EntertainmentIndiaSri Lanka

விஜே சேதுபதி ‘800’ படத்திலிருந்து விலகினார்!

தனது படத்திலிருந்து விலகிக்கொள்ளும்படி முரளீதரன் கோரிக்கை


கிரிகெட் ஆட்டக்காரர் முத்தையா முரளீதரனின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் ‘800’ என்ற படத்தில் நடிக்கும் எண்ணத்தைக் கைவிட்டு விட்டதாக நடிகர் விஜே சேதுபதி தீர்மானித்துள்ளதாகத் தெரியவருகிறது.

இப் படத்தில் நடிப்பதிலிருந்து விலகிக்கொள்ளும்படி முத்தையா முரளீதரனின் கைப்பட எழுதிய கடிதமொன்றை விஜே சேதுபதி தனது ருவீட்டில் பிரசுரித்துள்ளார். அத்தோடு அவரது ஊடக தொடர்பாளர் யுவராஜ் அவர்களும் ஊடகங்களுக்கு இச் செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார்.

இன்று (திங்கள்), முரளீதரன் விஜே சேதுபதிக்கு எழுதிய கடிதத்தில், தமிழ்நாட்டின் சிறந்த நடிகர் ஒருவர் இப் படத்தினால் பாதிக்கப்படுவதைத் தான் விரும்பவில்லை எனவும் அவரது எதிர்காலம் தேவையற்ற தடங்கல்களுக்கு உள்ளாவதற்குத் தான் காரணமாக இருக்க விரும்பவில்லை எனவும் அதனால் இப் படத்திலிருந்து அவரை விலகிக்கொள்ளும்படியும் கேட்டிருந்தார். அதற்கு விஜே சேதுபதி தனது ருவீட்டின் மூலம் ‘நன்றி, வணக்கம்’ எனப் பதிலளித்துள்ளார்.



விஜே சேதுபதி இப் படத்தில் நடிக்காவிட்டாலும், இப் படத்தைப் பெருந்திரைகளில் வெளியிடமுடியும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும், கிரிக்கெட்டை விரும்பும் எதிர்கால இளம் சந்ததிகளுக்கு இப் படம் உந்துதலைக் கொடுக்கவேண்டுமென்பதே தனது நோக்கமெனவும், விரைவில் தயாரிப்பாளர்களிடமிருந்து இப் படம் குறித்த அறிவித்தல் வருமெனவும் முரளீதரன் குறிப்பிட்டுள்ளார்.

800, மூவீ ட்றெயின் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் டார் மோசஹன் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்களின் இணைத் தயாரிப்பாகும். இப் படத்துக்கு எதிராகத் தமிழ் மக்கள் மத்தியிலும், தமிழ்த் திரைபட மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் பலத்த எதிர்ப்பும் உருவாகியிருந்தது. (தி நியூஸ் மினிட்)