ColumnsJekhan Aruliah

வளரும் வடக்கு: வியக்க வைக்கும் விவசாயம் – அமெரிக்கத் தமிழரின் விடா முயற்சி

ஜெகன் அருளையா

[டிசம்பர் 04 அன்று நண்பர் ஜெகன் அருளையா யாழ்ப்பாணத்திலிருந்து இட்ட முகநூல் பதிவின் தமிழாக்கம் இது]

ஜெகன் அருளையா
ஜெகன் அருளையா

ஜெகன் அருளையா தனது இரண்டு வயதில் இங்கிலாந்து சென்று வாழ்வின் கணிசமான காலத்தை அங்கே கழித்து உகந்த கல்வியுடனும் நிறைந்த மனதுடனும் யாழ் மீண்ட ஒரு தமிழன். கடந்த சில வருடங்களாக அவர் யாழ்ப்பாணத்தில் இருந்து வட மாகாணத்தைச் செழிப்பாக்கிவரும் தொழில் முயற்சிகள் பற்றிய ஊக்கம் தரும் கட்டுரைகளை எழுதி வருகிறார். அத்தோடு வடக்கின் மூலை முடுக்கெல்லாம் பயணம் செய்து ஆங்காங்கு காணப்படும் வளங்களையும் வசதியீனங்களையும் சுட்டிக்காட்டி நிலத்திலும் புலத்திலும் வாழும் தமிழர்களை வடக்கில் முதலீடு செய்யும்படி ஓயாமல் முழங்கிக்கொண்டிருக்கும் ஒருவர். லங்கா பிசினஸ் ஒன்லைன் என்ற பத்திரிகையில் வந்த அவரது கட்டுரை ஒன்றின் மூலம் அவரைத் தேடிப்பிடித்து அவரது ஊக்க முயற்சிகளைத் தமிழ் உலகுக்குக் கொண்டு வருவதில் ‘மறுமொழி’ தன் பங்கை ஆற்றுகிறது. அவர் இன்னும் முற்றாகத் தமிழ் கற்காதவர் ஆகையால் அவர் ஆங்கிலத்தில் எழுதிய முகநூல் பதிவுக்கு தமிழ் முகம் கொடுக்கிறது இக் கட்டுரை – சிவதாசன்

*****

நீங்கள் எதைச் செய்கிறீர்கள் என்பதல்ல எதை விற்கிறீர்கள் என்பதே உங்கள் வருமானத்தைத் தீர்மானிக்கிறது. இலங்கையில் வாழத் துடிக்கும் பல குடும்பங்களுக்கு உதவிகளைச் செய்ய விரும்பும் சக மனிதர்களும் அமைப்புகளும் அடிக்கடி மறக்கும் விடயமிது. விற்பது கடினம். பஞ்சத்திலிருந்து விடுபடுவதற்கான பாதையை அமைப்பதற்கே தனியாக வேறு உழைக்க வேண்டும். எப்படி விற்பனை செய்வது என்பதைப் பலரும் முன்கூட்டிச் சிந்திப்பதில்லை.

தயாரிப்பதைவிட விற்பதுவே முதலிடம் பெறுவது. குறைந்த வருமானச் சமூகங்களுக்கு உதவிசெய்ய விரும்புபவர்கள் முதற் கேட்கவேண்டிய கேள்வி: பணம் எங்கே போகிறது?

நேற்று யாழ் குடாநாட்டிலுள்ள உடுவில் என்ற சிறுநகரில் அமைந்திருக்கும் புதிய தொழிலகத்திற்குப் போனேன். எனது நண்பர் ஜஸ்டின் குமார் சமீபத்தில் இதை வாங்கியிருந்தார். எனது இன்னுமொரு நண்பரான சுகந்தன் சண்முகநாதனும் என்னோடு வந்திருந்தார். சுகந்தன் தனது சுய தொழில் முயற்சியின் மூலம் வடக்கின் உணவு மற்றும் பானங்களைச் சர்வதேச சந்தைகளில் நிரப்பிக்கொண்டிருப்பவர். வி.எஸ்.எஸ். விநியோகஸ்தர்கள் (VSS Distributors) என்ற பெயரில் இயங்கும் அவரது நிறுவனம் உணவுகளைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு சர்வதேச தரங்களையும், கட்டுப்பாடுகளையும் விதிக்கிறது. தரக்கட்டுப்பாட்டை மதிக்காத நிறுவனங்களிடமிருந்து VSS பொருட்களைக் கொள்முதல் செய்வதில்லை. சுகந்தனும் கனடாவில் சில வருடங்கள் பணியாற்றிவிட்டுத் தாயகம் திரும்பியவர்.

