Spread the love

சர்வதேச மனித உரிமைகள் கடப்பாடுகளுக்கிணங்க சட்ட நியமங்களைப் பேணும்படி வலியுறுத்துகிறது

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ், சட்டத்தரணி ஹீஜாஸ் ஹிஸ்புல்லாவைத் தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைத்திருப்பது பற்றி ஐரோப்பிய ஒன்றியம் தனது அதிருப்தியை இலங்கை அரசுக்கு எழுத்துமூலம் அறிவித்திருக்கிறது.

குற்றவிசாரணைப் பிரிவினால், ஏப்ரல் 14, 2020 அன்று கைதுசெய்யப்பட்ட ஹிஸ்புல்லா இன்றுவரை தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவர் கைது செய்யப்பட்டபோது எந்தவித காரணமும் கொடுக்கப்படவில்லை. 2019 உயிர்த்த ஞாயிறுக் குண்டுத்தாக்குதல்களுடன் தொடர்புடைய சான்று ஒன்று அவரிடம் பெறப்பட்டதன் காரணமாகவே அவர் கைதுசெய்யப்பட்டதாக ஊடகப் பேச்சாளர் கைது குறித்துத் தெரிவித்திருந்தார்.



ஹீஜாஸ் ஹிஸ்புல்லா உட்பட, உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் சம்பந்தப்பட்டவர்கள் எனக்குற்றஞ்சாட்டப்படும் அனைவரும், சர்வதேச சட்ட நியமங்களுக்கேற்ப கையாளப்படவேண்டும் என சர்வதேச நீதிபதிகள் ஆணையம் (International Commission of Jurists (ICJ)) இலங்கை அரசைச் சென்ற மாதம் கேட்டிருந்தது. அப்படியிருந்தும் அரசு அவ்வேண்டுகோளுக்குச் செவிசாய்க்கவில்லை.

தற்போது, ஐரோப்பிய ஒன்றியம் நேற்று (26) விடுத்திருக்கும் தனது ருவீட்டில், “சர்வதேச நீதிபதிகள் ஆணையம் கேட்டுக்கொண்டதுபோல், இலங்கை அரசாங்கத்தின் சர்வதேச மனிதாபிமான கடமைப்பாடுகளுக்கிணங்க, சகல பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டவரைமுறைகளையும் அது மீள்பரிசீலனை செய்யவேண்டுமென நாம் மீண்டும் வலியுறுத்துகிறோம்” எனக்கூறியுள்ளது.

ஹிஸ்புல்லா விடயத்தில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் 7 ,9வது பிரிவுகளின் பிரகாரம், கைதுசெய்யப்பட்டு 72 மணித்தியாலங்களுக்குள் தடுப்புக்காவலில் தொடர்ந்தும் வைத்திருப்பதற்கான கட்டளை வழங்கப்படாமை குறித்து சர்வதேச நீதிபதிகள் ஆணையம் விசனம் தெரிவித்துள்ளது.



அத்தோடு, ஹிஸ்புல்லாவுக்கு சட்டப்படி வழங்கப்படவேண்டிய சட்ட ஆலோசனைக்கான வழக்கறிஞர் சந்திப்பு ஏப்ரல் 15, 16 திகதிகளில், இரண்டு தடவைகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது. இச் சந்திப்புக்களின்போது வழக்கறிஞர்-கட்சிக்காரருக்குரிய பிரத்தியேகம் கொடுக்கப்படாமல், சகல உரையாடல்களும் சிங்களத்திலும், குற்றவிசாரணை அதிகாரியின் முன்னிலையிலும் மட்டுமே வழங்கப்படவேண்டுமென உத்தரவிடப்பட்டிருந்தது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலோடு சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டவர்கள் சார்பில் நீதிமன்றங்களில் ஹிஸ்புல்லா வாதாடி வந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Print Friendly, PDF & Email
Related:  கருணா விடுதலைப்புலிகளின் தலைவரின் இருப்பிடத்தைக்கூடக் காட்டித்தரவில்லை - சரத் பொன்சேகா