World

விக்கிலீக்ஸ்: ஜூலியன் அஸாஞ் பிரித்தானிய சிறையிலிருந்து விடுதலை

அமெரிக்காவுடனான வழக்கில் சமரச உடன்பாட்டை எட்டியதையடுத்து கடந்த 5 வருடங்களாக பிரித்தானிய பெல்மார்ஷ் சிறையில் வைக்கப்பட்டிருந்த விக்கிலீஸ் துணை ஸ்தாபகர் ஜூலியன் அஸாஞ் நேற்று (செவ்வாய்) விடுதலையானார். அமெரிக்க இரகசிய உளவுத் தகவல்களைத் தொழில்நுட்பம் மூலமாகப் பகுத்தறிந்து உலகுக்கு அம்பலப்படுத்தையமை காரணமாக அந்நாடு அவர்மீது 18 குற்றச்சாட்டுகளைச் சுமத்தியிருந்ததுடன் அவரை அமஎரிக்காவிற்கு நாடுகடத்தும்படி பிரித்தானியாவை வற்புறுத்திக் கொண்டிருந்தது. நாடு கடத்தப்பட்டால் அவர் உயிருக்கு ஆபத்து எனக்கூறி உலகம் பூராவுமிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் தொடர் போராட்டங்களையும் எதிர்ப்புகளையும் தெரிவித்து வந்தனர். நாடு கடத்தலுக்கு எதிராக பிரித்தானிய நீதிமன்றங்களில் அவரது மனைவி மற்றும் ஆதரவாளர்களால் மேன்முறையீடும் செய்யப்பட்டிருந்தது.

பெல்மார்ஷ் சிறை ஒரு உயர் பாதுகாப்பு ரகமானது. இங்குள்ள 2 x 3 மீட்டர் அளவுள்ள அறையில் அவர் 1901 நாட்களாகச் சிறையில் வாடினார். நாளொன்றுக்கு 1 மணித்தியாலம் மட்டுமே அவர் வெளியே வரலாம்.

நாடுகடத்தல் தொடர்பான அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை இன்னும் முற்றுப்பெறவில்லையாயினும் இரு தரப்பும் இணக்கம் கண்டதனால் அவர் உடனடியாக சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்.

அவரது விடுதலைக்காகப் போராடிய அனைவருக்கும் விக்கிலீக்ஸ் ஸ்தாபனம் X செய்திச் சேவை மூலம் நன்றி தெரிவித்திருக்கிறது.

இருதரப்பு பேச்சுவார்த்தைகளின்படி அமெரிக்க பசிபிக் தீவுகளில் ஒன்றான வட மரியானா தீவிலுள்ள சேப்பியன் நகரில் அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் வைத்து புதன் கிழமை காலை 9:00 மணிக்கு அவர் தனது குற்றங்களை ஒப்புக்கொள்வார் எனவும் இதைத் தொடர்ந்து அவர் தனது பிறந்த நாடான அவுஸ்திரேலியாவிற்குத் திரும்புவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அஸாஞ்சின் காலத்தில் ஈராக், ஆப்கானிஸ்தான் போர்கள் தொடர்பாக அமெரிக்கா பரிமாறிய உயர் இரகசிய உளவுத் தகவல்கள் மற்றும் அமெரிக்க ராஜதந்திரிகள் வெவ்வேறு நாடுகளிலிருந்து அங்குள்ள நிலைமைகள் பற்றி மேற்கொண்ட இரகசியத் தொடர்பாடல்கள் போன்ற விடயங்களை விக்கிலீக்ஸ் இணையத்தளம் மூலம் அம்பலப்படுத்தினார். 2007 இல் ஈராக்கில் பொதுமக்கள் மீது அமெரிக்க ஹெலிகொப்டர் துப்பாக்கிப் பிரயோகம் செய்வதை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியிருந்தது. இதனால் கடும் கோபமுற்ற அமெரிக்கா அவரைக் கைதுசெய்யப் பல முயற்சிகளையும் எடுத்து வந்தது.

அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்குப் பயந்து பிரித்தானிய அரசு அவரை நாடுகடத்திவிடக்கூடும் என்ற அச்சத்தில் எக்குவடோர் நாட்டின் பிரித்தானிய தூதரகம் அஸாஞ்சிற்கு அடைக்கலம் கொடுத்திருந்தது. ஏழு வருடங்கள் இங்கு மறைந்து வாழ்ந்ததைத் தொடர்ந்து அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக 2019 இல் எக்குவாடோர் அரசு அவரது அடைக்கலத்தை ரத்து செய்து அவரை வெளியேற்றியது. இவ்வேளை பிணையை உதாசீனம் செய்த குற்றத்திற்காக பிரித்தானிய அரசு அவரைக் கைது செய்து சிறையில் அடைத்ததுடன் அமெரிக்காவிற்கு நாடுகடத்துவதற்கான முயற்சிகளையும் ஆரம்பித்தது. இம்முயற்சிகளுக்கெதிராக தமிழ் பாடகி மாதங்கி அருட்பிரகாசம் உடபடப் பல பிரித்தானிய மனித உரிமை செயற்பாட்டாளர்களும் ஆதரவாளர்களும் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வந்தனர். அவர் சிறையொலிருக்கும்போது மணம் புரிந்த மனைவியும் இப்போராட்டத்தை முன்னெடுத்து வந்தார்.

லண்டனிலுள்ள பெல்மார்ஷ் சிறை சித்திரவதைக்குப் பேர்போனது எனவு அங்கு தொடர்ந்து இருந்திருந்தால் அவர் நோய்வாய்ப்பட்டு இறந்திருக்ககூடும் என அவரது வழக்கறிஞர்களும் ஆதரவாளர்களும் தெரிவித்திருந்தனர்.