Sri LankaWorld

வழமைபோல் மனநிறைவு அடைந்துவிடாமல், மிகவும் கடுமையான நடவடிக்கைகளை ஐ.நா. எடுக்கவேண்டும் – நவி பிள்ளை


“இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான செயற்பாடின்மை விடயங்களில் ஐ.நா.மனித உரிமைகள் சபை வழமைபோல் மனநிறைவு கொள்ளாமல் கடந்த காலக் குற்றங்களுக்கு அதைப் பொறுப்பேற்கச் செய்யும் வகையில் மிகவும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என முன்னாள் ஐ.நா. மனித உரிமைகள் சபை ஆணையாளர் நவி பிள்ளை அவர்கள் கூறியுள்ளார்.

“2009 இல் முடிவுற்ற போரின்போது இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதத்துக்கெதிரான குற்றங்கள் தொடர்பாக எவ்வித பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளையும் எடுக்கப் போவதில்லை என இலங்கை அரசு அறிவித்துவிட்ட படியால் ஐ.நா. மனித உரிமைகள் சபை சுயமாகத் தனக்குரிய முறையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சர்வதேச குற்றங்கள் இழைக்கப்பட்டமைக்கான ஆதாரங்கள் இருப்பதால், பொறுப்புக்கூறல் விடயங்களில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கும்படி பல ஆணையாளர்கள் இலங்கையைத் தொடர்ச்சியாகவும் காத்திரமான வகையிலும் கேட்டுவந்துள்ளார்கள்” என Just Security எனும் இணையத்தளமொன்றுக்கு அளித்த பேட்டியில் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் நவி பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.

2008 முதல் 2014 வரை மனித உரிமைகள் ஆணையாளராகப் பணியாற்றிய அவர், நடக்கவிருக்கும் சபையின் 46 வது அமர்வு தொடர்பாகத் தனது கருத்துக்களைக் கூறியுள்ளார்.நவி பிள்ளையிடம் முன்வைக்கப்பட்ட சில கேள்விகளும் அவற்றுக்கு அவர் அளித்த பதிலும் கீழே தரப்படுகின்றன:

போரின் கடைசி ஆறு மாதங்களில் பெருந்தொகையான பொதுமக்கள் கொல்லப்பட்டும், அது தொடர்பாக சர்வதேசங்கள் சீற்றம் கொண்டுமிருந்தன. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளாராக இப் பிரச்சினையை எப்படிக் கையாண்டீர்கள்?

2009 இல் போரின் இறுதி ஆறு மாதங்களில் நடைபெற்ற சம்பவங்கள் தொலைக்காட்சிகளில் ஓடிக்கொண்டிருந்தன. சரணடைவதற்காக வெள்ளைக்கொடிகளை உயர்த்திக்கொண்டு சென்ற விடுதலைப் புலிகளின் தலைவர்கள் எனக் கூறப்படுபவர்களை இலங்கை இராணுவம் சுட்டுக்கொன்றதை நாம் பார்த்தோம். மக்கள் வீடுகள், புகலிடங்கள், மருத்துவமனைகள் மீது விமானங்கள் குண்டுகளைப் பொழிந்து நிர்மூலமாக்கியதை நாம் பார்த்தோம். பயங்கரவாதிகள் எனக் கூறப்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டதற்குப் பின்னரும் இத் தாக்குதல்கள் தொடர்ந்தன. காயமடைந்தவர்களுக்குச் சிகிச்சையளித்துக்கொண்டிருந்த மருத்துவமனைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களை நிறுத்தும்படி மருத்துவர்கள் எழுப்பிய கூக்குரல்களையும் நாம் கேட்டோம்.

போர் நடைபெறுமிடங்களில் சிக்குண்ட மக்களின் உயிர்களைச் சர்வதேச மனிதத்துக்கான சட்டம் பாதுகாக்கின்றது. ஜெனிவா மரபுகளும் கூடுதல் நெறிமுறைகளும் என்ற வரைமுறைகளின் கீழுள்ள “தனித்துவம்“, “விகிதாசாரம்” ஆகிய தத்துவங்கள் போரிலீடுபடும் அரசாங்கங்கள் மீதும், அமைப்புகள் (non state actors) மீதும் பிரயோகப்படுத்தக்கூடியன.

