Sri Lankaமாயமான்

விக்கிரமசிங்க பிளான் வேலை செய்யுமா?

சும்மா ஒரு அலசல்…

மாயமான்

Disclaimer: இதற்கும் கந்தையா பிளானுக்கும் எதுவித தொடர்புமில்லை என்பதை முதலில் தெரிவித்து விடுகிறேன். ஆனாலும் தலைப்புக்கு அதுதான் அடியெடுத்துக் கொடுத்தது என்பதையும் ஒப்புக் கொள்கிறேன். நாரதர் கலகம் நல்லதாகவே முடிவது வழக்கம். இப்போது அலசலுக்கு வருவோம்.

அரகாலயா ஆர்ப்பாட்டங்கள் அடங்கி கொழும்பு தூங்குவதைப் பார்த்தால் அடுத்து என்ன சூறாவளி வரப் போகிறதோ என அச்சமாக இருக்கிறது. ரணில் விக்கிரமசிங்க பின்கதவால் வந்து ராஜபக்சக்களுக்கு விலங்குகளைப் போட்டமை ஒரு வகையில் நல்ல விடயம். விக்கிரமசிங்கவை ஒரு குள்ள நரி என்று பலரும் சொல்வார்கள். ஆனாலும் அந்த நரி முடியைத் தன் தலையில் சூடிக்கொண்ட முறை, அது நமக்கு எதிரியாயினும், பாராட்டப்பட வேண்டியது.

அடுத்த ஆண்டு இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினம். அதற்கு முன் தமிழருக்கு ஒரு தீர்வைப் பெற்றுத் தருவதாக விக்கிரமசிங்க பிளான் (வி.பி.) சொல்கிறது. 1960 களிலிருந்து ஏமாற்றப்பட்டுவரும் தமிழர்களால் இதை நம்ப முடியாது. இந்த தடவை விக்கிரமசிங்க நிதியமைச்சராகவும் இருப்பதால் அவரது வரவு செலவுத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு தமிழரின் ஆதரவைப் பெறுவதற்காக அவர் ஆடும் நாடகம் என வைத்துக்கொள்வோம்.

ஆரம்பத்தில் வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிக்கப் போவதாகக் கூறிவந்த கூட்டமைப்பினர் தற்போது தாம் அதை எதிர்க்கப் போவதில்லை எனக் கூறிவிட்டனர். ஏனைய தமிழ் பா.உறுப்பினர்கள் வாயில்லாப் பிராணிகளாக இருக்கும்போது கூட்டமைப்பினரையே தமிழர்களின் பிரதிநிதிகளாக சிங்களவர்களும் உலகமும் பார்க்கிறது என்பது வேறு விடயம். ஆனால் கூட்டமைப்பு விக்கிரமசிங்கவினால் இன்னுமொரு தடவை ஏமாற்றப்படப் போகிறது என அவர்கள் கூடிக் குலாவி மகிழ்வதற்கு இது நல்லதொரு சந்தர்ப்பம். பொதுமக்கள் மனதிலும் இப்படியான சந்தேகங்கள் இருப்பதனால் கூட்டமைப்பினருக்கு இது மேலும் சங்கடத்தைக் கொடுக்கும் என்பதிலும் சந்தேகமில்லை.

