‘வாயைப் பொத்திக்கொண்டிரு’
அகத்தியன்
பெற்றோர் அல்லது மூத்தவர்களிடமிருந்து அவ்வப்போது கிடைக்கும் வசைகளில் “வாயைப் பொத்திக்கொண்டு சும்மா இரு” என்பது மிகவும் பொதுமையானது. அவ்வசைக்கான காரணம் தேவையில்லாமல் வாயைக் கொடுத்து ***** புண்ணாக்காதே” என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம். வாய் மூடி மெளனமாக இருப்பது பல வழிகளிலும் நல்லது. கத்தியின்றி இரத்தமின்றி ஒருவரது பலத்தையும் பலவீனத்தையும் எடுத்துக்காட்டும் ஒரே ஒரு ஆயுதமும் அதுவே. ஆனால் இக்கட்டுரை மனிதப்பண்பு பற்றியதல்ல; மனித ஆரோக்கியம் சம்பந்தப்பட்டது.
ஆரோக்கியம் பற்றிய இக்கட்டுரை எனது உள்பெட்டியில் விழுந்து வாசித்தபோது அதைப் பகிராமல் இருக்க முடியவில்லை. அதை நான் ‘வாயைத் திறந்து வகுப்பெடுக்காமல்’ கட்டுரை மூலம் சொல்வதால் என் உடலுக்கும் ஆரோக்கியம் சற்றே சிதறும் என்ற அற்ப நம்பிக்கை தான்.
பூடகம் வேண்டாம், நேரே விடயத்துக்கு வருகிறேன். இது மூக்கினால் சுவாசிப்பது பற்றியது. அதற்காக வாயைப் பொத்தியேயாகவேண்டும்.
நைட்றிக் ஒக்ஸைட் (Nitric Oxide (NO)); உயர் வகுப்புகளில் இரசாயனம் படித்தவர்களுக்கு இது தெரிந்திருக்கும். எமது உடலின் ஆரோக்கியத்தில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. இது குறைவாக இருக்கும்போது உடலில் பல தீய விளைவுகள் ஏற்படுகின்றன. குறிப்பாக காமக் கிளர்ச்சியில் லடாய் அடித்துக்கொண்டிருக்கும் ஆண்களுக்கு இது மிக மிக முக்கியமானது.
NO வின் தொழிற்பாட்டின் முக்கிய அங்கமே உடலின் இரத்தோட்டத்தில் அது வகிக்கும் பங்கு. NO இன் முக்கிய பண்பு எமது இரத்தக் குழாய்களை தளரச் செய்வது (relaxation). இதனால் இரத்த அழுத்தம் குறைந்து இரத்த ஓட்டம் அதிகரிப்பதனால் நாடிகள் புடைப்பெடுக்கின்றன. (ஆண்கள் கவனிக்க: இதையேதான் வ*** வும் செய்கிறது). உடலின் மூலை முடுக்கெல்லாம் வரண்டுகொண்டிருக்கும் இழையங்களுக்கு ‘புதிய இரத்தம்’ கிடைப்பதால் அவை புத்துணர்ச்சி பெறுகின்றன. அதுமட்டுமல்லாது உடலுக்கு ஒவ்வாத நுண்கிருமிகளைத் தடுப்பதிலும், சளியின் வெளியேற்றத்திலும், சுவாசப்பைகளின் ஒக்ஸிசன் உள்ளீட்டைஅதிகரிப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றன.
நைட்றிக் ஒக்ஸைட் (Nitric Oxide (NO)) எப்படி உருவாக்கப்படுகிறது?
