வாரிசு vs துணிவு :விஜய் / அஜித் ரசிகர்களை மோதவைத்து இலாபமீட்ட வாரிசு தயாரிப்பாளர் முயற்சி
மாயமான்
2023 இல் திரைகளை மின்னவைக்கும் முதலாவது படங்களாக ‘தளபதி’ விஜய்யின் வாரிசு ‘தலை’ அஜித்தின் துணிவு ஆகியன வெளியாகின்றன. பொங்கலன்று வெளியாகவிருக்கும் இப் படங்களில் வாரிசுவின் முன்னோட்டம் (trailer) ஜனவரி 4 அன்று வெளியாகியிருக்கிறது. துணிவின் முன்னோட்டம் டிசம்பர் 31 வெளியாகியிருக்கிறது.தெலுங்கிலும் தமிழிலும் தயாரிக்கப்பட்டு ஏக காலத்தில் இவை வெளியாகின்றன.
வாரிசு
விஜய், ரஷ்மிகா மண்டன்னா ஆகியோர் முன்னணி பாத்திரங்களிலும் ஜயசுதா, ஷாம், பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், சிறீகாந்த், குஷ்பு, சங்கீதா கிரிஷ், யோகி பாபு ஆகியோர் இதர பாத்திரங்களிலும் நடித்திருக்கும் வாரிசு வை வாம்ஷி ப்ல்டிப்பள்ளி இயக்கியிருக்கிறார். கதை பழைய கள்ளு தான் எனினும் புதிய மொந்தையில் இட்டு ஊட்டப்படுகிறது.
கதை: ஒரு கூட்டுக் குடும்பத்தின் இளைய மகன் விஜய். தந்தையார் (சரத்குமார்) குடும்பப் பெரு வணிகத்தை நிர்வகித்து வருபவர். ஷாம், சிறீகாந்த் விஜயின் மூத்த சகோதரர்கள். திடீரென முளைத்த போட்டி வணிகரான பிரகாஷ் ராஜினால் சரத்குமாரின் நிறுவனம் உடைந்து தகரும் நிலைக்கு வருகிறது. அதை நிமிர்த்தி எடுக்கவென்று அவருக்கே உரிய தனி ஸ்டைலில் வந்து குதிக்கிறார் ‘தளபதி’. முன்னோட்டம் தந்த முன்னோட்டம் இது. மிகுதியை ஜனவரி 11 முதல் உரிய இடங்களில் பாருங்கள்.
துணிவு
ஜனவரி 11 அன்று வாரிசு வுடன் போட்டியாக உலகத் திரைகளில் ஒளிக்கவிருக்கும் துணிவு ‘தலை’ அஜித் குமாரின் ஒருவகைத் திரில்லர் வகையறா. தெகிம்பு என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியாகும் இப்படத்தை எச்.வினோத் இயக்கியிருக்கிறார். தமிழில் அஜித் குமாருடன் சமுத்திரக்கனி, ஜோன் கொக்கன், வீரா, பக்ஸ் ஆகியோர் நடிக்கிறார்கள். அஜித் இதில் ஒரு வில்லனுக்கான பாங்குடன் தோன்றுகிறார். டிசம்பர் 31 அன்று இதன் முன்னோட்டம் வெளியாகியிருக்கிறது.
கதை: சென்னையில் ஒரு குழுவொன்று வங்கிக் கொள்ளைகளைத் திட்டமிட்டு நடத்துகிறது. ஆனால் அதன் நோக்கம் என்ன என்பது மர்மமாக இருக்கிறது. அதைவிட முன்னோட்டம் வேறெதையும் அவிழ்த்துவிடவில்லை. மங்காத்தா படத்தில் விநாயக் மாகாதேவ் ஆக மிளிரும் அஜித் குமாரை இதில் பார்க்கலாம் என விமர்சகர்கள் கூறுகிறார்கள். அதே வேளை இப்படம் தளபதி விஜய்யின் பீஸ்ட் படத்தைப் பார்த்ததுபோல இருக்கிறது எனவும் சிலர் கூறுகிறார்கள்.
ஒப்பீடு
இரண்டு படங்களும் ஜனவரி 11 இல் வெளியாவது ரசிகர்கள் மத்தியிலும் திரையரங்கு சொந்தக்காரர்கள் மத்தியிலும் பிரச்சினைகளைக் கிளப்பி வருகிறது. தமிழ்நாட்டிலுள்ள 800 திரையரங்குகளில் அரைக்கரைவாசியாக இரண்டு படங்கள் ஓடுவதற்கும் ஒப்பந்தமாகியிருக்கிறது என்கிறார்கள். இதே வேளை தமக்கு குறைந்தது 50 திரையரங்குகளை அதிகமாகத் தரும்படி வாரிசு தயாரிப்பாளர் டில் ராஜு தெலுங்கு NTV தொலைக்காட்சியில் கூறியிருக்கிறார். “அஜித் குமாரோடு ஒப்பிடுகையில் விஜய் தமிழ்நாட்டின் பெரிய நடிகர். எனவே அவரது படத்துக்கு அதிக திரையரங்குகள் தரப்பட வேண்டும்” என அவர் கூறிய விடயம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் புயலைக் கிளப்பி வருகிறது.
வாரிசு பலதரப்பட்ட வயதினரையும் மகிழ்விக்கும் தரமுள்ளது எனவும் துணிவு ஒரு குறிப்பிட்ட ரக ரசிகர்களையே மகிழ்விக்கும் எனவும் சில விமர்சகர்கள் கூறுகிறார்கள். இக் காலத்தில் படங்கள் வெளிவருவதற்கு முன்னரேயே அவற்றைப்பற்றிய பிம்பங்களைப் பிரமாண்டமாகக் கட்டியெழுப்பி (hype) பணத்தைச் சம்பாதித்துவிடும் புதிய யுக்தியைத் தயாரிப்பாளர்கள் கற்றுக்கொண்டுவிட்டனர். அப்பாவி ரசிகர்கள் பால் குடங்களோடு அலையும் வரைக்கும் இது சாத்தியமே.
இன்றய வாழ்வுச் சவால்களினால் உளச்சோர்வுக்குள்ளாகும் இயந்திரச் சமூகங்களுக்கு பொழுதுபோக்கு என்பது ஒரு ஒளடதம் என்பதையும் மறுப்பதற்கில்லை. பாருங்கள், மகிழுங்கள்.