இந்த நிலையில் விக்கிரமசிங்க பிளான் என்ன? அது வேலை செய்யுமா என்பது ஒரு முக்கியமான கேள்வி. விக்கிரமசிங்க, பிளான் போட்டு வேலை செய்வது இதுதான் முதல் தடவையல்ல. தனது இருப்புக்காகவும், வெற்றிக்காகவும் யாரோடும் கூட்டுச்சேர்ந்து எதிரியை ஒழித்துக்கட்டுவதில் கைதேர்ந்த மனிதர் அவர். ஆனால் அதற்காக அவர் கொடுத்த விலையும் அதிகம். தேர்தல் நடைபெறாமல் ஜனாதிபதியாக வந்தமை கூட அவரது சாணக்கியத்தின் வெளிப்பாடுதான். 2005 தேர்தலில் விடுதலைப் புலிகள் தமிழ் மக்களை வாக்குகளைப் போடாமல் தடுத்த காரணத்தினால்தான் மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்தார். இதன் பலனை விடுதலைப் புலிகள் மட்டுமல்ல மொத்த தமிழினமுமே அனுபவித்து வருகிறது. இந்த தேர்தல் பகிஷ்கரிப்பிற்காக விடுதலைப் புலிகள் ராஜபக்ச தரப்பிடம் பணம் பெற்றுவிட்டனர் என புலி எதிர்ப்பு தரப்பு கூறிவருகிறது. இருப்பினும் தேர்தல் பகிஷ்கரிப்பிற்குக் காரணம் அதுவல்ல என தென்னிலங்கை ஊடகங்கள் அப்போது தெரிவித்திருந்தன.

2001 முதல் 2004 காலப்பகுதியில் விடுதலைப் புலிகளை, குறிப்பாக வடக்கு – கிழக்கு பிரதேச புலிகளை உடைப்பதற்கு விக்கிரமசிங்க முயன்றுவந்ததாகவும் இதற்கு பலவிதத்திலும் உதவியாக இருந்தது சாயிட் அலி சாஹிர் மெளலான என்ற ரணில் அரசாங்கத்தில் உதவி அமைச்சராக இருந்த ஒருவர் எனவும் கூறப்படுகிறது. சமாதானப் பேச்சுவார்த்தை ரணிலின் முயற்சிக்கு மேலும் உதவி செய்தது. இதே காலப் பகுதியில் புலிகள் மீதான சர்வதேச தடையைக் கொண்டுவர ரணில் பின்னணியில் வேலைசெய்திருந்தார். 2004 இல் நவீன் திசநாயக்கா என்பவர் கூட்டமொன்றில் பேசும்போது “பிரபாகரனால் இனி மேல் போரை வெற்றிகரமாக நடத்த முடியாது. காரணம் கருணா அம்மான் ஏற்கெனவே புலிகளிலிருந்து பிரிந்துவிட்டார் (ஜூலை 2004). அவரைப் பிரித்ததற்கான பெரிய பங்கு ரணில் விக்கிரமசிங்கவுக்கே உரியது” எனப் பேசியிருந்தார். இதை அப்போது யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ‘உதயன்’ பத்திரிகை துலாம்பரமாக வெளியிட்டிருந்தது. கருணாவைப் பிரித்து இயக்கத்தைப் பலவீனப்படுத்திய காரணத்துக்காகவே 2005 தேர்தலில் விக்கிரமசிங்கவைத் தோற்கடிப்பதற்கு விடுதலைப் புலிகள் திட்டமிட்டார்கள் என தென்னிலங்கை ஊடகங்கள் அப்போது தெரிவித்திருந்தன. ஆனாலும் புலிகளைப் பலவீனப்படுத்தி அவர்களை தீர்வொன்றுக்கு கொண்டுவருவதே அவரது நோக்கமெனவும் அவர்களை முற்றாக ஒழிப்பது விக்கிரமசிங்க பிளானில் இல்லை எனவும் கே.கே.எஸ்.பெரேரா என்னும் ஒரு ஊடக ஆய்வாளர் தெரிவித்திருந்தார்.