நமது உடலின் ஒன்பது துவாரங்களில் மூக்கு மிக மிக முக்கியமானது. மூக்கிலிருந்து தொண்டை வரையுள்ள பாதையின் சுவர்கள் பொதுவாக சளியினால் பாதுகாக்கப்பட்டுள்ளன. இச்சுவர்களின் வெளிப்புறச்சவ்வு விசேடமான எபிதீலியல் (epithelial) கலங்களால் ஆக்கப்பட்டவை. மூக்கினால் சுவாசிக்கும்போது உள்ளே எடுக்கப்படும் காற்றைப் பாவித்து நைட்றேட்கள் மற்றும் வைட்டமின் C ஆகியவறுடன் மேற்கொள்ளும் இரசாயன மாற்றங்கள் மூலம் இக்கலங்கள் நைட்றிக் ஒக்ஸைட்டை உற்பத்தி செய்கின்றன.
இந்நைட்றிக் ஒக்ஸைட் வாயு மூக்கு வழியாக உள்வரும் தீங்குதரும் பக்டீரியாக்களை அழிப்பது முதல் மூக்கில் இருக்கும் சளியை வெளியே தள்ளுவது வரை நம் உடலுக்குப் பல நன்மைகளை ச் செய்கிறது. இதே வேளை இச்சளிப்படலத்தில் வாழும் நல்ல பக்டீரியாக்கள் இந்நைட்றிக் ஒக்ஸைட்டினால் பாதிக்கப்படுவதில்லை. நாம் பிறக்கும்போது தாயின் பிறப்புறுப்பு மூலம் கடத்தப்படும் தாயின் நல்ல நுண்கிருமிகள் முதலில் தொற்றிக்கொள்வது இம்மூக்கின் சளிமூலம் தான். பின்னர் அவை குடல் மற்றும் இதர உறுப்புக்களிலும் குடி கொள்கின்றன. உடலின் நோயெதிர்ப்பு சக்தியின் உருவாக்கத்தில் இவை மிக முக்கிய பங்காற்றுகின்றன. மூக்கு சுவர்களின் எபிதீலியல் கலங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும் சுவர்களில் அழற்சி (inflammation) ஏற்பாடாதிருக்கவும் இந்நுண்கிருமிகள் உதவுகின்றன. இக்கலங்கள் ஆரோக்கியமாக இருந்தால் நைட்றிக் ஒக்ஸைட்டின் உருவாக்கம் செறிவாக இருக்கும்.
மூக்கைச் சுற்றியுள்ள எலும்புகளிடையேயுள்ள காற்றறைகளை sinus என்பார்கள். நெற்றி, சொக்கு, இமைப்புருவ இடை மற்றும் மூக்கு எலும்புகளிடையே இருக்கும் இக்காற்றறைகளில் இருக்கும் சுவர்கள் உருவாக்கும் சளி கிருமிகளையும், தூசி போன்றவைகளையும் சிறைப்பிடிக்கும் அதே வேளை சுவாசிக்கும் காற்றை சூடாகவும் ஈரப்பதனுள்ளதாகவும் வைத்திருக்க உதவுகிறது. Sinus இல் ஏற்படும் கிருமித் தொற்று Sinusitis என அழைக்கப்படுகிறது. இதன் போது மூக்கடைப்பு தலையிடி போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன. Sinusitis அழற்சி ஏற்படும்போது நைட்றிக் ஒக்ஸைட் உருவாக்கம் குறைக்கப்படுகிறது.
அதிகரிக்கும் சக்தி தேவை, சமிபாடு
நமது உடற்கலங்களுக்கு இரத்தம் வழியாகக் கொண்டுவரப்படும் உணவைச் சமிபாடடையச் செய்வதிலும் நைட்றிக் ஒக்ஸைட்டிற்கு பெரும் பங்குண்டு. உடலின் சக்தி தேவை அதிகரிக்கும்போது இரத்தக்குழாய்க்ளை தளரச் செய்து கலங்களுக்கும் இழையங்களுக்கும் இரத்தோட்டத்தை அதிகரிப்பதன் மூலம் உடலின் அதிகரிக்கும் சக்திதேவை நிறைவேறுகிறது.
