விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர் நிமலனுக்கு ஆயுள் தண்டனை
போர் முடிந்து 13 வருடங்களுக்குப் பின்னர், பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் புலனாய்வுப் பிரிவு உறுப்பினர் தங்கவேலு நிமலன் என்பவருக்கு கொழும்பு உயர்நீதி மன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்திருக்கிறது.
பெப்ரசரி 02, 2009 அன்று குருநாகலிலுள்ள மளிகைப்பிட்டி விளையாட்டுத் திடலிலும், ஆகஸ்ட் 05, 2009 இல் பதுளையிலும் நடைபெற்ற ஊவா மாகாணசபைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் குண்டுகளை வெடிக்கவைக்க முயற்சித்தார் எனவும் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவைப் போருக்கு முன்னரும் பின்னரும் கொலைசெய்ய முயற்சித்திருந்தார் எனவும் நிமலன் மீது பொலிசார் குற்றஞ்சாட்டியிருந்தனர். அது மட்டுமல்லாது மே 28, 2007 அன்று ஒரு பொலிஸ் அதிரடிப்படையின் மீது கிளேமோர் குண்டுத்தாக்குதலொன்றை நடத்துவதற்குக் காரணமாகவிருந்தார் எனவும், மார்ச் 13, 2009 அன்று அக்குரஸ்ஸவிலுள்ள கோடப்பிட்டி ஜும்மா பள்ளிவாசலில் தற்கொலைத் தாக்குதல் ஒன்றை நிகழ்த்துவதற்குக் காரணமாகவிருந்தார் எனவும் அவர் மீது குற்றங்கள் சுமத்தப்பட்டிருந்தன. இக் குண்டுத்தாக்குதலின்போது 14 பேர் கொல்லப்பட்டும் 35 பேர் காயமடைந்துமிருந்தனர்.
விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் அணித்தலைவராக அப்போதிருந்த முத்தப்பன் தலைமையின் கீழ் நிமலனும் அவரது குழுவினரும் செயற்பட்ட்டிருந்தார்கள் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்திருக்கிறது.
முத்தப்பன் அணியில் இருந்த நிமலன் மற்றும் அவரது குழுவினர் கைதுசெய்யபட்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பலனாக பல வெடிமருந்துகள், தற்கொலை அங்கிகள், வேறு பல உபகரணங்கள் ஆகியன கைபற்றப்பட்டிருந்ததாக பொலிசார் அப்போது தெரிவித்திருந்தனர். மேற்படி குற்றச்சாட்டுகளின் பேரில் கிளிநொச்சி பொலிசாரால் கைதுசெய்யப்பட்டிருந்த நிமலன் மீதான குற்றச்சாட்டுகளை 2011 இல் கொழும்பு உயர் நீதிமன்றம் உறுதிசெய்திருந்தது.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முற்றாக நீக்கக்கோரி போராட்டங்களைத் தமிழ்க் கட்சிகள் முன்னெடுத்துவரும் வேளையில் பெப்ரவரி 28, 2022 அன்று கொழும்பு உயர்நீதிமன்றம் நிமலனுக்கு ஆயுட்தண்டனையை வழங்கித் தீர்ப்பளித்திருக்கிறது.