Sri Lanka

வித்யா கொலை விவகாரம் | விஜயகலா மகேஸ்வரன் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையில் சாட்சியமளிக்க ஆணை!


அரசியல் காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட பழிவாங்கல்களை விசாரணை செய்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழு, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ராஜாங்க அமைச்சருமான திருமதி விஜயகலா மகேஸ்வரன் மற்றும் குமரன் சர்வானந்தா அவர்கள், செப்டெம்பர் 17 அன்று தம்முன் சாட்சியமளிக்கவேண்டுமென ஜனாதிபதி ஆணைக்குழு ஆணை பிறப்பித்திருக்கிறது.

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முன்னர் கடமையாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் ஞானலிங்கம் மயூரன் அவர்கள் ஆணைக்குழுவில் அளித்திருந்த சாட்சியம் தொடர்பாகவே ஜனாதிபதி ஆணைக்குழு இவ்வாணையைப் பிறப்பித்திருக்கிறது.

இன்று (செப்டெம்பர் 05) ஜனாதிபதி ஆணைக்குழு முன் பொலிஸ் உத்தியோகத்தர் ஞானலிங்கம் அளித்த சாட்சியத்தின்போது, சிவலோகநாதன் வித்யா என்பவரின் கூட்டு வன்புணர்வுக் கொலையில் முக்கிய சந்தேகநபரான சுவிஸ் குமார் எனப்படும் மகாலிங்கம் சசிகுமாரை விடுதலை செய்வதில் விஜயகலா மகேஸ்வரன் நேரடியாகத் தலையிட்டிருந்தார் எனக் கூறியிருந்தார்.

அத்தோடு, சுன்னாகம் பகுதியில் நடைபெற்ற களவு தொடர்பாகக் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த ஒருவர் தப்பியோட முயற்சித்தபோது நீரில் மூழ்கி மரணமடைந்த விடயம் தொடர்பாகத் தன்னுடன் சேர்த்து ஐந்து பொலிஸ்காரர்களைச் சிறைக்குள் தள்ளியதன் பின்னணியில் விஜயகலாவே உள்ளார் எனவும் ஞானலிங்கம் தனது சாட்சியத்தின்போது கூறியிருந்தார்.