வாகனங்களைக் கடலில் அமிழ்த்துவதற்கு தமிழ்நாடு மீனவர்கள் எதிர்ப்பு

பவளப் பறை உருவாக்கத்திற்கென இலங்கை அரசினால் கடலில் அமிழ்த்தப்படும் பாவனையிலில்லாத வாகனங்களால் தமது தொழில் பாதிக்கப்படுமெனக் கூறி, தமிழ்நாடு மீனவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

கடல் வாழ் உயிரினங்களின் வாழ்சூழலை மேம்படுத்தவென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பாவனையற்றுக் கிடக்கும் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான வாகனங்களை, கடற்படையின் உதவியுடன் கடலின் அடியில் அமிழ்த்தும் பணிகளை ஆரம்பித்திருந்தார். இதன் முதற் கட்டமாக இலங்கையின் எல்லைக்குள் வரும் நெடுந்தீவுக் கடலில் ஜூன் 11ம் திகதி 30 பஸ்கள் அமிழ்க்கப்பட்டிருந்தன.

தற்போது, இந் நடவடிக்கைக்கு தமிழ்நாட்டு மீனவரிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வாகனங்களைக் கடலில் அமிழ்த்துவது, இலங்கைக்கு இதுவே முதல் தடவையல்லவெனவும், இது நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது எனவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். இந் நடவடிக்கை இலங்கையின் கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்டாலும், கடலடி நீரோட்டத்தினால் இவ் வாகனங்கள் இந்திய எல்லைக்குள் நகர்த்தப்படும் சாத்தியங்கள் உண்டு எனவும், ஆழிப் பேரலையின்போது பல பொருட்கள் இவ்வாறு இந்தியக் கரையை வந்தடைந்திருந்தன எனவும் அவர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

கடலில் வாகனங்களை அமிழ்த்தும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தும்படி நாகபடினத்தைச் சேர்ந்த மீனவர் பிரதிநிதியான ராஜேந்திர நட்டர் தமிழ்நாடு அரசுக்கு விண்ணப்பித்துள்ளார்.

இழுவைப் படகுகளைப் பாவித்து மீன்பிடிப்பது தமிழ்நாடு மீனவர்களின் பிரதான முறையாக இருக்கிறது எனினும் இலங்கையில் இம் முறை தடை செய்யப்பட்டுள்ளது. பல தடவைகள் தமிழ்நாட்டு மீனவர்கள் நெடுந்தீவைச் சுற்றியுள்ள இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறிச் சென்று தமது இழுவைப்படகுகளின்மூலம் கடலடி உயிரினங்களை வாரியிழுத்துச் செல்வதும், இலங்கை கடற்படையினால் கைதுசெய்யப்படுவதும் வழக்கம்.

கடலில் அமிழ்த்தப்படும் வாகனங்களில் மீனவர்களின் வலைகள் சிக்கிப் பழுதடைந்து போகலாமென அவர்கள் அஞ்சுகிறார்கள். 1974-1976 ஆண்டுகளில் செய்யப்பட்ட கடலெல்லை ஒப்பந்தத்துக்கு இது விரோதமானது எனவும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். அதே வேளை, “கடலினடியில் நிலை நிறுத்தப்படாத எந்தப் பொருளும் நீரோட்டத்தினால் நகர்த்தப்படுவது வழக்கம்” என, சென்னை ஐ.ஐ.டி. சமுத்திரப் பொறியியல்துறையின் தலைவர் கலாநிதி கே.முரளி தெரிவித்துள்ளார்.

இதே வேளை, இந்தியாவின் மத்திய மீன்வள ஆராய்ச்சி நிறுவனமும், பவளப்பாறை அபிவிருத்திக்கென சீமந்தினால் செய்யப்பட்ட 200 கற் பாறைகளைக் கடலில் அமிழ்த்தி ஆராய்ச்சி செய்து வருகிறது. அவை நீரோட்டத்தினால் இழுத்துச் செல்லப்படாத வகையில் நிலையாக வைக்கப்பட்டுள்ளன எனவும், பஸ் வண்டிகளின் துருப்பிடிக்கும் உலோகங்களைப்போல் இவற்றினால் சூழலுக்குப் பாதகமில்லை எனவும் இந் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி எஸ்.வேல்விழி தெரிவித்துள்ளார். அத்தோடு வாகனங்களினால் உருவாக்கப்படும் பவளப்பாறைகளில் வளரும் மீன்கள் நச்சுத்தன்மை கொண்டவையாக இருக்குமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென மத்திய அரசைக் கேட்டுக்கொள்ளும்படி தமிழ்நாடு, புதுச்சேரி அரசுகளை மீனவர்கள் கேட்டு வருகிறார்கள்.