செயற்கையாக நைட்றிக் ஒக்சைட் தேவையை பூர்த்தி செய்தல்
பீற்றூட் அதிகளவு நைட்றேட்டுகளைக் கொண்டிருப்பதால் NO உருவாக்கத்தில் இது பேருதவி புரிகிறது. இதே போல கோழி இறைச்சியில் இருக்கும் நொதியம் (coenzyme) எமது உடலில் உருவாக்கப்படும் நைட்றிக் ஒக்சைட்டைப் பேணுவதற்கு உதவுகிறது. அத்தோடு நைட்றிக் ஒக்சைட் உருவாக்கத்தில் உதவியாகவிருக்கும் நொதியத்தை அதிகரிக்க உள்ளி உதவுகிறது. Spinach, Kale போன்ற இலைவகைகளும் அதிக நைட்றேட்களைக் கொண்டிருக்கின்றன. இவற்றைவிட மிகவும் முக்கியமானவை எலுமிச்சை, தோடை போன்ற பழவகைகள். இவற்றிலுள்ள வைட்டமின் C நைட்றிக் ஒக்சைட் உருவாக்கத்திற்குத் தேவையான நொதியத்தை வழங்குகிறது. அத்தோடு விதைகள் அதிகளவு அமினோ அமிலத்தைக் கொண்டிருப்பதால் அவையும் நைட்றிக் ஒக்சைட் உருவாக்கத்தை ஊக்குவிக்கின்றன. கொக்கோவில் இருக்கும் flavanols நைட்றிக் ஒக்சைட் உருவாக்கத்தில் பெரும்பங்கு வகிக்கிறது. அத்தோடு ஊட்ட / ஊக்க மருந்துகளாகவும் நைட்றிக் ஒக்சைட் தனியார் கடைகளில் கிடைக்கிரது,
நைட்றிக் ஒக்சைட்டினால் கிடைக்கும் நன்மைகள்
- இரத்தக்குழாய்களைத் தளரச் செய்வதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது
- கிருமியழிப்பினாலும், புதிய கலங்களின் உருவாக்கத்தில் பங்கெடுப்பதனாலும் காயங்கள் விரைவில் ஆறுவதற்கு உதவுகிறது
- உடலைக் களைப்பற்றும் புஷ்டியுடனும் வைத்திருக்க உதவுகிறது.
- பெண்கள் இலகுவாகக் கருவுறுவதற்கும், கரு உடலில் இறுக்கமாகப் பிணைந்துகொள்ளவும், சிசுவின் ஆரோக்கியமான வளர்ச்சி மற்றும் இலகுவான பிறப்பிற்கும் உதவி செய்கிறது. அதே வேளை ஆண்களில் ஆரோக்கியமான விந்துருவாக்கம் மற்றும் உடலுறவுக்கான மோக அதிகரிப்பிற்கும் இது உதவுயாகவுள்ளது.
- இரத்த ஓட்டத்தை ஊக்குவிப்பதால் மூளைக்கான இரத்த வழங்கலை அதிகரிக்கவும் மூளையின் கழிவுகளை விரைவாக அகற்றிக்கொள்ளவும் உதவி செய்கிறது. அத்தோடு தூக்கத்தின் போது கலங்களால் வெளியேற்றப்படும் கழிவுகள் அகற்றப்படுவதால் மூளையின் செயற்திறன் அதிகரிக்கிறது
நைட்றிக் ஒக்சைட் குறைபாட்டின் அறிகுறிகள்
மனிதர்களில் வயது அதிகரிக்க அதிகரிக்க உடல் உருவாக்கும் நைட்றிக் ஒக்சைட்டின் அளவு குறைகிறது. நைட்றிக் ஒக்சைட் குறைபாட்டினால் ஏற்படும் அறிகுறிகள் சில:
- Depression: உளச்சோர்வு.
