வானத்திலிருந்து குதித்த தேவதை
லிலித்

வானத்திலிருந்து குதித்த தேவதை

Spread the love

சிவதாசன்

பல வேளைகளில் நமது வாழ்வில் யார், எப்போது, ஏன் வருகிறார்கள், போகிறார்கள் என்பதற்கு விஞ்ஞானம் வேண்டுமானால் random / arbitrary / capricious / chance என ஒன்றைக் காரணமாக்கலாம். ஆனால் அதையும் மீறி ஏதோ ஒன்று இருக்கிறதா என்ற ஐயமும் சிலருக்கு எழலாம்.

இந்தக் கதையை வாசியுங்கள். இது ஒரு உண்மைச் சம்பவம்.

கனடாவின் பிறின்ஸ் எட்வேர்ட் ஐலண்ட் மாகாணத்தில் வாழும் மொலி மக்கிராத் என்ற பெண்ணுக்கு பன்றியொன்றைச் செல்லப்பிராணியாக வளர்க்க ஆசை. சமீபத்தில் வானத்திலிருந்து ஒரு பன்றிக்குட்டி அவருக்காக உதிர்ந்தது. அப்படித்தான் அவர் நம்புகிறார்.

மக்கிராத் ஒரு விலங்கு வைத்தியரிடம் பணிபுரிபவர். பிராணிகள் மீது இயல்பாகவே அவருக்குப் பிரியம். ஒருநாள், இரு குடும்பஸ்தர்கள் ஒரு பன்றிக்குட்டியை விலங்கு வைத்தியசாலைக்குக் கொண்டுவந்தார்கள். கிராமத்துத் தெருவொன்றில் கண்டெடுத்ததாகவும் அதை வைத்தியசாலையில் பராமரிப்பிற்காகக் கொடுத்துவிட்டுச் செல்லலாம் எனக் கொண்டுவந்ததாக அவர்கள் தெரிவித்தார்கள்.

மக்கிராத்துடன் லிலித்
மக்கிராத்துடன் லிலித்

பன்றிக்குட்டியின் எடை 400 கிராம்கள். தொப்புள் கொடி இன்னும் உடனிருந்தது. அது உயிர்பிழைக்க வாய்ப்பேயில்லை என வைத்தியர் சொல்லிவிட்டார். தொப்புள் கொடி அறுந்துபோனதால் தாயின் உயிர்ச்சத்துக்கள் குட்டிக்குக் கிடைத்தைதிருக்க வாய்ப்பில்லை அதனால் அது உயிர்வாழ முடியாமல் போகும் என வைத்தியர் கூறிவிட்டார்.

மனம் தளராத மக்கிராத் குட்டியை வீட்டுக்குக் கொண்டுபோனார். அவர் வாசித்துவந்த சிறியதொரு பண்ணையில் 20 ஆடுகளும் இருந்தன. ஆட்டின் பாலைப் புகட்டி ஒருவாறு பிழைக்கச் செய்துவிட்டார். அத்ற்கு லிலித் என்று பெயரும் சூட்டப்பட்டது.



ஒவ்வொரு மணித்தியாலமும் தூக்கமின்றி அவரும் அவரது குடும்பத்தினரும் லிலித்தைப் பராமரித்தார்கள். ஒருவாரத்தில் வைத்தியர் ‘ஓகே’ சொல்லிவிட்டார்.

இப்போது 12 வாரங்கள் ஆகிவிட்டன. லிலித் வீட்டிலுள்ள இதர பிராணிகளுடன் மிகவும் நட்பாக இருக்கிறது.

லிலித்தின் பிறப்பும் வருகையும் பற்றி மக்கிராத் இன்னமும் ஆச்சரியத்துடன் இருக்கிறார். அயலிலுள்ள வீடுகளிலும், பண்ணைகளிலும் விசாரித்துவிட்டார். யார் வீட்டிலும் பன்றிக்குட்டி எதுவும் காணாமற் போகவில்லை.

பறவை ஏதும் தூக்கிக்கொண்டு போகையில் விழுந்திருக்கலாம் என மக்கிராத் சந்தேகிக்கிறார். அல்லது இறைச்சிக்காக வெட்டப்படுவதற்குக் கொண்டுசெல்லப்பட்ட தாய் அவசர பிரசவத்தைச் செய்து வண்டியிலிருந்து தள்ளிவிட்டிருக்கலாம். எதுவாக இருந்தாலும், லிலித்தைக் காப்பாற்றி வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றவர்கள் அங்கே, அத் தருணத்தில் ஆபத்பாண்டவராக ஏன் தோன்றினார்கள் என்பதும் அதிசயம்தான். “லிலித்தைக் கண்டதும் எனது இதய நரம்புகள் சுண்டி இழுக்கப்பட்டன. எல்லாமே காரணத்தோடுதான் சம்பவிக்கிறது” என்கிறார் மக்கிராத்.

மக்கிராத்தைத் தாயாக அடைவதற்கு லிலித் பாக்கியம் செய்திருக்கிறது.

Print Friendly, PDF & Email