விண்பாறையத் திசை திருப்பிய நாசாவின் விண்கலம்
பூமியை நோக்கி வேகமாக வந்துகொண்டிருக்கும் விண் பாறைகளைத் திசை திருப்புமுகமாக அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தினால் (நாசா) பரீட்சார்த்த முயற்சியாக அனுப்பப்பட்ட ‘டார்ட்’ (DART) என்னும் விண்கலம் அதன் இலக்குடன் வெற்றிகரமாக மோதியுள்ளது என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பூமியிலிருந்து 11.3 மில்லியன் கி.மீ. தூரத்தில் நடைபெற்ற இம் மோதலின்போது நாசாவின் விண்கலம் மணித்தியாலத்துக்கு 22,500 கி.மீ. வேகத்தில் பறந்துகொண்டிருந்தது. இம்மோதலைத் தொடர்ந்து விண்பாறையின் மேற்பரப்பு சிதறி அதில் பாரிய குழியொன்று ஏற்படுமென விஞ்ஞானிகள் எதிர்பார்த்த போதிலும் இம் மோதல் பற்றிய படங்களைப் பெறமுடியாமல் போய்விட்டது எனவும் விண்கலத்தின் ரேடியோ சமிக்ஞைகள் திடீரென் நிறுத்தப்பட்டுவிட்டதால் இம் மோதல் பற்றிய முழுமையான தகவல்களை இப்போதைக்குப் பெறமுடியாதுள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் மோதலுக்கு முன்னர் விண்கலம் எடுத்த படத்தில் விண்பாறையின் தரை மிகவும் துல்லியமாகக் காட்டப்படுகிறது
உலகம் முழுவதிலுமுள்ள பல தொலைப்பார்வைக் கருவிகள் இவ்விண்கலத்தையும், விண்பாறையையும் இலக்குவைத்து அவதானித்து வந்தன எனவும் அவற்றின் தரவுகள் கிடைக்கப்பெற்றதும் இப்பாறை எவ்வளவு தூரம் தனது பாதையிலிருந்து விலகிச்செல்கிறது என்பதை அறியமுடியுமெனவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
US$ 325 மில்லியன் செலவில் மேற்கொள்ளப்பட்ட இத் திட்டம் முதன் முதலாக வானில் மிதக்கும் விண்பாறையையோ அல்லது எந்தவொரு பொருளையோ மோதிச்சிதைக்கவோ அல்லது திசை திருப்பவோ முடியும்.

திங்களன்று (செப் 26) மேற்கொள்ளப்பட்ட இவ்விண்பாறைத் திசை திருப்புதல் முயற்சி நாசாவின் முதலாவது முயற்சியாகும். இதன்போது ‘டைமோர்ஃபோஸ்’ (Dimorphos) எனப்படும் 160 மீட்டர் விட்டமுள்ள விண்பாறை இலக்கு வைக்கப்பட்டது. ‘டைமோர்ஃபோஸும்’ அதன் இரட்டைச் சகோதரரான ‘டிடிமோஸும்’ (Didymos) பல யுகங்களாக சூரியனைச் சுற்றிவந்துகொண்டிருக்கும் விண்பாறைகளாகும். இவற்றால் பூமிக்கு உடனடியான ஆபத்து எதுவும் இல்லையெனினும் நாசா அவற்றைத் தனது பரிசோதனை எதிரியாகப் பாவித்து வெற்றி கண்டிருக்கிறது.
கடந்த நவம்பர் மாதம் ஏவப்பட்ட இவ்விண்கலம் ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் விண்ணாய்வுக்கூடத்தினால் தயாரிக்கப்பட்டதுடன் அதன் பயணத்தையும் அதுவே நிர்வகித்திருந்தது.