முன்னாள் ராஜாங்க அமைச்சரும் ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன் அவர்களை மீண்டும் விசாரணைக்குட்படுத்துமாறு கொழும்பு தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் பணித்திருக்கிறது.
ஜூலை 2, 2018 ம் ஆண்டு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டமொன்றின்போது “யாழ்ப்பாணத்தில் நடைபெறும் வன்முறைகளைத் தடுக்க விடுதலைப்புலிகளை மீண்டும் உருவாக்கவேண்டும்” எனப் பேசியிருந்தார். இது தொடர்பாகப் பின்னர் எழுந்த அழுத்தம் காரணமாக ஜூலை 5 இல் அவர் தனது பதவியைத் துறந்திருந்தார்.
இருப்பினும் அவரது கருத்து பயங்கரவாதத்தைத் தூண்டுவது எனக்கூறி சிங்கள ராவய அமைப்பைச் சேர்ந்த மகல் காந்த சுகத்த தேரோ பொலிசில் கொடுத்த முறைப்பாட்டைத் தொடர்ந்து அவர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுப் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
தற்போது அவரை மீண்டும் விசாரணைக்குட்படுத்த வேண்டுமெனவும் அதற்கான நடவடிக்கைகளை எடுகும்படியும் கொழும்பு மஜிஸ்திரேட் புத்திக சிறி ரகல பொலிசாருக்கு உத்தரவிட்டிருக்கிறார். ஆனால் சட்டமா அதிபரின் கட்டளையின்றித் தங்களால் எதுவும் செய்யமுடியாதுள்ளதென பொலிசார் தெரிவிக்கவும் “அவருக்கு (சட்டமா அதிபருக்கு) மீண்டும் ஞாபகமூட்டும் கடிதமொன்றை அனுப்பும்படி நீதிபதி பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.