IndiaNewsSri Lanka

விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுக்கும் அங்கொட லொக்காவுக்கும் தொடர்பு – இந்திய தேசிய விசாரணை ஆணையம்

விடுதலைப் புலிகளின் முன்னாள் புலனாய்வுப் பிரிவு உறுப்பினரான சபேசன் என அழைக்கப்படும் 47 வயதுடைய சற்குணத்துக்கும் அங்கொட லொக்கா என அழைக்கப்படும் மட்டுமகே சந்தன லசந்த பெரேரா மற்றும் அவரது சகாக்களுக்கும் மிக நெருங்கிய தொடர்புகள் இருந்தன என தமிழ்நாடு குற்றவிசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு ஆயுதங்களையும், போதைப்பொருட்களையும் கடத்தினார் என்ற குற்றச்சாட்டில் கடந்த அக்டோபர் (20210 இல் சபேசன் இந்திய தேசிய விசாரணைப் பிரிவினால் சென்னையில் வைத்துக் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

இதே வேளைஇலங்கை அரசினால் தேடப்பட்டுவந்த அங்கொட லொக்கா எனப்படும் 35 வயதுடைய மட்டுமகே சந்தன லசந்த பெரேரா, ஜூலை 3,2020 அன்று கோயம்புத்தூரில் பொலிஸ் பாதுகாப்பில் இருந்தபோது மாரடைப்பினால் மரணமுற்றதாகக் கூறப்பட்ட விடயம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட தமிழ்நாடு குற்ற விசாரணைப் பிரிவு (Tamilnadu Crime Branch (TN-CB)) தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் சபேசனுக்கும் அங்கொட லொக்காவுக்குமிருந்த தொடர்புகள் பற்றித் தெரிவித்துள்ளது.



சென்னையில் ஒளிந்திருந்த அங்கொட லொக்காவைக் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்ட தமிழ்நாடு குற்றவிசாரணைப் பிரிவு தற்போது சபேசன், அவரது சகாக்களான ஒரு இந்தியப் பிரஜையையும் இன்னுமொரு இலங்கைப் பிரஜையையும் கைதுசெய்துள்ளது. இவர்கள் மூவரையும் விசாரணைக்குட்படுத்தியபோது அங்கொட லொக்கா மற்றும் அவரது நணபர் லாடிய எனப்படும் சானுகா தனநாயக்கா ஆகியோருக்கும் இம் மூவருக்கும் இருந்த தொடர்புகள் தெரியவந்ததாக குற்ற விசாரணைப் பிரிவின் பிரதி பொலிஸ் அத்தியட்சகர் பி.சிவகுமார் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இதர வன்முறைக்குழுக்களுடன் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக சபேசன் மற்றும் சின்ன சுரேஷ் எனப்படும் அவரது சகாவும் சென்னைக்கு வந்ததாகவும் அவர்களின் உதவியுடன் அங்கொட லொக்கா மற்றும் லாடியாவும் சென்னைக்கு வந்ததாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளன. பிரதாப் ப்சிங்க் என்ற பெயரில் கோயம்புத்தூரில் மறைந்து வாழ்ந்த அங்கொட லொக்கா பின்னர் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்தபோது சந்தேகத்துக்குரிய முறையில் மரணமடைந்திருந்தார். அவரது மரணம் தொடர்பாக தமிழ்நாடு குற்ற விசாரணைப் பிரிவு விசாரணகளை மேற்கொண்டு வந்ததிருந்தது.

லொக்காவின் உதவியாளரான லாடியாவை பெங்களூருவில் மறைந்துவாழ உதவிசெய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஜயப்பிரகாஷ் மற்றும் லாடியாவின் வாக்குமூலங்களிலிருந்து லொக்கா குழுவுக்கும் சபேசன், சின்னசுரேஷ் மற்றும் சவுந்தரராஜன் ஆகியோருக்குமிடையிலான தொடர்புகள் தற்போது வெளிவந்திருப்பதாக அறியப்படுகிறது.

இதே வேளை, மார்ச் 18, 2021 இல் இந்திய கடற்காவல் படையினால் மினிகோய் கரையில் வைத்து விழிஞம் ஆயுதக் கடத்தல் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்ட ஆறு இலங்கையரைத் தொடர்ந்து சபேசன், சின்ன சுரேஷ், சவுந்தரராஜன் ஆகியோரையும் இந்திய தேசிய விசாரணைப் பிரிவு கைதுசெய்திருந்தது. விழிஞம் ஆயுதக் கடத்தலின்போது ஏ.கே.47 ரைபிள்களும், 1,000 ரவைகள் மற்றும் 300 கி.கி. ஹெரோயின் ஆகியவற்றுடன் மூன்று மீன்பிடிப்படகுகள் பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து தேசிய விசாரணைப் பிரிவு சபேசன் குழுவினரைக் கைதுசெய்திருந்தது.



லொக்காவின் மரணத்திற்குப் பிறகு லாடியா போதைப்பொருள் வியாபாரத்தைப் பொறுப்பேற்று நடத்தி வந்ததாகவும், அதே வேளை ஆயுதம் மற்றும் போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைக்கும் பணம் விடுதலைப் புலிகளின் மீளுருவாக்கத்துக்குப் பயன்படுத்தப்படவிருந்ததாகவும் இந்திய தேசிய விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்தியாவிலுள்ள விடுதலைப் புலி ஆதரவாளர்களுடன் சபேசன் தொடர்புகளைப் பேணிவந்ததாகவும் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதே வேளை விடுதலைப் புலிகளின் ஆதரவாளரான மதுரையைச் சேர்ந்த தயானேஸ்வரன் என்பவரும், அவரது மகளும் வழக்கறிஞருமான சிவகாமசுந்தரி மற்றும் லொக்காவுடன் வாழ்ந்துவந்த அமானி டான்ஜி என்பவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அங்கொட லொக்காவுக்கென வாங்கிய கைத்துப்பாக்கியை, லொக்காவின் மரணத்திற்குப் பிறகு தூர இடமொன்றில் நிலத்திற்குள் புதைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக சிவகாமசுந்தரியும் அவரது தந்தையும் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும், தனது கணவனைக் கொன்றதற்காக லொக்காவை நஞ்சூட்டிக் கொன்றிருக்கலாம் என்ற சந்தேகத்தில் அமானியும் கைதுசெய்யப்படுல்ளதாகவும் இவை தொடர்பான விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் அறியப்படுகிறது. (தி ஹிந்து, ‘ஒன் மனோரமா)).