விடுதலை செய்யப்பட்ட ரஜீவ் காந்தி கொலைக்குற்றவாளிகளில் இலங்கையைச் சேர்ந்த நால்வரும் திருப்பி அனுப்பப்படலாம்?

உச்சநீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நவம்பர் 11 அன்று விடுதலை செய்யப்பட்ட ரஜீவ் காந்தி கொலைக்குற்றவாளிகளில் இலங்கையைச் சேர்ந்த சாந்தன், றொபேர்ட் பயஸ், முருகன் மற்றும் ஜயகுமார் ஆகியோர் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படவுள்ளனரென அறியப்படுகிறது. வேலூர் சிறையிலிருந்து விடுதலையான இவர்கள் அனைவரும் தற்போது திருச்சியிலுள்ள சிறப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

குற்றங்களில் ஈடுபடும் வெளிநாட்டாரைத் திருப்பியனுப்பும் நடைமுறைக்கிணங்க இவர்களும் திருப்பியனுப்பப்படுவார்கள் என திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து இலங்கை தூதரகத்துடன் பேசி அதன் ஒப்பந்தத்தையும் பெற்றிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதே வேளை இவர்களில் எவராவது இலங்கைக்குப் போக மறுத்து, இந்தியாவிலேயே தங்கியிருக்க விரும்பினால் அவர்கள் தமது விருப்பத்தை வெளிநாட்டார் பதிவுகள் அலுவலகத்துக்கு FRRO) எழுத்துமூலம் அதை அந்த அலுவலகம் பரிசீலித்து உரிய முடிவுகளை எடுக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் சாந்தன் மட்டுமே இலங்கைக்குத் திரும்பிச் செல்ல விரும்புவதாகவும் அதே வேளை நளினியின் கணவர் முருகன் (சிறீதரன்) லண்டனிலுள்ள அவர்களது மகளுடன் தங்குவதற்கு விருப்புடையவராக இருக்கிறார் எனவும் பயஸ் நெதர்லாந்திலுள்ள அவரது குடும்பத்தினருடன் இணைய விரும்பியுள்ளதாகவும், ஜயகுமார் சென்னையிலுள்ள அவரது மனவி பிள்ளைகளுடன் தங்குவதற்குத் தீர்மானித்துள்ளதாகவும் ‘இந்துஸ்தான் ரைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.

Video: Courtesy The News Minute