- High Blood Pressure: இரத்த உயரழுத்தம்: இருதயம் குருதியை நாடிகளின் மூலம் செலுத்தும்போது அதன் சுவர்கள் இறுக்கமாக இருந்தால் இரத்த அழுத்தம் அதிகம் எனக் கூறுவார்கள். இவ்வேளையில் நாடிகளின் சுவர்கள் தளர்வடைந்தால் (vasodilation) அழுத்தம் குறைவாக இருக்கும். இந்நாடிகளின் சுவர்களைத் தளரச் செய்வதே நைட்றிக் ஒக்சைட்டின் வேலை.
- PTSD
- Stress
- Poor Vision: பார்வைக் குறைபாடு. விழித் திரவ அதிகரிப்பினால் ஏற்படும் அழுத்தம் இப்பார்வைக் குறைபாட்டுக்குக் காரணமாகிறது. இத்திரவம் ஒழுங்காக வெளியேற்றப்படாவிட்டால் இவ்வழுத்தம் அதிகாரிக்கிறது. இத்திரவ வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவது இந்த நைட்றிக் ஒக்சைட் தான்.
- Fatigue: உடற் சோர்வு. நைட்றிக் ஒக்சைட்உடலில் குறைவடையும்போது இரத்த ஓட்டமும் குறைகிறது. இதனால் உடலின் சக்தி தேவையைப் பூர்த்திசெய்யுமளவுக்கு கலங்களில் உணவு சமிபாடடைவதில்லை. இதனால் கலங்கள், இழையங்கள், தசைகள் ஆகியவற்றின் இயக்கம் போதுமானதாக இருப்பதில்லை.
- Stroke, Heart Attacks: நைட்றிக் ஒக்சைட் குறைபாட்டால் இரத்தக்குழாய்கள் தளர்ச்சியடையாவிட்டால் மூளைக்குச் செல்லும் சிறு குழாய்கள் வெடிப்பதன் மூலம் stroke வரலாம், அல்லது இதயத்திற்கு இரத்தத்தை கொண்டுசெல்லும் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதனால் மாரடைப்பு ஏற்படலாம.
- Memory Loss: ஞாபக மறதி: நரம்புக்கலங்களுக்கு உணவு மற்றும் ஒக்சிசனை எடுத்துச் செல்லும் இரத்தக்குழாய்களில் தடை ஏற்படுவதலோ அல்லது இறுக்கம் ஏற்படுவதனாலோ இரத்தோட்டம் தடைப்படும்போது நரம்புக் கலங்கள் இறக்க நேரிடுகின்றன. அது மட்டுமல்லாது நரம்புக்கலங்களிடையேயான இணைப்புகளுக்கு காரணமான ஹோர்மோன்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் நைட்றிக் ஒக்சைட்டிற்கு முக்கிய பங்குண்டு. ஞாபக மறதியுள்ளவர்களில் இவ்விணைப்புகள் குறைவாகவே ஏற்படுகின்றன.
- Erectile Dysfunction: ஆண்களின் ‘வியாதி’: ஒழுங்காக தேகாப்பியாசம் செய்யாதவர்களின் சிறிய மற்றும் மயித்துளை இரத்தக்குழாய்களுக்கு இரத்தம் செல்வது குறைவு. அதனால் அவை ஏறத்தாழ பயணம் செய்யாத குச்சொழுங்ககள் போல் ஒடுக்கமாக இருக்கும். அப்பியாசங்களின்போது இருதயம் மிகவும் வீச்சோடு செயற்படும்போது இச்சிறு குழாய்களிலும் இரத்தம் பாய முயற்சிக்கும். ஆனால் வெகுநாள் பாவனையில் இல்லாமையால் எதிர்பாராத இரத்தப் பாய்ச்சலை அவற்றால் தாங்க முடியாது போகும். இதுவே மூளையிலுள்ள சிறு குழாய்களில் நடந்தால் ஒன்றில் குழாய்கள் வெடிக்கலாம அல்லது அவற்றினூடு இரத்தக்கசிவு ஏற்படலாம். இதுவே பின்னர் Stroke / பக்கவாதமாக உருவெடுக்கிறது. இது போன்று ஆணுறுப்பிலுள்ள சிறு குழாய்களும் அதிக இரத்தம் பாயும்போது புடைப்பெடுக்க முயற்சிக்கும். நைட்றிக் ஒக்சைட் மூலம் இக்குழாய்கள் தளர்ச்சியடையும்போது அதிக இரத்தம் பாய்வதனால் படுக்கையில் நீண்டநேரம் குளப்படி செய்யக்கூடியதாக இருக்கிறது என்கிறார்கள்.
