விடுதலைப் புலிகளின் மீதான தடை நீக்க மேன்முறையீடு நிராகரிப்பு – பிரித்தானியா அறிவிப்பு!


பிரித்தானிய பயங்கரவாதச் சட்டம் – 2000 த்தின் 7 வது பிரிவின் பிரகாரம், விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடை தொடருமென அந்நாட்டின் உள்ளக அமைச்சர் கெளரவ பிரிதி பட்டேல் இலங்கை அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளார்.

கெளரவ. பிரிதி பட்டேல்

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கும்படி கோரி மார்ச் 8, 2019 இல் நாடு கடந்த தமிழீழ அரசு முன்வைத்த கோரிக்கையைப் பரிசீலிக்க பிரித்தானிய உள்ளக அமைச்சர் மறுத்திருந்தார். இதற்கு எதிராக மே 2019 இல் நாடு கடந்த தமிழீழ அரசு, தடை செய்யப்பட்ட அமைப்புகள் மீதான மேன்முறையீட்டு ஆணையத்திற்கு (Proscribed Organizations Appeals Commission (POAC)) விண்ணப்பித்திருந்தது. ஆறுமுகமும் ஏனையவர்களும் vs உள்ளக அமைச்சர் என அறிவிக்கப்பட்ட இவ்வழக்கின மீதான தீர்ப்பு அக்டோபர் 2020 இல் அறிவிக்கப்பட்டது. இத் தீர்ப்பை அனுசரித்து, தீரப்பு வழங்கப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்குள் ‘விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவது பற்றித் தாம் பரிசீலனை செய்வதாக’ உள்ளக அமைச்சர் அறிவித்திருந்தார். தமிழீழ அரசுக்குச் சாதகமாக இத்தீர்ப்பு அப்போது கொண்டாடப்பட்டிருந்தாலும் அது ஒரு தற்காலிக வெற்றியெனவே பார்க்கப்பட்டது. இக்காரணங்களுக்காக ஆணையத்தின் இத் தீர்ப்பு ஒரு ‘திறந்த தீர்ப்பாக’ (open judgement) கருதப்பட்டது.

இந்த ‘திறந்த தீர்ப்பு’ வழங்கிய அனுகூலத்தைப் பாவித்து, ஆணையத்தின் இத் தீர்ப்பு முறையற்றது என இலங்கை அரசு பிரித்தானிய உள்ளக அமைச்சருக்கு மேலும் அழுத்தத்தைக் கொடுத்துவந்தது.. இவ் வழக்கில் இலங்கை அரசு நேரடியாகச் சம்பந்தப்படாமல் இருந்தாலும், விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடைசெய்வதற்கு பிரித்தானிய அரசுக்குத் தேவையான மேலதிக தகவல்களை அது தொடர்ந்து வழங்கிக்கொண்டிருந்தது. விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்ந்தும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது என்பதற்கான சான்றுகளை அது வழங்கியதாக அப்போது கூறப்பட்டது. ஆணையத்தின் ‘திறந்த தீர்ப்பைப்’ பாவித்து,இப் ‘புதிய’ ஆதாரங்களுடன் உள்ளக அமைச்சர் தற்போது விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை மீண்டும் உறுதி செய்திருக்கிறார்.



“பயங்கரவாத சித்தாந்தங்களை முன்னெடுக்கும் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆதரவு அமைப்புகள் பல இப்போதும் வெளிநாடுகளில் இயங்கிக்கொண்டிருக்கின்றன; இலங்கையில் மீண்டும் வன்முறையைத் தூண்டுவதற்கு அவை முயற்சிகளை மேற்கொண்டுள்ளன என்பதற்கான ஆதாரங்கள் எம்மிடமுண்டு” என இலங்கை அரசு தொடர்ந்தும் கூறிவருகிறது.

விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பு என 2000 பிரித்தானியா அறிவித்திருந்தது. தற்போது, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட 30 நாடுகளில் விடுதலைப் புலிகள் அமைப்பு தடைசெய்யப்பட்ட ஒன்றாக இருக்கிறது.