India

விடுதலைப்புலிகள் அமைப்பை மீளுருவாக்க முனைகிறார்கள் என்ற குற்றச்சாட்டில் 13 பேர் மீது இந்திய தேசிய விசாரணை ஏஜென்சி (NIA) வழக்கு

இலங்கையிலும் இந்தியாவிலும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை மீளுருவாக்க முனைகிறார்கள் என்ற குற்றச்சாட்டில் இலங்கை, இந்தியாவைச் சேர்ந்த 13 பேர் மீது இந்திய தேசிய விசாரணை ஏஜென்சி (NIA) வழக்குப் பதிவு செய்துள்ளது. போதைவஸ்து கடத்துவதன் மூலம் அவர்கள் சம்பாதித்த பணத்தில் பெருமளவு ஆயுதங்களை வாங்குவதற்குத் திட்டமிட்டிருந்தார்கள் எனவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.

கடந்த வியாழனன்று இந்திய மத்திய விசாரணை ஏஜென்சியால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட 13 பேரில் 10 இலங்கையர்களும் 3 இந்தியர்களும் அடங்குவர். இவர்களில் இலங்கையைச் சேர்ந்த குணா என அழைக்கப்படும் சீ.குணசேகரன், பூக்குத்தி கண்ணன் என அழைக்கப்படும் புஷ்பராஜா ஆகியோர் பாகிஸ்தானைச் சேர்ந்த ஹாஜி சலிம் என்பவருடன் சேர்ந்து இலங்கைக்கு போதைவஸ்து மற்றும் ஆயுதங்களைக் கடத்தினர் எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ளனர். மொஹாமெட் அஸ்மின், அழஹப்பெருமா சுனில் காமினி பொன்சேகா, ஸ்ரான்லி கென்னெடி பெர்ணாண்டோ, தனுக்கா ரோஷன், லடியா, வெல்லா சூரங்கா, திலிபன், தனரட்ணம் டிலுக்‌ஷன் ஆகியோர் இதர இலங்கையர்கள் ஆவர். இவர்களோடு சேர்ந்து இந்தியர்களான எம். செல்வகுமார், விக்னேஸ்வர பெருமாள் மற்றும் ஐயப்பன் நண்டு ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மேற்படி குற்றம் சாட்டப்பட்டவர்கள் சென்ற வருடம் ஈழத்தமிழ் அகதிகளின் தடுப்புமுகாம்களில் ஒன்றாகிய திருச்சி சிறப்பு முகாமில் வைத்து கைதுசெய்யப்பட்டிருந்தார்கள் என ஏஜென்சி கூறியுள்ளது. கைது செய்யப்பட்டபோது அவர்களிடம் 80 இலட்சம் இந்திய ரூபாய்கள், 9 தங்கப் பாளங்கள், பல கைத்தொலைபேசிகள், சென்னையிலிருந்து இலங்கைக்கு ரகசிய முறையில் பணம் அனுப்பியதற்கான ஆதாரங்கள் போன்றவை கைப்பற்றப்பட்டிருந்ததாகவும் இவர்களுக்கிடையேயான தொடர்பாடல்களுக்காக வெளிநாட்டு வட்ஸப் இலக்கங்கள் பாவிக்கப்பட்டன எனவும் தேசிய விசாரணை ஏஜென்சி தெரிவித்துள்ளது.

இவர்களுக்கு போதை வஸ்துக்கள் மற்றும் ஆயுதங்களை வழங்கிய பாகிஸ்தான் பிரஜையான சலிம் பாகிஸ்தான் உளவு ஸ்தாபனமான ஐ.எஸ்.ஐ. அமைபிற்குப் பணிபுரிபவர் எனவும் இலங்கை, இந்தியா, மாலைதீவு உட்பட இந்தியாவுக்கு அண்மையிலுள்ள அனைத்து நாடுகளுக்கிடையேயான கடத்தல்களுக்கும் அவரே பொறுப்பு எனவும் தேசிய விசாரணை ஏஜென்சி தெரிவித்துள்ளது.