ஜனாதிபதி நாட்டைவிட்டு எங்கும் போகவில்லை எனவும் அவர் குறிப்பிட்டபடி பதவி விலகுவார் எனவும் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். தற்போது ஜனாதிபதியின் கட்டுநாயக்கா பயணம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

ஜனாதிபதி தனது குடும்பத்தாருடன் துபாய்க்குச் செல்லலாம் என் உள்ளூர் ஊடகங்கள் ஊகம் தெரிவித்துல்ளன.

ஜனாதிபதி உத்தியோகபூர்வமாகப் பதவி விலகியவுடன் தற்போதைய பிரதமர் தற்காலிக பதில் ஜனாதிபதியாகப் பதவியேற்க வேண்டுமென்று அரசியலமைப்பு வரையறுக்கின்றது. இதைத் தொடர்ந்து பாராளுமன்றம் தெரிவுசெய்யும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், நவம்பர் 24 வரை, மீதியாக இருக்கும் பதவிக்காலத்தில் ஜனாதிபதியாகப் பணியாற்றுவார். அதே வேளை எதிர்க்கட்சிகள் தமக்குள் இணக்கம் காணூவார்களேயானால் தானும் பதவி விலகத் தயாராக இருப்பதாக பிரதமர் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மூன்ற் நாட்களிலிருந்து 30 நாட்களுக்குள் இம் மாற்றங்கள் நடைபெற வேண்டுமென்பது சட்டம்.

இதே வேளை, ஜனாதிபதி பதவி விலகும்வரை தாம் ஜனாதிபதி மாளிகையை விட்டு விலகப் போவதில்லை என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளார்கள்.