CinemaEntertainment

வாண்டு – திரை விமர்சனம்


ஈழத் தமிழர் கதாநாயகனாக நடித்த முழு நீளத் திரைப்படம்
-மாயமான்

வீராவுக்கு, தன் தந்தை ராஜாவைப் போலவே தானும் ஒரு தெருச் சண்டியனாக (Kick Boxing) வேண்டுமென்ற ஆசை. ராஜாவோ, குணாவுடனான சண்டையில் காயமடைந்து படுக்கையில் கிடப்பவர். இதனால் வீராவும் தந்தையைப் போல் ஒரு தெருச் சண்டியனாக வருவதை அவனது தாயார் கடுமையாக எதிர்த்தார். அப்படியிருந்தும் வீரா ஒருவாறு சண்டைப் பயிற்சிகளை மேற்கொண்டு தெருச் சண்டியனாகிறார். அதே வேளை குணாவின் மகனான லோகுவும் தெருச் சண்டைகளில் ஈடுபடுபவர். இருவருக்கும் போட்டியும் கசப்பும் துளிர்விடுகிறது. வீராவுக்கும் லோகுவுக்குமிடையிலான பிரச்சினையில் எழுந்ததே ‘வாண்டு’ திரைப்படம்.

தெருக்களிலும், பாடசாலை விளையாட்டுத் திடல்களிலும் தமது வீரத்தைக் காட்டுவது என்பது உலகம் பூராவும் இளைய சமுதாயத்திடம் காணப்படுமொன்று. பல நூறு, ஆயிரம் வருடங்களாக வெவ்வேறு வடிவங்களில் இது வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. புலம் பெயர்ந்த நாடுகளில் இது பல்வேறு குற்றச் செயல்களிலும் முடிந்திருக்கிறது. இளையவர்கள் தமது வீராப்பைக் காட்டுவது கவர்ச்சியான (cool) செயலாக நினைப்பதனால் ஏற்படும் விபரீதங்களை முன்னிலைப்படுத்தி ‘சண்டை பிடிப்பது அழகல்ல, சண்டைப் பயிற்சியைத் தற்பாதுகாப்புக்காக மட்டுமே பாவிக்க வேண்டும்’ என்ற நற்போதனையைச் சமூகத்திற்கு வழங்கும் நோக்கத்தோடு ‘வாண்டு‘ தயாரிக்கப்பட்டிருக்கலாம்.

இந்த பிரதான கதையோட்டத்தை விடவும் மேலும் பல உப கதைகள் / சம்பவங்கள் / பாத்திரங்கள் சமூக விழிப்புணர்வுக்காகச் சொருகப்பட்டுள்ளன.

வாஷன் ஷாஜி இயக்கிய இப் படத்தில் ஈழத் தமிழரான எஸ் ஆர். குணா கதாநாயகனாகவும் இதர முக்கிய பாத்திரங்களில் சாய் டீனா, சினு, ஷிகா, ஆல்வின் ஆகியோர் நடிக்கிறார்கள்.

கதை: ஆதித்யா(எஸ்.ஆர்.குணா) , ஒரு சண்டைப் பயிற்சி ஆசிரியர், லோகுவுக்கும் வீராவுக்கும் சண்டை கற்பிக்கிறார் (ஒரு வகையான உதை / குத்து). அபர்ணாவை (சிகா) ஆதித்யா காதலிக்கிறார். முதலாவது காட்சியில் அபர்ணா தனது தோழிகளிடம் மன்னிப்புக் கேட்கிறார் ஆனாலும் அவர்கள் அபர்ணாவை உதாசீனம் செய்துவிடுகின்றனர். ஏன் என்பதற்கான விடை தெரிய வேண்டுமானால் படம் முழுவதும் பார்த்தேயாக வேண்டும்.

வீராவுக்கு குமார் ஒரு சகோதரர். ஆணா அல்லது பெண்ணா என்பதற்குள் திண்டாடும் ஒரு பிறவி. கிடைக்கும் சந்தர்ப்பங்களில் தன்னைப் பெண்ணாக அலங்கரித்துக் கொண்டு ‘குமாரி’ என்ற பெயருடன் வலம் வருவதில் திருப்தியடைபவர். அவருடைய ‘போராட்டம்’ பிரதான கதையில் முக்கியத்துவம் பெறவில்லையாயினும் ஒரு வகையில் தொடுக்கப்பட்டிருக்கிறது.

ஆதித்யாவின் சித்தி என்றொரு பாத்திரம் போதை வஸ்து விற்பவராகவும், சில வேளைகளில் பாவிப்பவராகவும் வருகிறது. ஒரு சமூக சீர்திருத்தத்தை மனதில் வைத்து இக் காட்சி புகுத்தப்பட்டிருந்தாலும் பிரதான கதையோடு இணைய மறுக்கும் சம்பவமாகவே இதைப் பார்க்க முடிகிறது.

கதை, வசனம், இயக்கம், நடிப்பு எல்லாவற்றிலும் எழக்கூடிய சந்தேகங்களை நீங்கள் திரையில் பார்த்தபின்னர் பேசிக்கொள்ளலாம்.

மோஹன் ராஜா பாட்டெழுத ஏ.ஆர். நேசன் இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவை ரமேஷும் வி.மஹேந்திரனும் கையாண்டிருக்கிறார்கள்.

போதாதா? வேண்டுமானால், இதை ‘அரை’ விமர்சனமாக எடுத்துக்கொள்ளுங்கள்!

கனடாவில், ரொறோண்டோவில் (1530 Albion Rd. Etobicoke, ON M9V 1B4) அல்பியன் சினிமாவில் நவம்பர் 9ம் திகதி பி.ப. 12:30 க்கு ‘வாண்டு’ திரையேறுகிறது. பார்த்துவிட்டுக் கருத்துக்களைப் பதியுங்கள்.