நேரடியானதும், கண்மூடித்தனமானதும், விகிதாசாரமற்றதுமான இராணுவத் தாக்குதல்கள் மூலம் போரில் மேலாண்மையைப் பெறுவது, ‘விகிதாசாரத் தத்துவத்தை’ மீறும் செயலாகும். மக்களுக்கும் போராளிகளுக்குமிடையில் இருக்கக்கூடிய வேறுபாட்டைத் தெளிவுபடுத்திக்கொள்ளவேண்டுமென ‘தனித்துவ’ தத்துவம் நிர்ப்பந்திக்கிறது.தனது இறைமைக்கான உரிமையைப் பாவிப்பதாகவும், இந் நடவடிக்கை தனது நாட்டின் எல்லைகளுக்குள் நடைபெறும் ஒன்றெனவும் இலங்கை சர்வதேச சமூகத்திற்கு அறிவித்திருந்தது. இக் காரணத்துக்காக, ஐ.நா. பாதுகாப்புச் சபை, ஐ,நா, பொதுச் சபை, மனித உரிமைகள் சபை ஆகிய எதுவுமே இவ் விடயத்தில் அக்கறை கொள்ளவில்லை. ஜூன் 2, 2009 இல் நான், எனது மனித உரிமைகள் ஆணையாளர் என்ற பதவியைக் கொண்டு, இவ் விடயத்தை மனித உரிமைகள் சபையின் நிகழ்ச்சி நிரலில் சேர்த்தேன். நடைபெற்ற பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகள், வன்புணர்வு, பெண்கள் சிறுமிகளுக்கெதிரான மோசமான காம நடவடிக்கைகள், தமிழ் மக்கள் மீது நிர்ப்பந்திக்கப்பட்ட இடப் பெயர்வு உட்பட்ட பாரிய மனித உரிமை மீறல்களை நான் மனித உரிமை ஆணையத்திற்குத் தெரியப்படுத்தினேன். இப்படியான இடர்காலத்தில் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் பொறுப்பு மனித உரிமைகள் சபைக்கும், ஐ.நா. அமைப்புக்களுக்குமுண்டு. சர்வதேச மனித உரிமைகள் சட்டம், சர்வதேச மனிதாபிமானச் சட்டம் (International Human Rights Law (IHRL)), (International Humanitarian Law (IHL)) ஆகியன இங்கு மிக மோசமாக மீறப்பட்டுள்ளன எனவும் அவற்றின் மீதான ஒரு சர்வதேச சுயாதீன விசாரணை ஆரம்பிக்கப்படவேண்டுமெனவும் நான் கேட்டிருந்தேன்.

நாட்டில் உள்ளக விசாரணைகள் எதுவும் நடைபெறாமையால், சர்வதேச விசாரணைகள் மூலம் அங்கு குற்றங்கள் இழைக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளதா எனத் தீர்மானிக்கமுடியும். உள்ளக, சர்வதேச விசாரணைகள் அங்கு மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுள்ளனவா என்பதைத் தீர்மானிக்க உதவுவதோடு, அடுத்து சர்வதேசங்கள் என்ன நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென்பதற்கும் உதவியாக இருக்கும். அங்கு மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுள்ளனவெனச் சர்வதேச நிபுணர்கள் தீர்மானிக்கும் பட்சத்தில் அக் குற்றங்களை விசாரித்து குற்றமிழைத்தவர்களுக்குத் தண்டனை வழங்குவது அந்தந்த நாடுகளின் கடமை. உள்ளக பொறிமுறைகளால் இவ் விசாரணைகளை மேற்கொள்வதற்கு விருப்பமில்லாவிட்டாலோ, அல்லது முடியாதுபோனாலோ மட்டுமே சர்வதேச பொறிமுறைகள் பிரயோகிக்கப்படுகின்றன.

