Entertainment

விக்ரம் | ஒரு சொதப்பல்

திரை விமர்சனம்

மாயமான்

விக்ரம் பார்த்தேன். ‘இந்தியன்’ கமல் ஹாசனின் எதிர்பார்ப்பை முற்றிலும் தகர்த்துவிட்டது. படத்தை இடைவேளைக்குப் பிறகே பார்த்திருக்கலாம் என்கிற மனச்சுமை.

கதைக்குப் பிறகு வருகிறேன்.

அமர் என்னும் பெயருடை ஒரு ஏஜண்டும் (பஹாத்) அவரது சகாக்களும் பொலிஸ் அதிகாரி ஒருவரினால் அழைக்கப்பட்டு அவர்களிடம் ஒரு பணி கொடுக்கப்படுகிறது. அமர் ஒரு சாதாரண, பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கு வந்து வாய்த்த வெட்கப்பட்ட ஒரு மருமகன் போன்ற தோற்றம் கொண்டவர். கேட்டால் தான் பதில் சொல்வார் போன்ற பண்பு. அடக்க ஒடுக்கமான ஒருவர். இக் குழுவுக்கு அவர் தான் தலைவர். குழுவின் ஆடையணி புதிதாக வேலைக்குச் சேர்ந்த IT பையன்களது போல. இக் குழு இந்தியாவிலேயே மாபெரும் சாதனைகளைச் செய்தவர்கள் போன்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் காட்ட முற்பட்டுத் தோல்வியுறுகிறார். கிட்டத்தட்ட ஒரு விசேட அதிரடிப் படை போன்ற பிரமிப்பைக் காட்ட முயற்சிக்கிறார். வேகமான நடையையும் சீரியஸான முகபாவனையையும் தவிர அவர்களைக் கண்டு யாரும் பயந்து ஓடிவிடக்கூடிய உடல்மொழி அவர்களிடம் இல்லை. பஹாத் இப் பாத்திரத்துக்கு முற்றிலும் பொருத்தமற்றவர். உடலமைப்பு அதற்கேற்றதல்ல.

பொலிஸ் அதிகாரியின் அழைப்பினால் அவரது அலுவலகதுக்கு வந்து எந்தவித ஆழமான briefing எதுவும் இல்லாமல், தயாரிப்பு இல்லாமல் உடனேயே பணியில் இறங்கி விடுகிறார்கள். பாவம் கனகராஜ், சில வேளைகளில் கமல் “சொன்னதை செய்” என்று கட்டளையிட்டிருக்கலாம். பாத்திரங்களைப் பற்றியோ, எடுத்திருக்கும் பணிகள் பற்றியோ முற்தயாரிப்பு எதுவுமேயில்ல. அதிரடியாகவே அனைத்தும் நடக்கின்றன.

கதை

கதையை ஒரு pan india வகையறாக்குள் அடங்கும். வசூல் சம்பாதிப்பதற்கு இப்படியான படங்கள் தேவை என்ற பழக்கம் இப்போது அனைத்து தயாரிப்பாளர்களிடமும் வந்துவிட்ட ஒன்று. ராஜ் மெளலியின் பாகுபலிக்குப் பிறகு பிரமாண்டமான pa indian படங்களை எடுத்துப் பல மொழிகளிலும் திரையிடுவதன் மூலம் ஒரே கல்லில் பல மாங்காய்களை விழுத்திப் பலன் பெறலாம் என்பதை அனைவரும் உணர்ந்துவிட்டார்கள். கமல் இந்த அளவுக்குப் போகவில்லையாயினும், அவர் ஒரு தீவிர ‘இந்திய தேசியவாதி’ என்பதைப் பல தடவைகளில் காட்ட முற்பட்டிருக்கின்றார். அந்த விடயத்தில் ‘இந்தியன்’ அவருக்கு ஒரு வெற்றிப்படம். அதன் நவீன வடிவமாக ‘விக்ரம்’ படத்தை மனதில் உருவாக்கி கமல் புல்லரித்திருக்க வாய்ப்புண்டு. ஆனால் அதற்கான ‘வாய்ப்பே இல்லை ராஜா’ என்றவாறு படம் முடிந்திருக்கிறது.

