ArticlesColumnsசிவதாசன்

விட்டுப் பிடியுங்கள்

சிவதாசன்

புலம் பெயர்ந்த தமிழ்ச் சமூகங்களிடையே புரையோடிக் கொண்டிருக்கும் ஆனால் அதிகம் வெளிப்படையாகப் பேசிக்கொள்ளாத முக்கிய பிரச்சினையொன்று பற்றி ஊடகங்கள் தங்கள் பங்கைச் செய்யவேண்டுமென்று நான் விரும்புகிறேன்.

ஏறத்தாழ இரண்டு தசாப்தங்களுக்கு முன்பு ஒரு முதிய நண்பரைச் சந்தித்தபோது அவர் மிகுந்த கவலையோடு கூறிய விடயமிது.

‘என் மகளுக்கு வயது வந்து விட்டது. அவள் இங்கு பிறந்தவள். கல்யாணம் பேசிச் செய்யவும் அவளுக்கு விருப்பமில்லை. தானாகவும் ஒருத்தரையும் பிடிக்கிறாளில்லை. எங்களுக்கும் வயது வந்து விட்டது. எங்களுக்கு ஒண்டு நடந்தா எந்ந செய்யப் போறாளோ தெரியேல்லை’

இப்படியான உரையாடல்கள் சமீப காலங்களில் அடிக்கடி கேட்கப்படுவனவாக உள்ளன. சமூக அக்கறையுள்ள அமைப்புக்களினதும் ஊடகங்களினதும் கடமைகளை நினைவூட்டுபனவாக இவை இருக்கின்றன.

மேற் குறிப்பிட்ட நண்பரின் உரையாடலின் அடுத்த அங்கம் இது.

“நாங்கள் தன்னை வேற தமிழ்ப் பிள்ளைகளோட பழக விடவில்லை. அதனால தான் தன்னால ஒருத்தனையும் பிடிக்க முடியேல்லை’ என்ற மகளின் குற்றச்சாட்டு.

இந்த உரையாடலில் கலாச்சாரம் சம்பந்தப்பட்ட கேள்விகளும் பலவுண்டு.

முதலாவது: ஒருவரது துணையை அவரே தேடிக்கொள்ள வேண்டும் அதுவும் பெண் தனது துணையைத் தானே தேடிக் கொள்ள வேண்டுமென பெற்றோர் எதிர் பார்த்தல்.

இரண்டாவது: தமிழ்ப் பிள்ளைகளோடு பழக விடவேண்டுமென்று பிள்ளைகள் எதிபார்த்தல்.

இதில் ஒரு கொசிறு என்னவென்றால் நண்பரது வாழ்க்கை முறை தமிழர்களைத் தவிர்த்து வாழ்வதாகவே இருந்தது.

முடிவு: அந்தப் பெண் தனது நாற்பதுகளில் தமிழரல்லாத வேற்றினத்தைச் சார்ந்த ஒருவரைத் திருமணம் செய்து கொண்டார். அதற்குக் காரணம் முழுவதையும் சம்பந்தப்பட்டவர்களினது வாழ்க்கை முறைகளிலோ, அவர்களது எதிர்பார்ப்புக்களிலோ அல்லது அவர்கள் சார்ந்து வாழ்ந்த கலாச்சாரத்தின் மீதோ போட்டுவிட வேண்டுமென்பதில்லை. இவைகளெல்லாம் துணைக் காரணிகளாக அமைந்திருக்கவும் சந்தர்ப்பங்களுண்டு.

இன்றய புலம் பெயர் தமிழ்ச் சமூகங்களில் மண வயதை எய்திய பலர் துணைகளற்று மன உளைச்சலோடு (பெற்றோரும், பிள்ளைகளும்) இருக்கிறார்கள் என்பதும் இது தனிப்பட்டோர் பிரச்சினை என்ற நிலையைத் தாண்டி தமிழரின் எதிர்காலம் சார்ந்த பிரச்சினையென அறிவுபூர்வமாக அணுகப்படவேண்டிய ஒன்றாகப் பரிணமித்திருக்கிறது என்பதும் வெளிக்கொணரப்படவேண்டிய விடயங்கள்.