இலங்கையில், போரின் இறுதி நாட்களில் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதத்துக்கெதிரான குற்றங்கள் நிகழ்த்தப்பட்டன என்பதை உறுதிசெய்யும் தெளிவானதும், கணிசமானதுமான சான்றுகளை நாம் உதாசீனம் செய்துவிட முடியாது

ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கான முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ஐலீன் சேம்பலின் டொனஹூ

யூகோஸ்லாவியா, ருவாண்டா போன்ற நாடுகளில் சர்வதேச தீர்ப்பாயங்களை உருவாக்குவதற்கு முன்னர் ஐ.நா. பாதுகாப்புச் சபை அங்கு விசாரணை ஆணையங்களை உருவாக்கியிருந்தது. அதே போல, மத்திய ஆபிரிக்க குடியரசு நாட்டில் விசாரணை மேற்கொள்ளப்படவேண்டுமென ஐ.நா. கட்டாயப்படுத்தியது. சிரியாவில், ஐ.நா. பொதுச்சபை சர்வதேச, பாரபட்சமற்ற, சுயாதீன பொறிமுறையொன்றையும் (International, Impartial and Independent Mechanism (IIIM)) ஈராக்கில், டேஷ் / ஐசில் இனால் இனால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்காக ஒரு விசாரணைக் குழுவொன்றையும் ஸ்தாபித்துள்ளது. இதை விடவும், காசா, சிரியா, டிபிஆர்கே, எரித்திரியா, லிபியா ஆகிய நாடுகளில் மனித உரிமைகள் ஆணையம் விசாரணைக் கமிஷன்களை உருவாக்கியிருக்கிறது; இலங்கை மீதும், யூக்கிரெயின் மீதும் விசாரணை அறிக்கைகளைச் சமர்ப்பிக்கும்படி உத்தரவிட்டிருந்தது.போர்க்காலத்தில் நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்களைப் பற்றி ஏராளமான ஐ.நா. அறிக்கைகள் வெளிவந்துள்ளன. இலங்கையின் பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்தள்ள இவை எவ்வளவுதூரம் பயன்படுத்தப்பட்டன என நீங்கள் நினைக்கிறீர்கள்?

இலங்கைப் போரின்போது புரியப்பட்ட அட்டூழியங்கள் பற்றிய நம்பகமான ஏராளமான தகவகள் ஐ. நா., உள்ளக, சர்வதேச தொண்டு நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரிடம் உண்டு. ஐ.நா.வின் இத் தகவல்கள் மனித உரிமைகள் சபையில் இவ்விடயத்தை ஒரு நிகழ்ச்சிநிரலாக வைத்திருப்பதற்கு உதவுகின்றன. அத்தோடு அக்கறையுள்ள நாடுகள் இத் தகவல்களைக் கொண்டு இலங்கைமீது அழுத்தங்களைக் கொடுத்து பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுக்க உதவலாம்.

“ஐ.நா. நிபுணர்கள் குழுவின் அறிக்கையில் வெளிவந்த உண்மைகளை வைத்துப் பார்த்தபோது, இலங்கையில் ஒரு இடைநிலை நீதியொன்றைக் (transitional justice) கட்டாயப்படுத்தி நடைமுறைப்படுத்தவேண்டுமென்ற எண்ணத்தை அமெரிக்க தூதுக்குழுவின் மனதில் ஏற்படுத்தியது” என ஐ.நா. மனித உரிமைகள் சபைக்கான அப்போதைய அமெரிக்கத் தூதுவர் ஐலீன் சேம்பலின் டொனஹூ கூறியிருந்தார். “இலங்கையில், போரின் இறுதி நாட்களில் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதத்துக்கெதிரான குற்றங்கள் நிகழ்த்தப்பட்டன என்பதை உறுதிசெய்யும் தெளிவானதும், கணிசமானதுமான சான்றுகளை நாம் உதாசீனம் செய்துவிட முடியாது” என அவர் தெரிவித்திருந்தார். இலங்கை மீதான ஆரம்ப தீர்மானத்தை நிறைவேற்றுவதில் தூதுவர் டொனஹூ பெரும்பங்காற்றியிருந்தார்.

