விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சை மருத்துவமனைக்கு மாற்றும்படி உலக வைத்தியர்கள் அவசர விண்ணப்பம்

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சை மருத்துவமனைக்கு மாற்றும்படி உலக வைத்தியர்கள் அவசர விண்ணப்பம்

Spread the love

நவம்பர் 25, 2019

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சை மருத்துவமனைக்கு மாற்றும்படி உலக வைத்தியர்கள் அவசர விண்ணப்பம் 1
ஜூலியன் அசாஞ் எக்குவாடோர் தூதரகத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ஞின் உடல் நிலை மிக மோசாமாக இருப்பதாகவும் அவரை உடனடியாக உயர் பாதுகாப்புச் சிறையிலிருந்து மருத்துவமனை ஒன்றுக்கு மாற்றும்படி 60 க்கும் மேற்பட்ட உலக வைத்தியர்கள் திங்களன்று பிரித்தானிய உள்விவகார அமைச்சர் பிரிதி பட்டேலுக்கு திறந்த கடிதமொன்றை எழுதியுள்ளனர்.

பிரித்தானிய உயர் பாதுகாப்புச் சிறையிலுள்ள அவுஸ்திரேலிய குடிமகனான அவரை, அமெரிக்க உளவுச் சட்டத்தின் பிரகாரம் குற்றமிழைத்தவராகக் கூறி, நாடுகடத்துவதற்கு அமெரிக்க அரசு முயற்சி செய்து வருகிறது. அவர் நாடுகடத்தப்பட்டுக் குற்றவாளியாகத் தீர்க்கப்பட்டால் 175 வருடங்கள் வரை அமெரிக்காவில் சிறைத் தண்டனை அனுபவிக்க வாய்ப்புண்டு.

பிரித்தானிய உள்விவகார அமைச்சர் பிரிதி பட்டேலுக்கு அவர்கள் எழுதிய திறந்த கடிதத்தில் ஜூலியன் அசாஞ்ஞைத் தற்போது சிறைவைக்கப்பட்டிருக்கும் தென்கிழக்கு லண்டனிலுள்ள பெல்மார்ஷ் சிறையிலிருந்து யூனிவேர்சிட்டி போதனா வைத்தியசாலைக்கு மாற்றும்படி கேட்டுள்ளார்கள்.

இவ் வைத்தியர்கள் அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பிரித்தானியா, சுவீடன், இத்தாலி, ஜேர்மனி, சிறீலங்கா மற்றும் போலந்தைச் சேர்ந்தவர்களாவர்.

அக்டோபர் 21ம் திகதி ஜூலியன் அசாஞ் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டபோது அவரது உடல்நிலையின் தோற்றத்தை அவதானித்த ஐக்கிய நாடுகள் சபையின் சித்திரவதை விடயங்களுக்குப் பொறுப்பான சிறப்புத் தூதுவர் நில்ஸ் மெல்செர் எழுதிய அறிக்கையின் பிரகாரம் இவ் வைத்தியர்கள் தமது விண்ணப்பத்தைச் செய்திருக்கிறார்கள்.

சிறையில் அவர் தொடர்ந்தும் கண்டபடி துஷ்பிரயோகத்திற்கு ஆளாக்கப்பட்டு வருகின்றார். இது விரைவில் அவரது உயிரைக் குடிக்கும் நிலைக்குத் தள்ளலாம் என அவ் வைத்தியர்கள் எச்சரித்துள்ளனர்.

2010 இல் ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் மேற்கொண்ட கொண்டுத் தாக்குதல்களினால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட அழிவுகள் குறித்த அமெரிக்க இராணுவ – அரச அதிகாரிகளிடையேயான இரகசிய உரையாடல்களை ஒட்டுக்கேட்டு வெளியிட்டதாக அமெரிக்க அரசு தனது உளவுச் சட்டத்தின்கீழ் ஜூலியன் அசாஞ்ஞைக் குற்றவாளியாகக் கருதி அவரை அமெரிக்காவிற்கு நாடுகடத்தும்படி பிரித்தானிய அரசிடம் கோரியுள்ளது.

“ஜூலியன் அசாஞ்ஞின் உள, உடல் ஆரோக்கியம் மிக மோசமாக இருப்பதால் அவர் வாழ்வுமீது அக்கறை கொண்டு நாங்கள் இக் கடிதத்தை எழுதுகிறோம். இது ஒரு அவசரமான மருத்துவ நிலைமை” என அவ வைத்தியர்கள் எழுதிய 16 பக்கக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.

அவர் நாடுகடத்தப்படுவதற்கான அடுத்த நீதிமன்ற விசாரணை பெப்ரவரியில் இடம்பெறும். அவரது உடல்நிலை அதுவரை தாக்குப்பிடிக்குமா என்பதில் தமக்கு ஐயமுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

“திரு. அசாஞ்சினது உடல், உள ஆரோக்கியத்தின் நிலைமை பற்றிச் சரியான நிபுணத்துவ மதிப்பீடொன்று அவசியம். அவர் தற்போதுள்ள உடல்நிலையில் அவருக்கு உகந்த சிகிச்சையை போதனா வைத்தியசாலை போன்ற மூன்றாம் நிலை மருத்துவநிலையம் ஒன்றினாலேயே வழங்கமுடியும். தற்போது எங்களுக்குக் கிடைத்த தகவல்களின்படிக்கு, அவருக்கு அப்படியொரு சிகிச்சை வழங்கப்படாவிட்டால் அவர் சிறையிலேயே உயிரிழக்க நேரலாம். இவ் விடயத்தில் ஒரு நொடிகூடத் தாமதிக்க முடியாது” என அவர்கள் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

கடைசியாக வெஸ்ட்மினிஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தோன்றியபோது அவர் மிகவும் நலிந்துபோயும், கேள்விகளுக்கு மாறாட்டமாய்ப் பதிலளித்தும் இருந்தார். அவர் தனது பிறந்த திகதியைக்கூட மறந்தவராகவும், நீதிமன்றத்தில் என்ன நடைபெற்றது என்பதுகூடத் தனக்குத் தெரியாதென்றும் அவர் மாவட்ட நீதிபதி வனெஸ்ஸா பறெய்ட்சருக்குக் கூறியிருந்தார். பெல்மார்ஷ் சிறையில் தான் சிறவைக்கப்பட்டிருக்கும் மோசமான நிலைபற்றியும் அவர் குறைகூறியிருந்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் அவர் எக்குவாடோர் தூதரகத்திலிருந்து பகிரங்கமாக இழுத்துவரப்பட்டார்.

2010 இல் இவர் மீது சுவீடன் அரசினால் தொடரப்பட்ட வன்புணர்வு வழக்கிலிருந்து அவ்வரசு தானாகவே விலகிக்கொண்டிருந்தது.

Print Friendly, PDF & Email