கனடிய தமிழ்ச் சமூகத்தில் இதை ஒரு சமூகப் பிரச்சினையாகப் பிரகடனம் செய்வது முதன்மையானது. அதன் பின்னர் தான் அதற்கான தீர்வுகளைக் காண முயற்சிக்கலாம். இங்குள்ள தமிழர் நலன் பேண் அமைப்புக்களும் ஊடகங்களும் இதற்காக உழைக்க வேண்டும்.

தமிழர் சமூகங்களில் முதியோர் , இளயோர் நலம் பேண்தலுக்கான அமைப்புக்கள் நிறையவுண்டு. அரச மான்யங்கள் இத் தேவைகளுக்காக நிறைய வழங்கப் படுகின்றன. ஆனால் மேற்குறிப்பிட்ட ‘மண வயதுப்’ பிரச்சினைகளுக்கென சமூகப் பணி செய்யவென ஏதாவது அமைப்பு இருக்கிறதா? அல்லது இருக்கின்ற ஏதாவது அமைப்பு முன்வருமா? என்பது கேள்விக் குறி தான். (ஏதாவது அமைப்பு இது குறித்து ஏற்கெனவே இயங்கி வந்தால் மன்னிப்புக் கோருகிறேன்).காதலித்துத் திருமணம் செய்தல், பெற்றோர் நிச்சயித்துத் திருமணம் செய்தல் என்ற இரு பெரும் முறைகளிடையேயான நல்லது கெட்டதுகளைப் பற்றிய ஆராய்ச்சிகள் உலகம் முழுவதும் நடைபெற்றுத் தீர்வுகளேதுமின்றிக் கிடப்பில் கிடப்பதுவும் பலரும் அறிந்ததுதான். ஒவ்வொன்றும் ஒவ்வொரு புறக்காரணிகளுக்கேற்ப வெற்றி கண்டவைதான். காதல் அரும்புவதற்கான கள நிலையற்ற இடங்களில் நிச்சயித்துத் திருமணம் செய்வது தவிர்க்க முடியாதது. ஆனால் புலம் பெயர் சமூகங்களில் இக் களம் மிகவும் பண்பட்ட நிலையில்தான் இருக்கிறது. இங்கு நிச்சயித்துத் திருமணம் செய்ய வேண்டிய தேவை இல்லை. இருப்பினும் எதிர்காலம் பிரகாசமானதாக இல்லை என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. ஆனால் எல்லாமே நான்கு சுவர்களுக்குள் பெருமூச்சுகளாக ஆரம்பித்து மன உளைச்சல்களாக முடங்கிக் கொள்கின்றன.

இந்த ‘மண வயதுப்’ பிரச்சினை ஒரு இருபடிச் சமன்பாடு. இதைத் தீர்த்து வைப்பதற்கு அவ்வப்போ ஒரு தரப்பின் விட்டுக் கொடுப்பு அவசியம்.

மண வயதுத் தமிழ்ப் பெண்களும் ஆண்களும் முன்னரே பேசிப் பழகியிருக்க வேண்டுமென்பதில் இரு சாராரும் உடன்படுகிறார்கள் என்பது உற்சாகம் தரும் விடயம். அந்த அளவில் பெற்றோர் விட்டுக் கொடுக்கப் பழக்கப்பட்டுவிட்டர்கள். ஆனாலும் பல பெரு முயற்சிகளின் பின்னர் பொது இடமொன்றில் ஆண்-பெண் ‘பார்க்க விடப்பட்டு’ பின்னர் ‘பழக விடப்பட்டு’ நிச்சயிக்கப்பட்ட ஒரு திருமணத்தைக் காதற் திருமணமாக உருவாக்குவதில் பல சிக்கல்கள் உண்டு. இப்படியான பல திருமணங்களின் பிற்கூறுகள் பல துயரமான முடிவுகளை எட்டியிருக்கிந்றன.

இந்த நடைமுறையிலும் பெரும்பாலான குடும்பங்களில் பெண்கள் தான் பாதிக்கப்படுபவர்கள். ‘நீயாகவும் பிடிக்க மாட்ட நாங்கள் பார்த்துச் செய்ததையும் வேண்டாமெண்டு சொல்லிற’ என்ற குற்றச்சாட்டுடன் தனிமையாக வாழும் பெண்கள் பலரை நீங்களும் கண்டிருப்பீர்கள்:.