- Respiratory Problems: சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள்: கோவிட் – 19 பரவலாக இருந்த காலத்தில் சில சீன விஞ்ஞானிகள் நோயாளிகளுக்கு நைட்றிக் ஒக்சைட் வாயுவைச் சுவாசிக்கக் கொடுத்தபோது அதனால் பலருக்கு உபாதைகள் குறைவடைந்ததை அவதானித்துள்ளனர். அது மட்டுமல்லாது சுவாசம் தொடர்பான இதர வியாதிகளால் ஏற்படும் உபாதைகளிலிருந்தும் நைட்றிக் ஒக்சைட் நிவாரணமளிக்கிறது என இதுபற்றி ஆராய்ந்துவரும் டாக்டர் வேர்க்மன் கூறியிருக்கிறார்.
- Type-2 Diabetis: இரண்டாம் ரக நீரிழிவு: நீரிழிவு வியாதியுள்ளவர்களுக்கு இரத்தோட்டம், உடல் பராக்கிரமம் தொடர்பான குறைபாடுகள் இருக்கின்றன. இவர்களின் உடல்களில் நைட்றிக் ஒக்சைட் உற்பத்தி குறைவடைவதே இதற்கான காரணம். உணவு மற்றும் நைட்றிக் ஒக்சைட் குளிசைகள் இவர்களுக்கு ஓரளவு நிவாரணம் தரலாம்.
எனவே வாயைப் பொத்தி மூக்கால் சுவாசிப்பது எல்லோருக்கும் நல்லது.
ஊட்ட மருந்துகள்
சிலர் நைட்றிக் ஒக்சைட் தேவைக்காக ஊட்டச்சத்துகள் / குளிசைகளைப் பாவிக்கின்றனர். நைட்றிக் ஒக்சைட் உருவாக்கத்திற்கு அவசியமான L-arinine மற்றும் L-citruline ஆகிய பதார்த்தங்களை வழங்குவதை மட்டுமே இக்குளிசைகள் செய்கின்றன.
தீங்குகள்
நைட்றிக் ஒக்சைட் அதிகமாக உட்கொள்ளப்படும்போது சிலருக்கு வயிற்றுப்போக்கும் வாந்தியும் ஏற்படலாம் எனவும் சிலருக்கு அதைவிட உடலைப் பாதிக்கும் மோசமான விளைவுகள் எதுவுமில்லை என ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். ஆனாலும் மாரடைப்பு மற்றும் சிறுநீரக வியாதிகளுள்ளவர்களுக்கு நைட்றிக் ஒக்சைட் தீங்குகளை விளைவிக்க காரணமாக இருக்கலாம். அத்தோடு ஈரல் வியாதி (cirrhosis) மற்றும் குறைவான இரத்த அழுத்தம் (low bloodpressure) இருப்பவர்கள் நைட்றிக் ஒக்சைட்டைத் தவிர்ப்பது நல்லது.
[Disclaimer: இக்கட்டுரை அறிவு மற்றும் ஆரோக்கியத்தை பேணும் விதத்தில் ஒரு உதவி வாசிப்பிற்காகவே தரப்படுகிறது. இதை ஒரு முழுமையான ஆலோசனையாக எடுத்துக்கொள்ளாமல் வாசகர் தத்தம் மருத்துவர்களோடு ஆலோசித்து முடிவுகளை எடுக்கும்படி வலியுறுத்துகிறோம் – ஆசிரியர்]
[Photo Credit:Photo by Risto Kokkonen on Unsplash]
