விஜய் படங்களைப் புறக்கணிக்கும்படி மதுரை ஆதீனம் கோரிக்கை – இந்து கடவுள்களை அவமதித்தாராம்!
இந்துக் கடவுள்களை அவமதித்தார் எனக் குற்றஞ்சாட்டி நடிகர் விஜய்யின் படங்களை ரசிகர்கள் புறக்கணிக்கவேண்டும் என மதுரை ஆதீனகர்த்தா சிறில சிறீ ஹரிஹர சிறீ ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் கேட்டுள்ளார். மதுரை பழங்கநாதத்தில் ஜூன் 06 இல், விஷ்வ இந்து பரிசத் அமைப்பினால் ஒழுங்குசெய்யப்பட்ட கூட்டமொன்றில் மதுரை ஆதீனகர்த்தா கேட்டுள்ளார்.
1999 இல் வெளிவந்த துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் நடிகர் விஜய் சொல்வதாக ஒரு உரையாடல் வருகிறது. அதில் இந்துக் கடவுளான பிள்ளையாரிடம் சென்று விஜய் ” பிள்ளையாரே, நான் ஒரு பூவைப் பறித்து உனக்குச் சூடும் போது மரம் கண்ணீர் விடுகின்றது. அதே வேளை அதே பூவை நான் எனது காதலி ருக்குவிற்குச் சூடும்போது மரம் சிரிக்கின்றது” எனக் கூறுவார்.
இந்த வசனத்தைச் சொன்னதற்காக, இத்தனை வருடங்களுக்குப் பிறகு மதுரை ஆதீனம் சன்னதம் கொண்டுவிட்டது. “அப்படிக் கூறுவதற்கு அந்த நடிகருக்கு அத்தனை துணிச்சலா? அது எங்கள் கடவுளர்களை அவமதித்து விட்டது. அவரது படங்களை இனிமேல் பார்க்காதீர்கள். இதைக் கூறுவதால் எல்லோரும் என்னை சங்கி என அழைக்கிறார்கள்” என அவர் தெரிவித்திருந்தார்.
ஆதீனகர்த்தாவின் இப் பேச்சு விஜய் ரசிகர்களை மிகவும் ஆத்திரத்துக்குள்ளாக்கியிருக்கிறது. பலர் ஆதீனத்துக்கு எதிராகச் சுவரொட்டிகளை மதுரையெங்கும் ஒட்டி வருகிறார்கள். தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மதுரை வடக்கு இளைஞர் கிளையினால் வெளியிடப்பட்ட சுவரொட்டி ஒன்றில் “எச்சரிக்கை!: ஆதீனகர்த்தா மதுரை ஆதீனத்தின் சொத்துக்களைச் சூறையாடப் போகிறார்” எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.
மதுரை ஆதீனகர்த்தா இப்படியான கருத்துக்களுக்குப் புதியவரல்ல. சமீபத்தில், ஊழல் நிறைந்த தமிழ்நாடு அரசின் இந்து சமய கலாச்சார அறக்கட்டளை அமைச்சு கலைக்கப்படவேண்டும் எனவும் தேவாலயங்கள், மசூதிகள் மீது கட்டுப்பாடுகளை விதிக்க முடியாத இந்த அமைச்சு ஏன் இந்துக் கோவில்களைக் கட்டுப்படுத்துகிறது? எனக் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்குப் பதிலளித்த அமைச்சர் சேகர் பாபு, “இப்படியான அரசியல் பேச்சுக்களைப் பேச மதுரை ஆதீனம் இனிமேல் அனுமதிக்கப்பட மாட்டாது. அதையும் மீறி அவர் தொடர்ந்தால் அதை எப்படி நிறுத்துவது என்பதும் எமக்குத் தெரியும்” எனக்கூறியிருந்தார்.
இதே வேளை தமிழ்நாடு மாநிலத்தின் பா.ஜ.க. கட்சித் தலைவர் கே.அண்ணாமலை, மதுரை ஆதீனத்தின் இக் கருத்துக்களைக் கண்டிக்காது, அவர் அரசாங்கத்தை விமர்சிக்கவில்லை எனவும் அவர் தனது கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு உரிமையுண்டு எனவும் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறையில் நடைபெறவிருந்த ‘பட்டினப் பிரவேசம்’ மீதான தடைக்கும் மதுரை ஆதீனகர்த்தா தனது எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார். இத் தடையைப் பின்னர் தமிழ்நாடு அரசு மீளப்பெற்றிருந்தது.