2015 இல், ஐ.நா. மனித உரிமைகள் சபையுடன் இலங்கை இணை முன்மொழிவு செய்து நிறைவேற்றிய தீர்மானம், வரையறுக்கப்பட்ட சர்வதேசத் தலையீட்டுடன் கூடிய விரிவான இடைநிலை நீதிக் கட்டமைப்பொன்றை (transitional justice) முன்வைத்திருந்தது. அரசாங்கம் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுமென்பதை உறுதிப்படுத்த ஐ.நா. மனித உரிமைகள் சபையோ அல்லது ஆணையாளரின் அலுவலகமோ (Office of the High Commissioner for Human Rights (OHCHR)) எப்படியான கண்காணிப்பை மேற்கொண்டிருந்தன?

எனக்குப் பின் வந்த ஆணையாளர், சாயிட் ராட் அல் ஹுசேன் மற்றும் தற்போதைய ஆணையாளர் மிஷெல் பக்கெலெ ஆகியோர், ஐ.நா. நிபுணர்களுடன் இணைந்து, பொறுப்புக்கூறல் விடயங்களில் – நான் 2009 இல் செய்ததைவிட – விரிவான நடைமுறைகளைப் பிரயோகிக்க வற்புறுத்தியிருந்தனர். இலங்கை மீதான மூன்று ஐ.நா. அறிக்கைகளும் (ஐ.நா. செயலாளர் நாயக நிபுணர் குழு அறிக்கை, உள்ளக மீளாய்வு அறிக்கை, ஆணையாளர் அலுவலக அறிக்கை) இலங்கை சர்வதேச குற்றங்களைப் புரிந்ததற்கான நம்பத்தகுந்த ஆதாரங்களைக் கொண்டிருக்கின்றன.

சர்வதேச குற்றங்களுக்கான வழக்குப் பதிவுகளை மேற்கொள்ளும் பொறிமுறையையோ, ஆகக் குறைந்தது ஒரு உள்ளகப் பொறிமுறையையோ உருவாக்குவதன் மூலம் இலங்கை அரசு தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை நாங்கள் அனைவரும் கவனத்திற்குக் கொண்டுவந்தோம். சர்வாதிகாரவாதம், பொதுமக்கள் விவகாரங்களில் இராணுவத்தின் தலையீடு, தமிழர்களின் உரிமைகள் அடிக்கடி மீறப்படுவது போன்ற விடயங்கள் மீது நாம் கவனத்தை ஈர்த்திருந்தோம். இச் செயற்பாடுகள் மீளவும் நடைமுறைப்படுத்தப்படுகின்றன எனக்கூறி மனித உரிமைகள் சபை உடனடியான நடவடிக்கையை எடுக்கவேண்டுமென நாம் எச்சரித்திருந்தோம்.உள்ளக / சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைகளுக்கிடையேயான விட்டுக்கொடுப்புகள் என்ன? இலங்கை விடயத்தில் அவை எப்படியாக செயலாக்கம் பெற்றிருந்தன?

உள்ளக விசாரணைகளையும், புனர்வாழ்வு முயற்சிகளையும் முன்னெடுக்க இலங்கையை ஊக்குவிக்கும் முறையையே மனித உரிமைகள் சபை மேற்கொண்டது. நீதியையும் பொறுப்புக்கூறலையும் முன்னெடுப்பது சம்பந்தப்பட்ட அரசுகளின் முதன்மையான பொறுப்பு என்ற சர்வதேச சட்டங்களுக்கேற்பவே இது மேற்கொள்ளப்பட்டது. சம்பந்தப்பட்ட நாடு இந்நடவடிக்கைகளை மேற்கொள்ள மறுத்தாலோ அல்லது அதனால் முடியாமல் போகும்போதோ மட்டுமே சர்வதேசத்தினால் தலையிட முடியும்.