இதற்கு முக்கிய உதாரணமாக, 2002 இல் அவர் பிரதமராக இருந்தபோது, சமாதான உடன்படிக்கையில் தலைவர் பிரபாகரன் கையெழுத்து வைத்தமை தொடர்பான ஒரு உதாரணத்தை அவ்வூடகவியலாளர் கூறுகிறார். அமைச்சரவையிடம் கலந்துரையாடியமைக்குப் பிறகே உடன்படிக்கையின் வரைவை விக்கிரமசிங்கா எடுத்துச் சென்றதாகவும் அதில் உடனேயே தலைவர் பிரபாகரன் கையெழுத்து வைத்துவிட்டார் எனவும் அதற்குப் பின்னர் ஜனாதிபதி சந்திரிகாவைச் சந்தித்து பேசியபோது தனக்குத் தெரியாமல் இதை எப்படிச்செய்ய முடியும் என அவர் பொங்கியெழுந்ததாகவும் அதைத் தொடர்ந்து அவ்வுடன்படிக்கை தூக்கியெறியப்பட்டதாகவும் அவர் கூறுகிறார். சந்திரிகாவின் இச் சீற்றத்தின்போது “ஒன்றுபட்ட இலங்கைக்குள்தான் தீர்வு. நீங்கள் பிரபாகரனுக்கு தமிழ் ஈழத்தைக் கொடுக்கத் தீர்மானித்து விட்டீர்கள்” எனக் கூறியதாகவும் அவர் தெரிவிக்கிறார். இதனால் அப்போது தோல்வியைத் தழுவியது ரணில் விக்கிரமசிங்க என்பதே அவரது வாதம்.

பின்னர், 2015-2019 காலப்பகுதியில் சந்திரிகாவின் அனுசரணையுடன் ஜனாதிபதியாக்கப்பட்ட மைத்திரிபால சிறீசேனவுடன் உடன்படிக்கை செய்து ரணில் விக்கிரமசிங்க பிரதமராகிறார். இந்த உடன்படிக்கையில் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களைக் களைவதே முக்கியமான அம்சம். அதிகாரக் களைவுக்குப் பின்னர் பிரதமராகிய ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாராளுமன்றத்தின் மூலம் அதிக அதிகாரங்கள் வழங்கப்படும். இக்கால கட்டத்தில் 19 ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து அதன் மூலம் தமிழருக்கு காணி , பொலிஸ் அதிகாரங்களுடன் கூடிய அதிகாரப் பகிர்வைப் பெற்றுத் தருவதாக அவர் கூறியிருந்தார். இதைத் தமிழர் தரப்பு முற்றாக நம்பியும் இருந்தது. ஆனால் சிறீசேனவின் சதியினால் அது தகர்க்கப்பட்டுவிட்டது. 52 நாட்களின் பின்னர் விக்கிரமசிங்கவை மீண்டும் பதவியில் அமர்த்துவதற்காக முன்னணியில் நின்று உழைத்தவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர். 2020 பாராளுமன்றத் தேர்தலில் சிறீசேன தரப்பு ராஜபக்சக்களுடன் கூட்டு சேர்ந்து விக்கிரமசிங்கவைப் படுதோல்வியடையச் செய்தது. விக்கிரமசிங்க பிளான் 3.0 இங்கிருந்துதான் ஆரம்பித்தது.

ராஜபக்ச சகோதரர்களிடையே நிலவி வரும் உட்பூசல்களை நன்றாக அறிந்து வைத்திருப்பவர் ரணில். இதைச் சாதகமாகப் பயன்படுத்தி கோதாபயவின் இலங்கை குடியுரிமையை அமெரிக்காவின் உதவியுடன் துரிதப்படுத்தி அவரை இலங்கைக்கு அழைத்தார். கோதாபய ராஜபக்ச புத்தி கூர்மை அதிகம் இல்லாதவர் என்பது பலருக்கும் தெரியும். அரகாலயா மக்கள் எழுச்சியைச் சாதகமாகப் பயன்படுத்தி ராஜபக்ச குடும்பத்தினரை மக்களிடமிருந்து வெற்றிகரமாக அன்னியப்படுத்தித் தான் பின்கதவால் உள்ளே நுழைந்துகொண்டார். ஜனாதிபதி பதவியைக் கையாடுவதற்கேற்றவாறு பொதுஜன பெரமுன மட்டுமல்லாது கூட்டமைப்பு, முஸ்லிம் கட்சிகள் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களையும் வளைத்துப் போட்டுக்கொண்டார். ஆனாலும் அவர் வாக்குறுதி கொடுத்ததைப் போல நிறைவேற்று முறைமையை ஒழிக்கவில்லை. அவரது காரியங்களை நிறைவேற்ற இந்த பலமான கைத்தடி அவருக்கு மிக் மிக அவசியமானது. சீர்குலைந்த பொருளாதாரத்தை நிமித்தி எடுப்பதற்காக அது தேவை என்பதை மக்களையும் நமப வைத்தார். அரகாலயா முடக்கப்பட்டது. சர்வதேசங்கள் ஓடிவந்தன. சீனா ஓரம் கட்டப்பட்டது. அவரது பதவிக்கு இப்போது ஆபத்தில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. அடுத்தது? விக்கிரமசிங்க பிளான் 4.0.

