Spread the love

ராஜபக்ச கட்சிக்கு நியமன உறுப்பினர் எண்ணிக்கையை வழங்கினாரா?

இலங்கையின் தேர்தல் ஆணையமும், ஆணையாளர்களும் நடுநிலை வகிக்கவேண்டுமென்பதே சட்டமும், எதிர்பார்ப்பும். ஆனால் சமீபகாலமாக, ஆணையத்தின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவின் நடத்தை பலரையும் விசனத்துக்குள்ளாக்கி வருகிறது. ஒரு தென்னிலங்கை ஊடகம் அவருக்குச் சிறந்த நடிகர் விருது கொடுக்கலாம் என நையாண்டி பண்ணுகின்ற அளவுக்கு அவரது நடத்தை பரிகசிக்கப்படுகிறது.

ஊடகங்கள், எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு முன்னர் மிகவும் கறாரான அதிகாரிபோல் நடந்துகொள்ளும் அதே வேளை, ராஜபக்ச கட்சியினர் மற்றும் இராணுவ அதிகாரிகள் முன்னிலையில் அவர் பெட்டிப்பாம்பு போலச் சுருள்வதை அவதானிக்க முடிகிறது என தென்னிலங்கை அரசியல்வாதிகள் மத்தியில் பரிகசிக்கப்படுவதாக அறியப்படுகிறது.ஜனாதிபதி தேர்தலின்போது, தேர்தல் ஆணையம் பல சட்டதிட்டங்களை முன்வைத்து இறுதியில் மிகவும் அமைதியாகத் தேர்தல்கள் நடந்து முடிந்தன என சுய தம்பட்டமும் அடித்திருந்தது. ஆனால், அரச ஊடகங்கள் வெளிப்படையாகவே இனத்துவேசப் பேச்சுக்களையும், பொய்யான தகவல்களையும் வெளியிட்டு வந்தமை, பிக்குகள் தேர்தல் சாவடிகளுக்கு முன்னால் நின்று தாமரை மொட்டுக்களை வாக்காளர்கள் கைகளில் திணிப்பதன் மூலம் ராஜபக்சவுக்கு வாக்களிக்கும்படி கட்டாயப்படுத்தியமை பற்றி எதுவுமே செய்யாது, சாவடிகளுக்குள் கைத்தொலைபேசி கொண்டுசென்றவர்களை மட்டும் தடுக்க முடிந்தது பற்றி ஆணயம் தனது நேர்மை, நடுநிலமை பற்றிப் புகழ்ந்துகொண்டமை அதன் நடுநிலைமைத் தன்மையைக் கேள்விக்குள்ளாக்கியிருந்தது.

தற்போது, தேர்தல் திகதி நிர்ணயம் தொடர்பாக ஷவேந்திர சில்வா ஆணைய அலுவலகத்துச் சென்ற பிற்பாடு, ஜூன் 20 இல் தேர்தல் நடத்தப்படுவது அரசியலமைப்புக்கு முரணானது என்று தெரிந்திருந்தும், கோதாபய ராஜபக்சவின் பிறந்தநாளன்று தேர்தலை வைத்ததன்மூலம் ஆணையம் நாவிழந்து போனது.

ஆணையம் நிமிர்ந்து நிற்கத் திராணியுண்டென்றால், உச்சநீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற்றுக்கொண்டு வாருங்கள் என ராஜபக்சவுக்கோ அல்லது ஷவேந்திர சில்வாவுக்கோ கூறியிருக்கலாம். அதை விடுத்து, அரசியலமைப்புக்கு முரணானது என்று தெரிந்திருந்தும், திகதியை நிர்ணயித்துவிட்டு தற்போது உச்சநீதிமன்றத்தின் முன்னால், ‘ஜூன் 20 இல் தேர்தலை நடத்தமுடியாது’ என ஓலமிடும் அளவுக்குப் போயிருக்க வேண்டியதில்லை.அதைவிடக் கேவலமான நிலைமை என்னவென்றால், அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் தேர்தல் ஆணையத்தைச் சந்தித்து, ‘தேர்தல்களை நடத்த இது உகந்த காலமில்லை எனவும், நாடு பொருளாதார ரீதியில் மிகவும் மோசமான இடரைச் சந்தித்துவரும் நிலையில், தேற்தலுக்காக 13,000 மில்லியன் ரூபாய்களைச் செலவிடுவது அர்த்தமற்றது’ எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்கள்.