வசூலைப் பொறுத்தவரை கமலின் கஜானா நிரம்பி வழிவது உண்மை. பிரமாண்டமான போர்க்களக் காட்சிகளை வெறும் போதை வஸ்துக் கடத்தல்காரரின் வீட்டுக் கொம்பவுண்டுக்குள் நடத்திப் புரட்டி எடுத்திருக்கிறார். கமலின் வயதுக்கேற்ற பாத்திரமாக கனகராஜ் ‘விக்ரத்தைப்’ புனைவுசெய்திருக்கிறார் எனப் புழுகித் தள்ளுகிறார்கள். ஆனால் அவரது புஜபல பராக்கிரமம் இன்னும் ஒரு 20 வயதுப் பையனுடைய வேகத்தில் இருப்பது அவரது நரை, திரை மூப்போடு ஒத்துப் போகவில்லை. நடிப்பில் கமல் உலகநாயகன் என்பதில் இரண்டாம் வார்த்தைக்கு இடமில்லை. குரலும் கண்களும், முகமும் உடலும் வெவ்வேறு அதிர்வுகளில் ஒத்தியங்கும் நடிப்பு அவருடையது. ஆனால் இயக்குனராக அவர் பணி புரியவே கூடாது. இப் படம் முழுவதும் அவரது இயக்கத்தில் தயாரிக்கப்பட்டதுபோல உணர்வு.

தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் இருவர் கொல்லப்பட, கொல்லப்பட்ட திகதிகளைக் கொண்டு மூன்றாமவர் இன்று கொல்லப்பட விருக்கிறார் என்ற அனுமானத்துடன் ஏஜண்ட் அமர் நியூமெரோலொஜிஸ்ட் போல திட்டமிடுவதும், விபசாரி வீட்டில் யன்னலுக்கு வெளியே பாய்ந்து சென்று ஏதோவெல்லாம் ஜில்மால் காட்டுவதும் பெரும் அபத்தம். படத்தின் முதல் அரைவாசியும் என்ன நடக்கிறது என்று ரசிகர் ஏங்கி முடிய இரண்டாவது பாதியில் கொண்டுவந்து விட்டு விடுகிறது. ஏஜண்ட் அமரின் விசாரணைகள் முடிந்துவிட்டனவா என்பதை அறிவதற்கு நாம் இன்னுமொரு ஏஜண்ட்டைப் பிடிக்க வேண்டும்.

விஜய் சேதுபதி போதை வஸ்து தயாரிப்பாளராக வருகிறார். அவர் ஒரு கிங் பின் என்பதை மூன்று அழகிகளை அவருக்கு மனைவியாக்கி அவரது சக்கை உடம்பைக் கட்டியணைக்க முற்பட்டு அனைவரும் தோற்றுப் போனதன் மூலம் கண்டு கொள்ளலாம். பிரமாண்டமான மாளிகை ஒன்றில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரவுடி முகங்களால் நிரப்பி ஜமாய்த்து விடுகிறார் கமல், மன்னிக்க வேண்டும், கனகராஜ். வழக்கமான steriotype தான். அத்தனை ரவுடிகளும் typical தமிழ்நாட்டு கருந்தோல், பரட்டைத் தலை, காதணி சுமந்தோர் தான் – விஜய் சேதுபதியின் மூன்று (வடக்கத்தைய) வெண்தோல் அழகிகளைத் தவிர.

தனது சொந்த துயரங்களையும் தாங்கிக்கொண்டு நாட்டின் நன்மைக்காய், அடுத்த சந்ததிகள் போதைவஸ்தினால் அழியப்பட்டுவிடக் கூடாது என்ற காரணத்தால் Death Wish வெறியுடன் புறப்படும் கமல் உதிர்த்துக்கொட்டும் டயலாக் கேட்கப் புல்லரிக்கிறது. எம்.ஜீ.ஆர். மீனவர்களுக்காகப் போராடிய அதே ஜான்றா recycle பண்ணுப்பட்டு நவீன மயப்படுத்தப்ப்டுகிறது. அவரது வசனமும் குரலும் நம்பக்கூடியவை என்பதை வசூல் நிரூபித்துவிட்டது. இதில் கொடுமை என்னவென்றால் இதைப் பார்த்து (வசூல்) இன்னும் எத்தனை பிரமாண்டமான ‘விக்ரங்களை’ யார் யார் தயாரிக்கப்போகிறார்களோ என்ற அச்சமே.