சர்வதேசங்கள் இலங்கையில் காலூன்றுவதற்கான தேவையை ராஜபக்ச-சீன உறவு நியாயப்படுத்திவிட்டது. எனவே இலங்கையை மீட்க விக்கிரமசிங்க ஒருவராலேயே முடியுமென சர்வதேசம் முடிவெடுத்துவிட்டது. ஆனாலும் மனித உரிமைகள், சிறுபான்மை உரிமைகள் என சில சில்லறை விடயங்களை முன்வைத்து சர்வதேச நாணைய நிதியம் என்ற எலும்புத்துண்டை இலஙகையின் முன் ஆட்டிக்கொண்டு நிற்கிறது சர்வதேச சமூகம். தமிழரது நியாயமான உரிமைகளை வழங்குவதால் நாட்டின் பொருளாதாரம் வெகு விரைவாக முன்னேறும் என்பதை அரகாலயாவும் ஓரளவுக்கு சிங்கள மக்களுக்கு உணர்த்திவிட்டது. எனவே இந்தத் தடவை விக்கிரமசிங்க தமிழருக்கு ஏதாவது செய்ய வாய்ப்புண்டு. ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் இரண்டு வருடங்களுக்கு மேல் கால அவகாசமுண்டு.அதைவிட அவரது கையில் நிறைவேற்று அதிகாரம் என்ற பெரிய தடியொன்றுமுண்டு. வழக்கமாக போராட்டங்களை முன்னெடுக்கும் தொழிற்சங்கங்கள், காவிக் கோஷ்டிகள் போன்றவற்றை வீடுகளில் முடக்குவதற்கு பயங்கரவாதத் தடைச்சட்டம் என்ற உலக்கையையும் அவர் பாவித்துவிட்டார். அரகாலயா 2.0 வுக்கு இப்போது சாத்தியமில்லை.

75 ஆவது சுதந்திர தினத்துக்கு முன்னால் ஒரு தீர்வுப்பொதியை வைக்கப்போவதாக விக்கிரமசிங்க கூறுவதை நம்புவதா இல்லையா எனபது கூட்டமைப்பிற்கு மிகவும் சங்கடம் தரும் ஒரு விடயம். மரணத்திற்கு நாள் குறிக்கப்பட்ட ஒரு மனிதன் கடவுளிடம் மன்றாடுவதா இல்லையா என்பதைப் போல. தற்செயலாக கடவுள் கண்ணைத் திறந்து விட்டால்?

ரணில் விக்கிரமசிங்கவின் பிளான் 4.0 வேலை செய்யுமாகில் எல்லோருக்கும் அது பயனளிக்கும். நாட்டின் பொருளாதாரமும் சீர்செய்யப்படும். இரண்டு வருடங்களுக்குப் பிறகு விக்கிரமசிங்க மீண்டும் படுதோல்வியடைந்தாலும் சர்வதேசங்களின் கண்களில் அவர் ஒரு ஸ்டேட்ஸ்மன் என்ற பெருமையுடன் செல்வார். முன்னாள் போராளிகளை அழைத்து டெல்லியில் பேசியதன் மூலம் இந்தியாவும் தன் பங்கிற்கு ‘இந்திய பிளானை’ப் போட்டுக் காட்டுகிறது. ராஜபக்சக்கள் பலவீனப்படிருக்கும் நிலையில் வீரவன்சக்கள் கைவிலங்கிடப்பட்டிருக்கும் நிலையில் தடியுடன் நிற்கும் விக்கிரமசிங்கவை நம்புவதைத் தவிர வேறு வழியில்லை. பார்ப்போம்.