வாரத்துக்கு 4 நாட்கள் வேலை, 2 வருட மகப்பேற்று விடுமுறை இலங்கையில் சட்டமாகிறது – யானைகளுக்கு மட்டும்!


இலங்கையில் யானைகளை துஷ்பிரயோகம் செய்வதைத் தடுக்க அரசாங்கம் முதன் முதலாக, பல புதிய யானை நலச் சட்டமொன்றை அறிவித்திருக்கிறது.

வசதிபடைத்த தனியார்களாலும், பெளத்த விகாரைகளினாலும் பராமரிக்கப்படும் யானைகள் பார வேலைகள், கேளிக்கைகள் மற்றும் பெரஹரா போன்ற மதச் சடங்குகளிலும் பாவிக்கப்படுகின்றன. இந் நடவடிக்கைகளின்போது யானைகள் பாரிய துன்புறுத்தல்களுக்குள்ளாகின்றன என நீண்டகாலமாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இதற்கொரு தீர்வைக் கொண்டுவருமுகமாக அரசாங்கம், பயிற்றப்பட்ட யானைகள் பதிவுச் சட்டம் 01 என்னும் சட்டத்தை ஆகஸ்ட் 19 ம் திகதி வெளியிட்ட வர்த்தமான அறிவித்தல் மூலம் பிரகடனப்படுத்தியுள்ளது.

இவ்வர்த்தமானி அறிவிப்பின்படி பின்வரும் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வருகின்றது:

  1. மது அல்லது போதைவஸ்து பாவித்திருக்கும்போது பாகர்கள் யானைகளைக் கையாளக் கூடாது
  2. யானையின் மரபணு அடையாளத்தைத் தாங்கிய, தலை, துதிக்கை, முழு வாலுடன் கூடிய பின்புறம், இரு பக்கங்கள் அனைத்தையும் கொண்ட அடையாள அட்டையை யானை தன்மீது எப்போதும் தொங்கவிட்டிருக்க வேண்டும்
  3. 6 மாதங்களுக்கொரு தடவை செய்யப்பட்ட சுகாதார பரிசோதனைக்கான சான்றுகளை யானைகள் வைத்திருக்க வேண்டும்
  4. நாளொன்றுக்கு 4 மணித்தியாலங்கள் மட்டுமே யானைகள் வேலை செய்ய அனுமதிக்கப்படும்
  5. இரவில் வேலை செய்ய அநுமதிக்கப்படமட்டாது
  6. 60 வயது வந்தவுடன் பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட வேண்டும்
  7. கட்டுப்பாடற்ற சுகவீன விடுமுறை யானைகளுக்கு வழஙகப்பட வேண்டும்
  8. 5 வயதுக்குக் குறைந்த யானைகளை வேலைக்கு அமர்த்த முடியாது
  9. கர்ப்பிணி யானைகளையோ, மதம் பிடித்த யானைகளையோ வேலைக்கு அமர்த்த முடியாது
  10. மகப்பேறு கண்ட யானைகளுக்கு 2 வருட மகப்பேற்று விடுமுறை வழங்கவேண்டும்
  11. வாகனங்களை இழுப்பதற்குப் பாவிக்கும்போது தொடர்ச்சியாக நான்கு மணித்தியாலங்களுக்கு மேலாகப் பணியிலமர்த்த முடியாது
  12. அரசாங்கத் தேவைகள் தவிர்ந்த வேறெந்த தொலைக்காட்சி, சினிமா காட்சிகளில் யானைகளைப் பாவிக்க முடியாது
  13. ஆறு அல்லது அதற்கு மேலான சக்கரங்களைக் கொண்ட வண்டிகளில் மட்டுமே யானைகளை இடத்துக்கிடம் நகர்த்த முடியும்
  14. யானைகளை இடம் நகர்த்தும் பாரவூர்திகள் மணித்தியாலத்துக்கு 30 மைல்கள் வேகத்தைத் தாண்ட முடியாது
  15. தினக் குளிப்பு நேரம் குறைந்தது இரண்டரை மணித்தியாலங்களாவது இருக்க வேண்டும்
  16. தின நடைப்பயிற்சி குறைந்தது 5 கி.மீ. ஆவது இருக்க வேண்டும்
  17. யானை சுமக்கும் பாரம் அதன் உடல் எடையின் மூன்றிலொரு பங்கிற்குக் குறைவாக இருக்க வேண்டும்
  18. அதிக பட்சம் 4 பேர்களே ஒரு நேரத்தில் அதன் முதுகில் உட்கார்ந்து பயணிக்க முடியும்
  19. உயரழுத்த அலஙகார மின்விளக்குகளைப் பாவிக்க முடியாது
  20. யானைகள் மீது கூரிய ஆயுதஙகளையோ, தீயையோ அல்லது மயக்க மருந்துகளையோ பிரயோகிக்க முடியாது
  21. தப்பியோடிய யானை ஒன்றைக் காண்பவர்கள் அருகிலுள்ள பிரிவுச் செயலாளர் அலுவலகத்தில் தகவலைத் தெரிவிக்க வேண்டும்.

வெளிநாடுகள் தலையீடு எதுவுமின்றி உள்ளகப் பொறிமுறை ஒன்றின் மூலம் காணப்பட்ட இத் தீர்வினைப் பெறுவதற்கு யானைகளின் சார்பில் சமூகமளித்த பிரதிநிதிகள் யாரென்பது குறிப்பிடப்படவில்லை.

மாயமான்