விஜய் சேதுபதி மீதிருந்த மதிப்பு என்னவோ அவருடைய உடம்பைப் போலவே சள்ளை விழுந்து தொங்கிப்போகிறது. தோளை வளைத்து அவர் நடந்து செல்லும் விதமும், போதை வஸ்துவைக் கடித்தவுடன் அசுர பலத்தோடு பாய்வதும் நடிப்பேயல்ல, வெறும் செயற்கை. போதை வஸ்துவை மென்றவுடன் உடல் அதற்கு response தருமென்பது விஞ்ஞானத்தையே பொய்க்க வைப்பது போல. அதே போலவே அமர் குழந்தைக்கு ஃபோனுக்குள்ளால் கேட்டு முதலுதவி அளிப்பதும். சுத்தமான பேய்க்காட்டல். கொஞ்சமாவது research செய்திருக்கலாம்.

ஆரம்பத்திலிருந்து கதை முறிந்து முறிந்து இணைந்து இறுதியில் அதிர்ச்சியான கழுத்துத் துண்டிக்கும் றோலெக்ஸ் (சூர்யா) பாத்திரத்தின் மும்பாய் மாஃபியாக் காட்சியுடன் காரணமில்லாமல் சங்கமிக்கிறது. ரசிகர்கள் பாவம்.

இதில் நான் ரசித்துப் பார்த்த ஒரு பாத்திரம் ஏஜண்ட் ரீனா. அவரைத் தவிர ஏனைய அனைத்துப் பெண் பாத்திரங்களும் அழகுக்கு அழகூட்டும் ஆபரணங்கள். விதம் விதமான துப்பாக்கிகள் ஆங்காங்கே கமலின் வரவுக்காய் ஒளித்திருந்து தலைகாட்டும் அற்புதம் சொல்லி மாளாது. இத்தனை ஆயுதங்களும் கமலும் இருந்தால் தமீழீழத்தை ஒரு இரவில் பிடித்துவிடலாம் போன்ற புல்லரிப்பு.

சூர்யா, சேதுபதி இல்லாமலேயே, தேவையற்ற பாடல்களுக்காக அனுருத்திற்கு மேலதிக பணத்தைச் செலவழிகாமலேயே, இப் படத்தை முடித்திருக்கலாம். சமூகத்திலிருந்து போதை வஸ்துவை ஒழிப்பதற்காகப் பாடுபடுமொருவர் இரத்தக் களரியையும், தேவையற்ற புகைத்தலையும் சமூகத்தில் பரப்புவதில் இன்பம் காணமுடியுமானால் இதன் நோக்கம் சமூக ஒழுக்கமல்ல வசூல் மட்டுமே.

தேவர் மகன் படத்தில் நாசரின் தலையை வெட்டிவிட்டு “போங்கோடா போய்ப் படியுங்கட” எனக்கூறும் கமல் ஹாசன் விக்ரத்தில் வன்முறையைப் பன்மடங்காக்கியிருக்கிறார். அந்த வகையில் அவரது வளர்ச்சியில் பாரிய பாய்ச்சல் தென்படுகிறது.

எனவே இப் படத்தைப் பார்த்த பிறகு கமலது உலக நாயகன் பட்டத்தை எடுத்துவிட்டு “சொதப்பல் நாயகன்” எனப்பட்டமளிக்கவேண்டுமெனச் சிபார்சு செய்கிறேன்.

படத்தை இதுவரை பார்க்காவிட்டால் தயவு செய்து வடிவேலு நடிக்கும் ஏதாவதொரு படத்தைத் திரும்பவும் பாருங்கள். அட் லீஸ்ட் ரெலிவிசனாவது சந்தோசப்படும்.