EntertainmentIndia

‘வா தலைவா’ | முடிவை மாற்றும்படி ரஜினியைக் கோரி ரசிகர்கள் மாபெரும் ஆர்ப்பாட்டம்


ரஜினி மக்கள் மன்றம் விடுத்த எச்சரிக்கையையும் மீறி ரஜினி ரசிகர்கள் மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலமொன்றை நடத்துகிறார்கள்.

இன்று அதிகாலை 7:00 மணி முதல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கூடத் தொடங்கியிருக்கும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள், நடிகர் ரஜினிகாந்த் அரசியலிலிருந்து ஒதுங்கும் எண்ணத்தைக் கைவிட்டு, கட்சியைத் தொடங்கும்படி கேட்டு வருகிறார்கள்.

ஆர்ப்பாட்ட ஊர்வலம் காலை 10 மணிக்கு ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், காலை 7 மணிக்கே, தமிழ்நாடு முழுவதிலுமிருந்து, ஆண்கள், பெண்கள் என பேருந்துகளில் வந்தி இறங்கியவண்ணமிருக்கின்றனர். ‘வா தலைவா வா’ என்று ஓங்கி முழக்கமிட்டபடி மக்கள் கூட்டம் கோட்டத்தை நிறைத்தபடி குழுமியுள்ளனர் என அறிவிக்கப்படுகிறது.

வேறெந்தக் கட்சிகளின் கூட்டங்களில் போலல்லாது, ஜினி மக்கள் மன்றத்தின் ஆலோசனைக்கு எதிராக இந்த அளவில் அவரது ரசிகர்கள் கூடுவது பலருக்கு ஆச்சரியத்தை அளித்துவருகிறது எனினும், இதுவும் ஒரு நாடகமாக இருக்கலாமோ என்ற சந்தேகமும் எழும்பாமல் இல்லை.

அரசியலில் இறங்கப்போவதாக ரஜினி அவசரப்பட்டு விட்ட அறிக்கையும் பின்னர் அதே அவசரத்தில் அதை மீளப்பெற்றதும் அவற்றின் பின்னாலுள்ள பா.ஜ.க. அரசியல்வாதிகளின் செயற்பாடும் கொஞ்சம் கொஞ்சமாக அம்பலமாகிக்கொண்டிருக்கின்றன. தமிழ்நாட்டில் இதன் சூத்திரதாரியாக இருக்கும் பா.ஜ.க. பிரகிருதி துக்ளக் இதழாசிரியர் குருமூர்த்தி எனப்படுகிறது.தமிழ்நாட்டில் காலூன்றுவதற்காக பா.ஜ.க. தன்னைப் பாவிக்கிறது என்பதை ரஜினி உணர்ந்ததும், தன்மீது காவி போர்த்தப்படுவதை அவர் விரும்பாமையும், அவரது பின்வாங்கலுக்குக் காணமாக இருப்பினும் அவர் ‘இன்று போய் நாளை வா’ மனநிலையோடு இவ்வழுத்தங்களிலிருந்து தற்காலிகமாகப் பின்வாங்கினாரா என்பதும் இப்போது எழும் கேள்வி.

டிசம்பர் 31 அன்று தனது அரசியல் வருகையை அறிவிப்பேன் என்றவர் அதைத் தொடர்ந்து மாநில ரீதியாகத் தனது வெற்றிக்கான சாத்தியம் பற்றிக் கருத்துக்கணிப்பொன்றைக் கோரியிருந்ததாகவும் அப்போது செய்திகள் வந்திருந்தன. இதன் பிறகுதான், பின்வாங்குவதாக அவர் அறிவிக்கிறார். சில வேளைகளில் பா.ஜ.க. கூட்டு இல்லாமல் கமலின் மக்கள் நீதி மையத்துடன் கூட்டு வைத்தால் வெற்றி சாத்தியம் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருக்குமோ?

என்ன இருந்தாலும், ரஜினி மிகவும் சிந்தித்து அடியெடுத்து வைப்பவர். நண்பர்கள் யார், போலிகள் யார் என்பதை அவர் மிகவும் துல்லியமாக எடைபோடக் கூடியவர். தற்போது அவருக்கு தமிழ்நாட்டில் இருக்குமொரு நெருங்கிய நண்பர் கமல் ஹாசன் மட்டுமே.

இந்தவிடத்தில் இரண்டு சாத்தியங்கள் முந்தள்ளப்படுகின்றன.

ஒன்று: கமல் ஹாசனின் வற்புறுத்தலால் ரஜினி மனம் மாறி மீண்டும் அரசியலுக்கு வர விரும்பியிருக்கலாம். ஆனால் அடிக்கடி மனம் மாறுவது குறித்த வெட்கம் / தயக்கம் காரணமாக இந்த ரசிகர்களின் படையெடுப்பு அரங்கேற்றப்பட்ட ஒன்றாகவும் இருக்கலாம். இந்த அளவுக்குப் பிரமாண்டமான ஆர்ப்பட்ட ஊர்வலத்தின் பின்னால் ரஜினி மக்கள் மன்றம் இல்லை என்பது முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது போலானது. “தமிநாட்டு மக்கள் கேட்டுக்கொண்டார்கள், நான் வருகிறேன்” என்ற முழக்கத்தோடு ரஜினி மீண்டும் களமிறங்கலாம். “நாங்கள் பேரணியில் கலந்துகொள்ள முடியாது. ஆனால் கலந்துகொள்ள விருபுபவர்களை நாம் தடுக்கப் போவதில்லை” எனக் கூறும் மாவட்டச் செயலாளர்களது நடவடிக்கைகள் இதைத்தான் சொல்கின்றன.

இரண்டு: ரஜினியின் கசப்பான பின்வாங்கலினால் மூக்குடைந்து போன அமித் ஷா – அர்ஜுன் மூர்த்தி – குருமூர்த்தி ஆகிய மும்மூர்த்திகள் தொகுதிப் பங்கீட்டுக்காக அ.இ.அ.தி.மு.க. வுடன் பேரம் பேசும் பலத்தையும் இழந்துவிட்டிருந்தனர். இதனால், “தமிழ்நாட்டில் 60 ஆசனங்களைப் பா.ஜ.க. எடுக்கும்” எனச் சூளுரைத்த அர்ஜுன் மூர்த்தி மேலும் கசப்புற்று இருக்கிறார். ரஜினியின் ரசிகர்கள் மூலம் அவரைத் திருப்பிக் கொண்டுவர இம் மும்மூர்த்திகள் எடுக்கும் முயற்சிகளில் ஒன்றாகவும் இவ் ‘வா தலைவா வா’ பேரணி இருக்கலாம். ஆர்.எஸ்.எஸ்ஸின் கரங்கள் அகலமானவை.

-மாயமான்