இலங்கைக்குத் திரும்பி வரும்வரை கலிபோர்ணியாவில் வாழ்ந்த ஜஸ்டின் குமார் ஏற்கெனவே வெற்றிகரமான ஒரு தொழிலதிபர். அவரது நிறுவனங்களில் ஒன்றான லாலன் ஈகோ-லேற்றெக்ஸ் (Lalan Eco-Latex) என்னும் நிறுவனம் மெத்தைகள், தலையணைகள் மற்றும் பஞ்சுமெத்தைககளைத் தயாரித்து உலகெங்குமுள்ள தளபாடத் தயாரிப்பாளருக்கு விநியோகித்து வருகிறது. அவரது நிறுவனத்துக்கான மூலவளம் இலங்கையின் ரப்பர் தோட்டங்களிலிருந்து பெறப்படுகிறது.

ஜஸ்டினின் விவசாய நிறுவனம் சொந்தமாகப் பண்ணைகளை வைத்துப் பராமரிக்கிறது. குடாநாட்டிலுள்ள அவரது பூர்வீக நிலமொன்றை அவர் இதற்காக ஒதுக்கியுள்ளார். ரொம் ஈஜேசீ மாங்காய் (TomEJC Mango), மிளகாய், பப்பாசி மர்றும் பலவகையான பழங்களையும் மரக்கறி வகைகளையும் இப்பண்ணையில் பயிரிடுகிறார். அத்தோடு அவருக்குத் தேவையான பழ, மரக்கறி வகைகளை அவரது நியமக் கட்டுப்பாட்டுக்கு ஏற்ற வகையில் பிரதேச விவசாயிகளிடமிருந்தும் வாங்கிக்கொள்கிறார். இவ்விவசாயிகளிடமிருந்து பொருட்களுக்கான நிர்ணயிக்கப்பட்ட விலைக்கும் தொகைக்கும் உத்தரவாதம் வழங்கப்படுகிறது. அடர்த்தியாகப் பயிரிடப்பட்ட மஞ்சள் தாவரங்கள் சுமார் 4 அடி உயரம் பசுமையாகவும் செழிப்பாகவும் வளர்ந்திருப்பதை நான் பார்த்தேன். மனதை நிறைவு செய்யும் அற்புதமானதொரு காட்சி.

ஜஸ்டின் தனது தொழிலகத்திற்கு புதிய இயந்திரங்களைத் தருவித்திருக்கிறார். வீச்சு விறைப்பாக்கி (blast freezer) என்னும் புதியதொரு சாதனம் மாம்பழம் மற்றும் இதர பழ, மரக்கறி வகைகளை மத்திய கிழக்கு, ஐரோப்பிய சந்தைகளில் வாடிப்போகாமல் அசலாக வைத்திருக்க உதவுகிறது. பழங்களை உரிப்பதற்கும், பொரிப்பதற்கும், அவிப்பதற்கும், பொடிசெய்வதற்கும் என்று பல இயந்திரங்களை இறக்குமதி செய்திருக்கிறார்.

வடமாகாணத்தை உலகின் உற்பத்திச்சந்தையாக்கவேண்டுமென்பதே ஜஸ்டினின் குறிக்கோள். இவரது நிறுவனத்தைப் போல பல நிறுவனங்கள் வடக்கில் இருந்தால் வடக்கின் பழங்களும், மரக்கறிகளும், கடலுணவுகளும் இங்கேயே பதம்செய்யப்பட்டு பொதி செய்யப்பட்டு உலகெங்கும் ஏற்றுமதி செய்யப்பட முடியும்.