Columns

வாண வாடிக்கை: தமிழ் மரபுத் திங்களின் அடுத்த பரிமாணம்

கேள்விப்பட்டிருப்பீர்கள். தமிழ் மரபுத் திங்கள் வாண வாடிக்கையுடன் கோலாகலமாக முடிவுக்கு வந்திருக்கிறது. கனடிய தமிழர் பேரவை அலுவலகம் உடைக்கப்பட்டு எரியூட்டப்பட்டதைச் சொல்கிறேன். 27ம் திகதி சனிக்கிழமை அதிகாலை 3:15 மணிபோல் எனக்கூறப்படுகிறது. சீ.சீ.டி.வி. காமெராக்களின் பதிவுகளைப் பார்த்தேன். இருவர், மூடிக்கட்டியிருந்த நிலையிலும் நடை-உடை-பாவனையில் தமிழ் மரபு தெரிந்தது. மிகுதி காவல்துறையின் வெண்திரையில். நமக்கேன் வம்பு.

‘இமாலயம்’ சக்திவாய்ந்தது என்று தெரியும் ஆனால் இந்தளவுக்கு? ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. பிரகடனப்படுத்தப்பட்ட ‘பிரகடனத்தின்’ விளைவுகளில் இதுவுமொன்று. பின்னால் யார் யார் எல்லாம் இருக்கிறார்கள் என்பது பலருக்கும் வெட்ட வெளிச்சம். கனடிய பல்கலைக்கழகங்களில் படித்துப் பட்டம் வாங்கியவர்களும் இதில் இருக்கிறார்கள் எனும்போது கல்விக்கும் வன்முறைக்கும் சம்பந்தமிருப்பது புரியக்கூடியதாகவுள்ளது. இயங்கியவர்கள் அப்பாவிகள். நியாயம் தெரிந்த நல்ல மனிதர்கள் எமது சமூகத்தில் நிறையப்பேர் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் குரல்களை எழுப்பாதவர்கள். வாக்குகளை மட்டும் அவ்வப்போது அமைதியாகத் திணித்துவிட்டு அப்பால் போபவர்கள். தமிழுக்காகவும், தமிழனுக்காகவுமென அவர்கள் எதையும் செய்பவர்கள். அவர்கள் தாகம் ஒருபோதும் நிறைவேறப்போவதில்லை என்பதற்கு இச்சம்பவமும் ஒரு உதாரணம். துப்பாக்கிச்சூடு, எரிப்பு, திரை கிழிப்பு, வாகனமுடைப்பு, தனிமனித தாக்குதல், கடையுடைப்பு, கூட்டம் குழப்புதல் என அனைத்து வன்முறைகளும் இங்கும் அரங்கேறியவைதான். கடந்த நாற்பது ஆண்டுகளாக நாம் இவற்றைப் பார்த்து வந்தவர்கள். தமிழுக்காகவும், தமிழனுக்காகவும் இவை மன்னிக்கப்பட்டவை. இம்மரபு தொடரும் என்பதற்கு சமூக ஊடகப் பதிவுகள் சாட்சியம் கூறுகின்றன.

கனடிய தமிழர் பேரவையின் ஆரம்ப காலத்திலிருந்து அதன் பணிகளைப் பார்த்து வருபவன். அதன் படிகளில் ஏறி உச்சிக்குச் சென்ற பலர் இப்போது அதன் அத்திவாரத்தை இடித்துத் தகர்ப்பதில் முன்னணியில் நிற்கிறார்கள். அதன் வெற்றி மீதான பொறாமை. பேரவை மீது முன்வைக்கப்படும் விமர்சனங்கள் பலவற்றில் எனக்கும் உடன்பாடுண்டு. அவைபற்றி சில இயக்குனர்களுடனும், நிறைவேற்றுப்பணிப்பாளருடனும் காரசாரமாக விவாதித்தவன். நிறைவேற்றுப் பணிப்பாளர் டான்ரன் துரைராஜா மீது பலகுற்றச்சாட்டுகள் இருக்கலாம். ஆனால் அவரது உழைப்பு, சுயநலமற்ற அர்ப்பணிப்பு போன்றவற்றில் விமர்சனங்கள் இருக்கமுடியாது. குடும்பத்தைவிட அதிக நேரத்தை அவர் தனது பணிக்காகச் செலவிடுபவர். பேரவையின் வெற்றிக்கு மட்டுமல்ல இங்கு மேடைகளில் பிரகாசிக்கும் பல அரசியல் நட்சத்திரங்களின் வெற்றிகளுக்கும் பின்னால் அவரது உழைப்பு இருந்தது என்பதை அவரவர்களின் மனச்சாட்சிகளே உறுத்திச் சொல்லும். இன்று கனடிய பாராளுமன்ற வளாகங்களில் உலவும் பல இளையதலைமுறைனர் இதற்குச் சாட்சி. இந்த நட்சத்திரங்களை மேடையேற்றுவதற்குப் பதிலாக அவர் மேடையேறியிருந்தால் நிலைமையே வேறு.

பேரவை அலுவலகம் மீதான இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்கவேண்டியவர்கள் பலர். சட்டம் இந்த உடுக்கு மாஸ்டர்களை எதுவுமே செய்யப்போவதில்லை. உணர்ச்சிவசப்பட்டு உருவேறி ஆடிய சாமானியர்கள்தான் பாவம். கனடிய தமிழர் பேரவை ஈழத்தமிழருக்கும், கனடியத் தமிழருக்கும் பல சேவைகளைச் செய்து வருகிறது. துரதிர்ஷ்டவசமாக அவற்றைப் பரப்புரை செய்வதில்லை. கனடாவின் ‘தமிழர் தெருவிழா’ உலகம் பூராவும் கனடியத் தமிழருக்கு அடையாளம் தேடித்தந்த ஒன்று. அம்மேடைகளில் ஏறி இறங்காத கனடிய அரசியல்வாதிகளே இல்லை என்றே கூறலாம். அத்தெருவிழாவைக் கையகப்படுத்துவதற்குப் பல தமிழர் அமைப்புகள் முயன்று பார்த்தன. வருடா வருடம் மானியங்களுக்கு விண்ணப்பிக்கும்போது கூடவே பேரவைக்கு எதிரான பெட்டிசன்களும் போவது வழமை. எல்லாம் தமிழின் பேரில். எங்கு போனாலும் தமிழன் தனது கலாச்சாரத்தை விட்டுக்கொடுப்பதில்லை என்பதை ஆணித்தரமாக நம்புபவன் நான். வேண்டுமானால் கலாநிதி இலகுப்பிள்ளையைக் கேட்டுப்பாருங்கள்.

இவ்வருட தமிழ் மரபுத் திங்களின் முடிவு நாள் கோலாகலமான ‘வெடித்திருவிழாவாக’ நிறைவுபெற்றமை ஒரு அபாயச்சங்கின் ஒலியாகவே எனக்குப் படுகிறது. எமது அடுத்த சந்ததியை முற்றாக அந்நியப்படுத்தவே இதுபோன்ற நடவடிக்கைகள் துணைபோகும். ‘தமிழ் மரபைக்’ கொண்டாடக் கூவியழைப்பவர்களே அதை அழிக்க வழிகோலுகிறார்கள் என்பது துர்ப்பாக்கியம். தமிழுக்கும், மரபிற்கும், விடுதலைக்கும் இது எந்தவகையில் உதவிசெய்யும்? ஆற அமர்ந்து யோசித்து முடிவுகளை எடுப்பது வரவேற்கத்தக்கது.

இப்போதைக்கு, ஆழ்ந்த அஞ்சலி!