இதில் பெற்றோர்களின் அறியாமை சார்ந்த மனோனிலை என்னவென்றால் அறிமுகப்படுத்தப்பட்ட சில நாட்களில் காதலும் மலர்ந்து ஒருவரையொருவர் புரிந்துகொண்டு விடுவார்கள் என்பதும் தான்.

இங்குதான் சமூகத்தின் கலாச்சாரச் சிந்தனயில் மாற்றம் ஏற்படவேண்டுமென்பதும் அதற்கான கள நிலைகளை அமைப்புகளும் ஊடகங்களும் ஏற்படுத்திக் கொடுக்கவேண்டுமென்பதும் அவசியமாகிறது.

இந்தியாவில் சில மானிலங்களில் மண வயதினர் தமது எதிர்காலத் துணைகளச் சந்தித்துக்கொள்ளும் வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொள்ளும் முகமாக வருடா வருடம் சந்திப்பு நிகழ்வு நடத்தப் படுகிறது. மேற்கு நாடுகளில் சில இனக் குழுமங்கள் தங்கள் தனித் தன்மையைப் பாதுகாக்கவென தம்மினம் சார்ந்த மண வயதினரின் சந்திப்பு நிகழ்வுகளை ஒழுங்கு செய்கின்றனர்.

இதே போன்று இணைய வழிச் சந்திப்புகள் பல திருமணங்களில் முடிந்திருக்கின்றன.

இவைதான் நமது பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் என்பதில்லை. இவைகளும் தீர்வாகலாம்.தோல்விகள், முறிவுகள் என்பனவும் தம்மிடம் நல்ல தீர்வுகளை வைத்திருப்பதுண்டு. அதிலொன்று இளமையின் திமிரினாலோ, அறியாமையினாலோ, அவசர முடிவுகளினாலோ தவறுகள் ஏற்படுவதுண்டு. இதனால் இரண்டாவது சந்தர்ப்பங்கள் பெரும்பாலும் வெற்றியைக் கொடுப்பதுண்டு.

ஆனால் பெற்றோர் சார்ந்த தீர்வொன்றை இங்கு நான் முன்வைக்கிறேன்.

காதல் பரீட்சார்த்தம் நிறைவு பெறுவதற்கு பல வருடங்கள் தேவை. கல்லூரிக் கல்வி முடிவு பெற்றுச் சில வருடங்களில் திருமணத்தை நோக்கிய முயற்சிகளை எடுப்பதே வழக்கம். இந்த இரண்டொரு வருடங்களில் முன்னர் சந்தித்திராத மண வயதினர் தம்மிடையேயான பொருத்தங்களையோ அல்லது ஒவ்வாமைகளையோ கண்டு கொள்ள முடியாது. அதற்குப் பல வருடங்கள் தேவை.

‘படிப்பு முடியுமட்டும் இந்த வேலைகள் வேண்டாம்’ என்ற புரானங்களை நாம் பல வீடுகளில் கேட்டிருக்கிறோம். இது தான் நமது பிரச்சினை.

பட்டங்களைத் தலையில் சுமந்து கொள்வதால் மட்டும் வாழ்வு தளைத்து விடாது. பருவத்தே பயிர் செய் என்பது இதற்கும் பொருந்தும்.

கல்லூரிக் காலங்களில் முகிழ்க்கும் காதல்கள் பல மகிழ்வான முடிவுகளை எய்தியிருக்கின்றன். எல்லாக் காதல்களும் கல்வியைத் தடுப்பதில்லை.

கல்லூரிக் காதல்கள் திருமணத்தில் முடிந்தாலும் நன்மைதான், முறிந்தாலும் நன்மைதான். இதன் மூலம் கிடைக்கும் அநுபவம் அடுத்த நகர்வை நெறிப்படுத்தும், எனவே,

விட்டுப் பிடியுங்கள். சரியானவர்களைப் பிடிப்பார்கள்!

சிவதாசன் ஜூலை 27, 2015 – இக்கட்டுரை ஆகஸ்ட் 2015 ஈகுருவி பத்திரிகையில் பிரசுரமானது

[wp-rss-aggregator]