Sri Lanka

விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பைத் தகர்க்க ஆதரவு கோருகிறது இலங்கை!


தமது சித்தாந்தத்தைத் தொடர்ந்து பரப்பிவரும், விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பைத் தகர்க்க உதவி செய்யும்படி, இலங்கையின் ஜானாதிபதி கோதாபய ராஜபக்ச, உலக நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

காணொளி மூலம், ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றியபோது, ஜனாதிபதி “சுமார் மூந்று தசாப்தங்களாக பயங்கரவாதத்துடனும், பிரிவினைவாதத்துடனும் போராடிய அனுபவம் எங்களுக்குண்டு. உள்நாட்டிலும் சரி, வெளிநாடுகளிலும் சரி, சகல பயங்கரவாத நடவடிக்கைககள் மேற்கொள்ளப்படுவதை இலங்கை மிகவும் வன்மையான முறையில் கண்டிக்கிறது” எனத் தெரிவித்தார்.

“இலங்கை மண்ணிலிருந்து முற்றாக ஒழிக்கப்பட்டுவிட்ட போதிலும், இப் பயங்கரவாத அமைப்பின் சர்வதேச வலையமைப்பு, பல சர்வதேச தலைநகரங்களில் இருந்து தனது இரக்கமற்ற சித்தாந்தத்தையும், ஆதாரமற்ற பொய்களையும் பரப்புரைகளையும் மேற்கொண்டு வருகிறது. இவ்வமைப்பின் நடவடிக்கைகளை எந்தவொரு நாடும் பொறுத்துக்கொள்ளாது என நான் நம்புகிறேன்” என அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.



“குறுகிய அரசியல் முரண்களை விட்டுவிட்டு, பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் சர்வதேச நாடுகள் இலங்கையுடன் தோளோடு தோள் நிற்க வேண்டும். தற்கொலைக் குண்டுகளை உலகுக்கு அறிமுகம் செய்த சித்தாந்தம் வேறு பல பயங்கரவாத உத்திகளையும் உலகில் பரப்ப முயலலாம். பல தீவிரவாத அமைப்புக்கள் ஆட் சேர்ப்பில் ஈடுபடுகின்றன என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. இன்னுமொரு இளைய தலைமுறையைத் தீவிரவாதத்துக்குள் இழுக்கும் பரப்புரைகளை அனுமதிப்பதன் மூலம், இப் பயங்கரவாத அமைப்பின் வன்முறையை எனது மக்கள் எதிர்கொள்ள உலக சமூகம் அனுமதிக்காது என நான் நம்புகிறேன்” என ஜனாதிபதி தன் உரையில் குறிப்பிட்டார்.

ஐ.நா. அமைதிப் படைக்கு முழு ஆதரவையும் தருவதன் மூலம் உலக சமாதானத்துக்கு வலுச் சேர்க்க இலங்கை தொடர்ந்தும் உழைக்கும் எனவும், அதே வேளை, ஐ.நா. சபையும், தமது அங்கத்துவ நாடுகளின் மீதான அரசியல் பழிவாங்கல்களை விட்டு விட்டு நீண்டகால இருப்பைத் தக்க வைக்கவும், சபையின் மீதான நம்பகத் தன்மையை வளர்த்துக்கொள்ளவும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தனது உரையின் மூலம் கேட்டுக் கொண்டார்.