ஜனநாயகம் அவ்வளவு மலிவானதல்ல. எவ்வளவு அதிகமாக விலை கொடுக்கிறோமோ அவ்வளவுக்கு அதன் பெறுமதி உயரும்

தேர்தல் ஆணையத் தலைவர், மஹிந்த தேசப்பிரிய 13,000 மில்லியன் ரூபாய் தேர்தல் செலவுகள் பற்றி

அதற்குப் பதிலளித்த ஆணையத் தலைவர் ” ஜனநாயகம் அவ்வளவு மலிவானதல்ல. எவ்வளவு அதிகமாக விலை கொடுக்கிறோமோ அவ்வளவுக்கு அதன் பெறுமதி உயரும்” எனக் கூறியதாக ஒரு ஊடகம் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அனுசரித்து தேர்தல்களை வைத்துக்கொள்ளலாம் என அவர் கூறியதாகத் தெரிகிறது.

Related:  வாக்காளர்கள் குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒதுக்கப்படும் நேரத்தில் மட்டும் வாக்களிக்கலாம் - தேர்தல் ஆணையம்

இன்னுமொரு அதிசயமான விடயம் என்னவென்றால், ராஜபக்ச தரப்பிலுள்ள வாசுதேவ நாணயக்கார, தேர்தல்களை இப்போது நடத்தக்கூடாது என்பதற்காகத் தொடர்ந்தும் குரலெழுப்பி வருபவர். நடுநிலை நாயகமாக இருக்கவேண்டிய தேசப்பிரிய நாணயக்காரவிடம் கேட்டது “நீர் அரசாங்கத்தையா அல்லது எதிர்க்கட்சியையா பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்” என்று. அதற்கு வாசுதேவ தேர்தலை நடத்துவதற்கு ஒப்புக்கொள்வதாகல் பல்டியடிதுவிட்டதாகக் கூறப்படுகிறது.

நீர் அரசாங்கத்தையா அல்லது எதிர்க்கட்சியையா பிரதிநிதித்துவப்படுத்துகிறீர்

மஹிந்த தேசப்பிரியா, வாசுதேவ நாணயக்காரவிடம்

இதற்கிடையில், தேர்தல் திகதி நிர்ணயம் தொடர்பாக ஒரு முடிவை எட்டும்வரை, முன்னுரிமை வாக்குகள் பகிர்ந்தளிக்கப்படுவது தொடர்பாக கட்சிகளுக்கு அவ்விலக்கங்களைக் ஒடுப்பதில்லை என ஆணையம் தீர்மானித்திருந்தது. ஆனால் சமால், நமால், சானகா ஆகியோர் தமது சமூக வலைத் தளங்களில் அவ்விலக்கங்களை ஏற்கெனவே பிரசுரித்துவிட்டார்கள் என இதர கட்சிக்காரார் குழம்பியுள்ளதாகவும் கேள்வி. இதன் பின்னால் மஹிந்த தேசப்பிரிய உள்ளாரா எனக் கொழும்பு ஊடகம் ஒன்று கேள்வி எழுப்பியுள்ளது.

இதுபற்றி தேர்தல் ஒழுங்குமுறைகளைக் கண்காணிக்கும் பவ்ரல் அமைப்பும் மெளனம் காப்பது அதிகாரத்தின் இரும்புக்கரங்களின் வியாபகம் படிப்படியாக அதிகரித்து வருவதையும், தேர்தல் ஆணையத்தின் தலைவர் ராஜபக்சக்களின் பொறிக்குள் ஆழமாக விழுந்துவிட்டாரா என்ற சந்தேகத்தையுமே எழுப்புகிறது. (திலக் தெமட்டல்பிட்டிய / லங்கா ஈநியூஸ்)

Print Friendly, PDF & Email