2015 மனித உரிமைகள் சபையின் தீர்மானம், ஐ.நா. வின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும், விரிவான, உள்ளக இடைநிலை நீதிக்கான ஒரு உதாரணம் என அப்போது அது வரவேற்கப்பட்டது. இத் தீர்மானத்தில் கூறப்பட்ட விடயங்களை முற்றுமுழுதாக நிறைவேற்றுவோம் என இலங்கை அரசு மீண்டும் மீண்டும் வலியுறுத்தி தனது முழு ஆதரவையும் தந்திருந்தது.

போர் முடிவுற்று 12 வருடங்கள் ஆகியும், இழைக்கப்பட்ட சர்வதேச குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல்களிலோ, பாதிக்கப்பட்டவர்களுக்கான நட்டஈடுகளை வழங்குவதிலோ, காணாமற்போனவர்கள் பற்றிய விபரங்களை வெளியிடுவதிலோ, நிலங்களை விடுவிப்பதிலோ அரசு காத்திரமான முன்னேற்றங்கள் எதையும் மேற்கொள்ளவில்லை. 2015 இல் ஒரேயொரு குற்றவாளி, இராணுவ சேர்ஜெண்ட் சுனில் ரத்நாயக்கா, 2000 ஆம் ஆண்டு, 5 வயதுக் குழந்தை உட்பட 8 பொதுமக்களைக் கொலைசெய்தமைக்காக, மே 2019 இல் இலங்கை உச்சநீதிமன்றத்தினால் தண்டனை வழங்கப்பட்டிருந்தார். அப்படியிருந்தும் சர்வதேச சட்டம், தண்டனை என்பவற்றை உதாசீனம் செய்து ஜனாதிபதி, ரத்நாயக்காவை அவரை விடுதலை செய்துள்ளார்.சர்வதேச அல்லது வெளிநாட்டு விசாரணைப் பொறிமுறை ஒன்றை உருவாக்கும் பொருட்டு, சர்வதேச சட்டவரம்புத் தத்துவத்தின் கீழ் (principles of universal jurisdiction) ஆதாரங்களைத் திரட்டுவதற்கான மனித உரிமை ஆணையாளரின் சமீபத்திய அறிக்கை முன்வைக்கும் பரிந்துரை பற்றிய உங்கள் கருத்து என்ன?

சமீபத்திய அறிக்கையில், மனித உரிமை ஆணையாளர், கூட்டான சர்வதேச நடவடிக்கை ஒன்றை எடுக்கும்படிகூறி அங்கத்தவ நாடுகளுக்குப் பல பரிந்துரைகளைச் செய்துள்ளார். பொதுச்சபையின் உப உறுப்பாகையால், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லும்படி மனித உரிமைகள் சபை நேரடியாக பாதுகாப்புச் சபையைக் கேட்க முடியாது. அதனால் இவ் விடயத்தில் ஒத்துழைப்பு வழங்கும்படி அவ்வறிக்கைமூலம் அங்கத்துவ நாடுகளுக்கு அழைப்பு விடப்பட்டுள்ளது.

ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் சிரியாவிலும், ஈராக்கிலும் உருவாக்கப்பட்ட சர்வதேச, பாரபட்சமற்ற, சுயாதீன பொறிமுறை (the International, Impartial and Independent Mechanism (IIIM)) மற்றும் பொறுப்புக்கூறலுக்கான ஐ.நா. விசாரணைக் குழு (the U.N. Investigative Team for Accountability (UNITAD)) போன்ற சர்வதேச விசாரணைப் பொறிமுறைகளை உருவாக்குவதற்கு சர்வதேச சட்டவரம்புத் தத்துவத்தைப் பிரயோக்கிக்குமாறு ஆணையாளரின் அலுவலக அறிக்கை பரிந்துரைக்கின்றது. இப்படியான ஒரு அமைப்பினால் சேகரிக்கப்படும் ஆதாரங்கள் சர்வதேச சட்டவரம்புத் தத்துவத்தின்கீழ் எதிர்காலத்தில் அங்கத்துவ நாடுகளால் எடுக்கப்படும் வழக்குகளுக்கு உதவியாகவிருக்கும். ஐ.நா. பாதுகாப்புச் சபை இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்தும் பட்சத்திலோ, அல்லது சர்வதேச தீர்ப்பாயம் (International Criminal Tribunal) ஒன்று நிறுவப்படும்போதோ அல்லது உள்ளக வழக்குப்பதிவுகளிலோ, மேற்கூறிய சேமிக்கப்பட்ட ஆதாரங்கள் துணைபுரியும். சர்வதேச சட்டவரம்புத் தத்துவத்தைக் காட்டி, சில பிரச்சினையான குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவுகளை மேற்கொள்வதற்கு, இலங்கையை அச்சுறுத்தமுடியுமென நான் நம்புகிறேன்.கடந்தகாலக் குற்றங்களுக்கான தண்டனையை நிறவேற்றாமை (impunity) முடிவுக்குக் கொண்டுவரப்படுவதன் மூலம் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுக்கொடுப்பது மட்டுமல்ல, நிகழ்காலத்து மனித உரிமை நிலைமைகளையும் முன்னேற்ற முடியுமெனெ நாம் பேசி வருகிறோம். இது தான் இலங்கையில் நடைபெறுகிறது என்பதை எவ்வளவு தூரத்துக்கு உங்களால் பார்க்க முடிகிறது?

இலங்கையில் மனித உரிமைகள் நிலைமைகள் படு வேகமாகச் சீரழிந்து வருகின்றது என்பதை ஆணையாளரின் அறிக்கை மிகத் தெளிவாக முன்வைக்கிறது. அதே வேளை ஆணையாளர்களின் முந்தைய அறிக்கைகள், ஏற்கெனவே எடுக்கப்பட்ட தீர்மானங்களை இலங்கை அரசு நிறைவேற்றாமல் விட்டமை பற்றிய தகவல்களைக் கொண்டிருந்தன. தற்போதைய அறிக்கை அதற்கு மேலாகவும் சென்று, அரசாங்கத்தின் வாக்குறுதி மீறல்களை மட்டுமல்லாது நீதியையும், பொறுப்புக்கூறலையும் நிலைநாட்டுவதற்கு அது தற்போது இட்டுவரும் தடங்கல்களைப் பற்றியும் குறிப்பிடுகிறது. பெரும்பான்மையினரின், சிறுபான்மைத் தவிர்ப்பு நடைமுறைகளை அரசு முன்தள்ளும் ஆபத்தான போக்கு பற்றி எச்சரிக்கும் ஆணையாளரின் அறிக்கை, முந்தைய மீறல்களை அரசு மீண்டும் அரங்கேற்றுவதற்கான முயற்சிகளை நிறுத்தியாகவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

இழைக்கப்பட்ட குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலில் மீறல்களைச் செய்துவரும் இலங்கை அரசு தொடர்ந்தும் தவறுகளை இழைக்குமென நானும் ஆணையாளர் சாயிட் அவர்களும் எதிர்வு கூறியிருந்தோம். இலங்கையின் இந்த நிலைப்பாடு குறித்து வழமைபோல் மனநிறைவு கொள்ளாமல், ஆணையம் தன் போக்கிலிருந்து விலகி, ஆணையத்தின் தீர்மானங்கள் மீதான வாக்குறுதிகளை மீறியமைக்காக இலங்கை மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு உள்ளக நீதிமன்றங்கள் மூலம் நீதியைப் பெற்றுக்கொடுப்போமென கொடுத்த வாக்குறுதி மீதான நம்பகத்தன்மை எப்போதுமே கேள்விக்குறியாக இருந்துவந்திருப்பினும் கோதாபய ராஜபக்ச ஆட்சிக்கு வந்தபின்னர் அது இன்னும் உறுதியாகிவிட்டது. போரின்போது பாதுகாப்பு அமைச்சராகவும், முப்படைகளின் தளபதியாகவும் இருந்த அவரே, இறுதிப் போரின்போது நடைபெற்ற மிக மோசமான பல மனித உரிமை மீறல்களுக்குக் காரணமென பல அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2013 ம் ஆண்டு நான் அவரைச் சந்தித்தபோது, இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழித்துவிட்டதாக அவர் பெருமையோடு உரிமை கொண்டாடியிருந்தார். அவரைப் புகழ்ந்து எழுதப்பட்டிருக்கும் “கோதாவின் போர் – இலங்கையில் தமிழ்ப் புலிகள் பயங்கரவாதத்தின் முறியடிப்பு” என்ற நூலில் அவருடைய போர்க்கால நடவடிக்கைகளைப் பற்றி விரிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் மோசமாக இருந்திருப்பினும், அது தற்போது ஒழிக்கப்பட்டுவிட்ட நிலையில் ஏன் மனித உரிமைப் பாதுகாவலர்கள் மீதும், ஜனநாயக அமைப்புகள் மீதும் ‘கோதாவின் போர்” தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது? (கோதாபய ரஜபக்சவினால் தென்னாபிரிக்க வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி ஒருவருக்குக் கொடுக்கப்பட்ட மேற்கண்ட நூலின் பிரதியொன்று எனக்குக் கொடுக்கப்பட்டிருந்தது).இனி வரவிருக்கும் கூட்டத்தில் மனித உரிமைகள் சபை இலங்கை விவகாரத்தை எப்படிக் கையாளவேண்டும்?

அமெரிக்காவில், ஆட்சியிலிருந்து விலகிப் போகும் பலம்வாய்ந்த மனிதர் ஜனநாயக ஸ்தாபனங்கள் மீது தொடுத்த ஊடுருவல், தாக்குதல்களுக்காக அவர்மீது துரிதமாகக் காங்கிரஸ் எடுத்துவரும் நடவடிக்கைகளிலிருந்து பாடங்களை மனித உரிமைகள் ஆணையம் கற்றுக்கொள்ளவேண்டும். ஆணையாளரின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டபடி, தமிழர்கள் மீது இழைக்கப்பட்ட பாரதூரமான மனித உரிமை மீறல்களை நிகழ்த்தியவர்கள் மீது துரிதமாகவும், காத்திரமாகவும் நடவடிக்கை எடுக்கவேண்டும். பயங்கரவாதத்துக்கு எதிரான “கோதாவின் போர்” சட்டத்துக்கு எதிரானதும், தோற்கடிக்கப்பட்ட மக்களை நடாத்தும் சர்வதேச நியமங்களுக்கு எதிரானதுமான போராக மாறுவதை அனுமதிக்கக் கூடாது.

மனித உரிமைகள் சபையில் அங்கத்துவமில்லாதபோது, வருகின்ற கூட்டத்தில், அமெரிக்க என்ன செய்ய மூடியும்; என்ன செய்ய வேண்டுமென நீங்கள் நினைக்கிறீர்கள்?

இலங்கைக்கு எதிராக மனித உரிமைகள் சபையில் எடுக்கப்பட்ட முதலாவது தீர்மானத்தில் அமெரிக்காவின் முதன்மையான பங்கு பற்றி நான் மேலே குறிப்பிட்டுள்ளேன். அமெரிக்கா மனித உரிமைகள சபையில் அங்கத்துவ நாடாக இல்லாத போதும்; அதனால் வாக்களிக்க முடியாத போதும், ஒரு அவதானி நாடாக அது சபையில் தனது கருத்துக்களை முன்வைக்க அதிகாரமுண்டு. ஜனாதிபதி ட்றம்ப் அதன் அங்கத்துவத்தை மீளப்பெற்றிருந்தாலும், நீதிக்காகவும், பொறுப்புக்கூறலுக்காகவும் தொடர்ந்தும் அழுத்தங்களைக் கொடுக்கும் கடமை அதற்குண்டு. பைடன் – ஹரிஸ் நிர்வாகம் இச் சந்தர்ப்பத்தைக் கையகப்படுத்தி, நீதியையும் பொறுப்புக்கூறலையும் நிலைநிறுத்தி, விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட தலைமைத்துவத்தை நோக்கி உலகு நகர்ந்துள்ளது என்பதைத் தெரிவிக்க வேண்டும்.